"சோறு கண்ட இடம் சொர்க்கம்" - அன்னாபிஷேகத்தை தரிசிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள்
|சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று சிவாலயங்கள் தோறும் அன்னாபிஷேகம் நடைபெறும். அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தால் (அரிசி சாதம்) அபிஷேகம் செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அன்னாபிஷேக வழிபாடு மிக பிரசித்தி பெற்றது.
"சோறு கண்ட இடம் சொர்க்கம்" என்ற ஒரு பழமொழி உண்டு. இதற்கான அர்த்தத்தைத் தேடும்போது உலகிற்கே படியளக்கும் சிவபெருமானின் மகிமையும், அன்னாபிஷேகத்தின் பின்னணியும் புரிந்தது.
மும்மூர்த்திகளில் சிவபெருமானை போலவே பிரம்மனுக்கும் முன்பு ஐந்து தலை இருந்தது. அதனால் தானும் சிவனுக்கு நிகரானவர் என பிரம்மன் நினைத்தார். பிரம்மனின் அகந்தையை அடக்க பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஓர் தலையை சிவபெருமான் கொய்து பிரம்மனை நான்முகன் ஆக ஆக்கினார். சிவபெருமானால் துண்டிக்கப்பட்ட பிரம்ம தேவரின் தலையானது சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டு சிவனாருக்கு பிரம்மஹத்தி தோஷத்தை ஏற்படுத்தியது.
சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்ட பிரம்மனின் கபாலம் ஆனது எப்போதும் பசியால் அனத்திக் கொண்டிருந்தது. பிரம்மனால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்க பிரம்மனிடமே உபாயம் கேட்டார் சிவபெருமான்.
தனக்கு போதும் என்ற அளவுக்கு உணவு கிடைக்கும்போது சிவபெருமானை விட்டு நீங்கி விடுவதாக பிரம்ம தேவரின் கபாலம் சிவபெருமானிடம் கூறியது. சிவபெருமான் கபாலீஸ்வரர் எனும் திருநாமத்தோடு பிச்சாடனார் ஆக உருமாறி பூலோகம் வந்தார். அன்னமிட்டு நிறையும்போது மட்டுமே அந்த கபாலம் சிவபெருமானின் கையை விட்டு பிரியும் என்பது சிவனாருக்கு பிரம்மனால் கொடுக்கப்பட்ட சாபம் ஆகும்.
சிவ பெருமான் காசிக்கு செல்லும் போது அவருக்கு அன்னபூரணி அன்னமிடுகிறாள். அகிலம் காக்கும் அன்ன பூரணியின் அன்பினால் கபாலம் நிறைந்தது. இதை அடுத்து சிவபெருமான் கையில் ஒட்டி கொண்டு அவரை படாத பாடுபடுத்திய பிரம்மனின் கபாலம் கீழே விழுந்தது. சிவபெருமானுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது.
அன்னபூரணி அன்னை சிவபெருமானுக்கு அன்னமிட்ட நாள் ஐப்பசி மாதம் பவுர்ணமி திதி. இதனால் சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்ற ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
ஐப்பசி பவுர்ணமி அன்று சந்திரன் தனது சாபம் நீங்கி முழு பொலிவுடன் பதினாறு கலைகளும் நிரம்ப பெற்று முழு பொலிவுடன் உதித்து வருவார். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் சந்திர பகவானின் மனைவியர். இதில் ரோஹிணி நட்சத்திரத்தின் மேல் அதிக நாட்டமில்லாமல் சந்திரன் நடந்து கொண்டார். இதை தனது தந்தையிடம் ரோஹிணி புகார் செய்கிறாள். ரோஹிணியின் தந்தை உன் உடல் தேயட்டும்' என சந்திரனுக்கு சாபம் கொடுத்தார். சாபம் பெற்றதும் சந்திரனின் ஒவ்வொரு கலையாகக் குறையத் தொடங்கி, சந்திர பகவான் பொலிவிழந்தார். சந்திரன் தனது தவறை உணர்ந்து தமது சாபம் தீருவதற்காக திங்களூர் கைலாசநாதரை வணங்கினார். சிவபெருமான் அருளால் சாபம் நீங்க பெற்று சந்திரன் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று முழுமையாக பிரகாசித்தார்.
சந்திரன் பூமிக்கு மிக அருகில் தோன்றும் நாள் ஐப்பசி பவுர்ணமி ஆகும். சந்திரனை முடியில் சூடிய சிவபெருமானுக்கு அந்த சந்திரன் முழு பொலிவுடன் இருக்கும் நாளான ஐப்பசி பவுர்ணமி அன்று சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால் அன்று சிறப்பு வழிபாடு ஆக பிறை சூடிய பெருமான் ஆன சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
அன்னாபிஷேகத்தை தரிசித்தவருக்கு அந்த ஆண்டு முழுவதும் அன்னத்திற்கு குறைவு ஏற்படாது. நெல், அரிசி ஆகிறது. அரிசி, சோறாகிறது. சோறு தேகத்துக்குள் சென்று கலந்து வலிமையை அளிக்கிறது.இது போலவே ஆத்மா எவ்வளவு ஜன்மங்கள் எடுத்தாலும் பரமாத்மாவோடு கலந்தால் ஒன்றாகிவிடும் என்பதை உணர்த்தவே அன்னாபிஷேகம் நடைபெறுகிறது என்றும் சொல்லலாம். அரிசி என்ற வார்த்தையிலேயே அரியும் சிவனும் அடங்கியுள்ளனர்.
'சோறு கண்ட இடமே சொர்க்கம்' என்பதன் பொருள் சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஒவ்வொரு சோறும் ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கத்திற்கு சமம். நன்றாக சோற்றுப் பருக்கையை உற்று நோக்கினால் சோற்றுப் பருக்கையானது சிவலிங்க வடிவில் இருப்பதை காணலாம். ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தின் போது சிவபெருமானுக்கு சாற்றியிருக்கும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் நம்மால் சிவலிங்கத்தைக் காண முடியும். ஒரே சமயத்தில் கோடி சிவலிங்க தரிசனம் பல ஜென்ம பாவத்தை போக்கும் அன்னாபிஷேகம் நடைபெறும் அன்று ஒவ்வொரு சோற்றிலும் ஒரு சிவலிங்கத்தை காணலாம் என ஈஸ்வரன் வரம் கொடுத்து இருப்பதால் அந்த வரத்தின் பயனாக நாம் அன்று கோடான கோடி லிங்கத்தை பார்த்த பலனைப் பெறலாம்.
இந்த அன்னாபிஷேகத்தை தரிசிப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால்தான் 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்று கூறியுள்ளனர்.