திருமண தடை நீக்கும் திருப்பாச்சூர் வாசீஸ்வரர்
|கோடாரியால் வெட்டியதால் ஏற்பட்ட தழும்புகளை இந்த ஆலயத்தின் லிங்கத் திருமேனியில் இன்றும் காணலாம்.
திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் சமேத வாசீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த உப கோவிலாகும். வாசீஸ்வரர், பசுபதீசுவரர், பாசூர்நாதர், உடையவர் போன்ற பல்வேறு பெயர்களால் இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். அம்பாள் தங்காதலி (தம் காதலி), பசுபதி நாயகி, மோகனாம்பாள், பணை முலை நாச்சியார் போன்ற பெயர்களைக் கொண்டு திகழ்கிறார். இவ்வாலய தீர்த்தம், சோம தீர்த்தம், மங்கள தீர்த்தம். தல விருட்சமாக மூங்கில் உள்ளது.
சோழ மன்னன் கரிகாலன் இக்கோவிலை கட்டியதாக நம்பப்படுகிறது. தங்காதலி தேவியின் பெயரால் இந்த இடம் 'தங்காதலிபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் மற்ற வரலாற்றுப் பெயர்கள் மாயாபுரி, அபயபுரம், மாணிக்கபுரி மற்றும் சோழபுரம் ஆகும். புராணத்தின்படி பண்டைய காலங்களில் இந்தப் பகுதி மூங்கில் மரங்களால் அடர்த்தியாக மூடப்பட்டு இருந்தது. தினமும் பால் சுமந்து வரும்போது ஆடு மேய்ப்பவர் ஒரு புதரின் மீது தவறி ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழுவது வாடிக்கையாகி போனது. வழக்கமான பால் இழப்பால் கோபம் அடைந்த அவர் ஒருநாள் புதர்களை அகற்ற முடிவு செய்தார். கோடாரியால் புதர்களை வெட்டியபோது ரத்தம் வழிந்த நிலையில் லிங்கம் ஒன்று அவர் கண்ணில் தென்பட்டது.
இதைக் கண்டு பயந்து போன ஆடு மேய்ப்பவர், இது பற்றி அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். அவர்கள் மன்னருக்கு தகவல் கொடுத்தனர். அங்கே ஒரு கோவில் கட்ட அரசன் கட்டளையிட்டான். கோடாரியை பயன்படுத்தியதால் லிங்கத்தில் ஏற்பட்ட தழும்புகளை இன்றும் காணலாம். மேலும் லிங்கம் சற்று இடது பக்கம் சாய்ந்துள்ளது. லிங்கத்தின் மீது வடு இருப்பதால் இந்த லிங்கம் மனித கைகளால் தொடப்படாமல் பூஜை செய்யப்படுகிறது. இங்குள்ள இறைவன் மூங்கில் காட்டில் காணப்பட்டதாக நம்பப்படுவதால் அவருக்கு ஸ்ரீபச்சுர நாதர் என்றும், அந்த இடம் திருப்பாச்சூர் என்றும் அழைக்கப்படுகிறது.
ஒருமுறை குரும்பன் என்ற உள்ளூர் தலைவன், சோழ மன்னன் கரிகாலனுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தத் தவறினான். குரும்பன், காளி தேவியின் தீவிர பக்தன். நிலுவைத் தொகையை மீட்பதற்காக மன்னன் தன் பகுதிக்கு படையெடுத்த போது, அரசனையும் அவனது படையையும் தோற்கடிக்க உதவும்படி காளியிடம் தலைவன் வேண்டிக் கொண்டான். மன்னன் சிவபக்தனாக இருந்ததால் சிவபெருமானிடம் உதவிக்காக வேண்டினான். சிவபெருமான் காளியை கட்டுப்படுத்தவும், கட்டவும் நந்தியை அனுப்பினார். நந்தி காளியை தோற்கடித்து அவளை தங்கச் சங்கிலியால் கட்டினார். இந்த சம்பவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்தக் கோவில் காளி தேவியின் கால்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ளன. இவர் சொர்ண காளி என்று அழைக்கப்படுகிறார். பவுர்ணமி தினங்களில் மாலை நேர பூஜைகள் நடைபெறுகிறது.
பார்வதி தேவி இங்கு சிவனை வழிபட்டதாக ஐதீகம். அவளது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அவளை தன் காதலி ( பிரியமானவள்) என்று அழைத்ததாக நம்பப்படுகிறது. வேதங்களை திருடியதாக கருதப்படும் அசுரர்களான மது மற்றும் கைடபரை கொன்றதன் மூலம் தனக்கு ஏற்பட்ட பாவத்தை போக்க மகாவிஷ்ணு இந்த கோவிலில் சிவபெருமானை வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. இங்கு சிவபெருமான், மகாவிஷ்ணுவின் பாவங்களை போக்கியதால் `பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரர்' என்றும் போற்றப்படுகிறார். சந்திரனும், கவுசிக முனிவரும் இக்கோவிலில் சிவபெருமானை வழிபட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கோவிலின் நடுவில் உள்ள ஒரு மண்டபத்தில் 11 விநாயகர் கொண்ட குழு உள்ளது. ஏகாதச விநாயகரான (ஏகாதசம் என்றால் சமஸ்கிருதத்தில் 11), இவர்கள் கோவிலின் மற்றொரு தனி சிறப்பாகும்.
பிரார்த்தனை
திருமண ஒற்றுமைக்காக பக்தர்கள் தங்காதலி தேவியிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். மேலும் பக்தர்கள் தங்கள் திருமண திட்டங்களில் இருக்கும் தடைகளை நீக்க பிரார்த்தனை செய்கிறார்கள்.
இக்கோவிலில் கால சந்தி பூஜை, உச்சிகால பூஜை, சாயரட்சை பூஜை, அர்த்த சாம பூஜை என நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக வந்து அரக்கோணம் செல்லும் சாலையில் திருவள்ளூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ், ஷேர் ஆட்டோ மூலம் வந்து இக்கோவிலை அடையலாம்.