< Back
ஆலய வரலாறு
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது..?
ஆலய வரலாறு

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது..?

தினத்தந்தி
|
8 Feb 2025 7:32 AM IST

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

திருவண்ணாமலை,

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து வழிபடுவது மிக முக்கியமான வழிபாடாக உள்ளது. உலகிற்கு தலைவனான ஈசனே இங்கு மலையாக வீற்றிருப்பதாக சொல்லப்படுவதால் இந்த மலையை வலம் வந்து வணங்கினால், கைலாயத்தை வலம் வந்து வணங்கியதற்கு சமமாக கருதப்படுகிறது. சிவ பெருமானையே வலம் வந்து வணங்கும் பிரார்த்தனை என்பதால் இது தரும் புண்ணிய பலன்கள் மிக மிக அதிகமானதாகும்.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதன்படி வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.59 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் 12-ந் தேதி (புதன்கிழமை) இரவு 8.16 மணிக்கு நிறைவடைகிறது. 11-ந் தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வருகிற 11-ந் தேதி தைப்பூசம் வருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், பவுர்ணமி கிரிவலம் செல்லவும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்