ஆலய வரலாறு
கைகளில் ஆயுதங்கள் இன்றி யோக நிலையில் காட்சி தரும் ராமர்
ஆலய வரலாறு

கைகளில் ஆயுதங்கள் இன்றி யோக நிலையில் காட்சி தரும் ராமர்

தினத்தந்தி
|
2 Jan 2025 4:07 PM IST

ராமருக்கு எதிரில் அனுமன் பத்மாசனத்தில் அமர்ந்து பிரம்ம சூத்திர சுவடிகளை வாசிக்கும் கோலத்தில் காட்சி தருவது வேறெங்கும் காண முடியாத காட்சியாகும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள நெடுங்குணம் என்ற இடத்தில் ராமபிரான் மிக அரிதான திருக்கோலத்தில் யோக நித்திரை நிலையில் எழுந்தருளியுள்ளார்.

மகாபாரதத்தை இயற்றிய வியாசரின் மகன் சுகப் பிரம்ம மகரிஷி. இவர் கிளித் தலையும், மனித உடலும் கொண்டவர். ஒரு சமயம் சுகப் பிரம்ம மகரிஷி, இத்தலத்தில் இருந்து ராமபிரானை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தார். இலங்கையில் ராவணனை வதம் செய்து முடித்து திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், வழியில் இத்தலத்தில் சுகப் பிரம்ம மகரிஷியின் ஆசிரமத்துக்கு ராமபிரான் எழுந்தருளினார். சுகப்பிரம்ம மகரிஷி தான் பாதுகாத்து வைத்திருந்த அரிய சுவடி ஒன்றை, ராமனுக்கு வழங்கினார். அந்த ஓலைச்சுவடியை அனுமனிடம் கொடுத்து அவற்றைப் படிக்குமாறு பணித்தார் ராமன். அனுமனும் பத்மாசனத்தில் அமர்ந்து அதனைப் படிக்கலானார். அனுமன் வாசிக்க ராமபிரான் அதற்கு ஞான விளக்கம் தந்தார். பின்னர் சுகப் பிரம்ம மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று இந்தத் தலத்தில் ஒருநாள் தங்கினார் ராமபிரான்.

இத்தலத்தில் சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமனுக்கு சாஸ்திர விளக்கங்களை உபதேசித்த ராமன், அதே கோலத்தில் இங்கு எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.

இந்த ஆலயத்தின் ஐந்து நிலை ராஜகோபுரம் பிரமாண்டமான வடிவத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் வலது புறம் கல்யாண மண்டபமும், இடப்புறம் பதினாறு கால் ஊஞ்சல் மண்டபமும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. வெளி திருச்சுற்றில் பலிபீடம், கொடிமரம், இரண்டாம் மதில், ஐந்து நிலை கோபுரம் காட்சி தருகின்றன.

கருவறையில் வலப்புறத்தில் லட்சுமணன் நின்ற கோலத்தில் வில் அம்போடு காட்சி தருகிறார். இடதுபுறத்தில் சீதாபிராட்டியார் அமர்ந்த திருக்கோலத்தில் வலது கையில் தாமரை ஏந்தி காட்சி தருகிறார். நடுவில் ராமபிரான் பத்மாசனத்தில் அமர்ந்து தனது வலது கரத்தினை சின்முத்திரை அமைப்பில் மார்பில் வைத்தபடி, கண்களை மூடி யோக நிலையில் காட்சி தருவது தனிச் சிறப்பு. ராமபிரானின் கைகளில் ஆயுதங்கள் ஏதுமில்லை. ராமருக்கு எதிரில் அனுமன் பத்மாசனத்தில் அமர்ந்து தனது கரங்களில் பிரம்ம சூத்திர சுவடிகளை ஏந்தி வாசிக்கும் கோலத்தில் காட்சி தருவதும் வேறெங்கும் காண முடியாத காட்சியாகும்.

இத்தலத்தின் உற்சவர் விஜயராகவப் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியோடு காட்சி தருகிறார். அர்த்த மண்டபத்தின் வடப்புறம் உள்ள மேடை மீது விஷ்வக்சேனர், ஆளவந்தார் மற்றும் ஆழ்வார்கள் சிலாரூபத்தில் காட்சி தருகின்றனர். வெளி திருச்சுற்றின் வடமேற்கில் கிழக்கு நோக்கிய திசையில் செங்கமலவல்லி தாயார் சன்னிதி அமைந்துள்ளது. யோக ராமர் திருக்கோவிலின் நேர் எதிரே சஞ்சீவி அனுமன் சன்னிதி உள்ளது. இந்த அனுமன் சன்னிதியில் இரட்டை ஆஞ்சநேயர் காட்சி தருவதும் ஒரு அபூர்வ அமைப்பாகும்.

இத்தலத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி, கல்யாண வேங்கடேசப் பெருமாள் சன்னிதி முதலான சன்னிதிகளும் அமைந்துள்ளன. இத்தலத்தின் திருச்சுற்று மண்டபத்தின் வடக்குப்பகுதியில் விகனசர் சன்னிதி உள்ளது. விகனசர் தன் பின்னிரு கரங்களில் ஆழியும் சங்கும் கொண்டும், முன் வலக்கரத்தினை சின் முத்திரையில் வைத்தும், முன் இடக்கரம் அஸ்த முத்திரையும் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

இத்தலத்தின் தீர்த்தம் சுகர் தீர்த்தம். இது சூரிய தீர்த்தம் என்றும் வழங்கப்படுகிறது. ஆடி மாதத்தில் பவித்ரோத்ஸவமும், வைகாசி மாதத்தில் கருடசேவை, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி விழாவும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள யோகராமரை தரிசிப்பவர்களுக்கு ஞானம் கைகூடும், இல்லறம் செழிக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும். வந்தவாசியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் உள்ளது, நெடுங்குணம் திருத்தலம்.

மேலும் செய்திகள்