பக்தையின் கவலை போக்க தாயாக வந்த இறைவன்
|தாயுமானவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் செட்டிப்பெண் மருத்துவம் என்ற திருவிழா நடந்து வருகிறது.
தன்னையே நம்பித் துதித்த ஒரு பெண்ணுக்கு, அவளது பேறு காலத்தில், தாயாக உருவெடுத்து பிரசவம் பார்த்தார் இறைவன். அவரே தாயுமானவர். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் தாயுமானவர்.
தல புராணம்
சிவபெருமானை தரிசிக்க வாயுபகவானும், ஆதிசேஷனும் கயிலைக்கு வந்தார்கள். சிவபெருமானைச் சூழ்ந்திருந்த தேவர்கள் ஆதிசேஷனை பாராட்டு மழையால் குளிர்வித்தனர். அவர்களது புகழாரம் வாயுபகவானுக்குப் பிடிக்கவில்லை.
'நீ என்ன அவ்வளவு உயர்ந்தவனா?' என்று கோபத்தோடு ஆதிசேஷனிடம் வாயுபகவான் கேட்டார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
'இந்தக் கயிலாய மலையை நீ கட்டிப்பிடி நான் அதை அசைத்துக் காட்டுகிறேன்' என்று வாயுபகவான் சொன்ன மறுவினாடி ஆதிசேஷன் கயிலாய மலையை தன் பெரிய உடலால் இறுகக் கட்டிப்பிடித்தார். உடனே வாயுபகவான் தன் பலத்தைக் காட்ட அந்த மலையை வாயால் ஊதினார். மறுகணம் அந்த கயிலை மலையில் இருந்து மூன்று மலைப்பகுதிகள் பிய்த்துக் கொண்டு பறந்தன.
அந்த மூன்றில் ஒன்றுதான் சிராமலை. தற்போது திருச்சிராப்பள்ளி என்று அழைக்கப்படும் நகரம். இந்த மலையில் தான் தாயுமானசுவாமி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். மற்ற இரண்டு மலைப்பகுதிகள் காளஹஸ்தியும், திருக்கோணமலையும் ஆகும். திருச்சி தாயுமானவர் கோவில், தென்கயிலாயம் எனவும் அழைக்கப்படுகிறது. திரிசிராமலை, திரிசிரபுரம், திரிசிரகிரி, முத்தலைமலை, பிரமகிரி என்ற வேறு பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.
மூன்று உச்சிகள்..
இம்மலை மூன்று உச்சிகளைக் கொண்டது. தாயுமானவர் திருக்கோவில், மட்டுவார் குழலம்மை திருக்கோவில், உச்சிப்பிள்ளையார் திருக்கோவில் என்பவையே அவை. நகரின் எல்லையில் இருந்தும், எல்லைக்கு அப்பாலிருந்தும் இந்த மலைக் கோவிலை கண் குளிர தரிசிக்கலாம்.
அடிவாரத்தில் அருள்புரியும் மாணிக்க விநாயகரை தரிசனம் செய்தபின் மேலே நடந்தால், மவுன சுவாமிகள் மடம், முருகன் சன்னிதி, நூற்றுக்கால் மண்டபம், விநாயகர், ஆறுமுகன், அறுபத்திமூவர், செவ்வந்தி விநாயகர், மட்டுவார் குழலம்மை ஆகியோரை தரிசிக்கலாம். தொடர்ந்து தாயுமானவரையும் தரிசனம் செய்யலாம்.
திருமலைப்பெருமாள் அடிகள், மாத்ருபூதேஸ்வரர், செவ்வந்திநாதர் என்ற பெயர்களும் தாயுமானவருக்கு உண்டு. தாயுமானவர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறையில் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இறைவன் மேற்கு நோக்கி உள்ளதால் எதிரே நந்தி கிடையாது. ஆனால் தெப்பக்குளம் அருகே நந்திக்கு தனிக்கோவில் உள்ளது.
தாயுமானவர் ஆலயத்தில் ஆயிரங்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், பதினாறுகால் மண்டபம், சித்திரமண்டபம், மணிமண்டபம் என்று சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய மண்டபங்கள் பல உள்ளன.
இறைவி அருள்மிகு மட்டுவார் குழலம்மை, மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். சுந்தர குந்தளாம்பிகை என்பது இறைவியின் இன்னொரு பெயர்.
தாயாக வந்த இறைவன்
பூம்புகாரில் வணிகர் குலத்தில் பிறந்த ரத்தினகுப்தன் என்பவனுக்கு, நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லை. தொடர் இறை வழிபாட்டால், ஒரு அழகிய புதல்வியைப் பெற்றான். குழந்தைக்கு ரத்தினாவதி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.
ரத்தினாவதி மண பருவம் எய்தினாள். திரிசிராமலையில் வாழ்ந்து வந்த தனகுப்தன் என்ற வணிகனுக்கு தன் பெண்ணை, ஏராளமான சீர் வரிசைகளுடன் திருமணம் செய்து அனுப்பிவைத்தான் ரத்தின குப்தன்.
தனகுப்தனுடன் திரிசிராமலை வந்த ரத்தினாவதி, மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்தி வந்தாள். திரிசிராமலையில் அமர்ந்து அருள்பாலிக்கும் செவ்வந்திநாதரை நாள்தோறும் வழிபட்டு வந்தாள். இறைவன் அருளால் தாயாகும் பேறு அடைந்தாள். பேறுகாலம் நெருங்கியது. இத்தகவலை பூம்புகாரில் இருக்கும் தன் தாய்க்கு தெரியப்படுத்தி அவளை உடனே புறப்பட்டு வரும்படி சொல்லி அனுப்பினாள் ரத்தினாவதி. தாயும் பூம்புகாரிலிருந்து புறப்பட்டாள் மகளுக்கு வேண்டிய மருந்துகள், எண்ணெய் போன்ற பொருட்களுடன் பூம்புகாரில் இருந்து திரிசிராமலைக்கு பயணமானாள் அந்தத் தாய். காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எனவே, அந்த அன்னையால் திரிசிராமலைக்கு வர இயலவில்லை. மகள் ரத்தினாவதியோ தன் தாயின் வரவை நோக்கி வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள். தாய் இன்று வருவாள், நாளை வருவாள் என மகள் காத்திருக்க காவிரியின் வெள்ளமோ தாயின் வருகையை தாமதப்படுத்தியது. மகளோ ஏக்கம் கொண்டாள். தாயைக் காணவில்லையே எனக் கவலைக் கொண்டாள்.
தான் வணங்கும் செவ்வந்தி நாதரிடம் தன் கவலையை கண்ணீருடன் முறையிட்டாள். இறைவன் தனது பக்தையின் கண்ணீரைக் கண்டார். அவர் மனம் கரைந்தது. உடனே, ரத்தினாவதியின் தாய்வேடம் பூண்ட செவ்வந்திநாதர், ரத்தினாவதியின் வீட்டை அடைந்தார். தாயைக்கண்ட மகளின் மனமெல்லாம் பூரிப்பு. அவளது கவலை எல்லாம் பறந்தோடியது. தாயாக வந்த இறைவன் ரத்தினாவதியுடன் தங்கினார். உரிய நேரம் வந்தது. மகளுக்கு தாய் மருத்துவம் பார்த்தாள். மகள் ஓர் ஆழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். மகளோடு சில நாட்கள் தங்கிய தாய் மகளையும், சேயையும் கண்போல பராமரித்தார்.
இதற்கிடையில் காவிரியில் வெள்ளம் வடிந்தது. உண்மையான தாய் ஆற்றைக் கடந்து தன் மகள் வீட்டிற்கு வந்தாள். அவளைக் கண்ட ரத்தினாவதி திகைத்தாள். இரண்டு தாய்களா? இதில் உண்மையான தாய் யார்?
அவளது குழப்பம் நீங்குவதற்குள், இறைவன் மறைந்தார். வானில் இறைவி மட்டுவார் குழலம்மையுடன் இடபவாகனத்தில் தோன்றி தாய்க்கும், மகளுக்கும் காட்சியளித்தார். அதுமுதல் திரிசிராமலை செவ்வந்திநாதர், தாயுமானவர் என்ற திருப்பெயரோடு அழைக்கப்படலானார். இறைவனை மனமுருக வேண்டி வழிபட்ட ரத்தினாவதியும், தல அடியார்களுள் ஒருவராக இத்தலத்தில் விளங்குகிறாள்.
திருவிழாக்கள்
இந்த ஆலயத்தில் திருவிழாவிற்கு பஞ்சமில்லை. பங்குனி மாதத்தில் தெப்பத் திருவிழாவும், சித்திரையில் தேர்த் திருவிழாவும், வைகாசியில் வசந்தத் திருவிழாவும், ஆடியில் ஆடிபூசமும், புரட்டாசியில் நவராத்திரியும், ஐப்பசியில் கந்தசஷ்டியும் சிறப்பாக நடைபெறுகின்றன.
தாயுமானவர் ஆலயத்தின் மேற்புறம் மைய மண்டபத்துடன் கூடிய தெப்பக்குளம் உள்ளது. இது பிரம்மதீர்த்தம் என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இங்கு தெப்போற்சவம் வெகுசிறப்பாக நடைபெறும். இக்குளத்தை வெட்டியவர் 16ம் நூற்றாண்டில் திருச்சியை ஆண்ட விசுவநாத நாயக்கர் என்று சொல்லப்படுகிறது.
பாதாள ஐயனார்
இறைவியின் சன்னிதிக்கு எதிரே ஒரு பாதாள அறையில், பாதாள ஐயனார் அருள்பாலிக்கிறார். பயிர்கள் செழித்து வளர, மழை பொழிய இவரை வணங்கினால் பயன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் செட்டிப்பெண் மருத்துவம் என்ற திருவிழா நடந்து வருகிறது. ரத்தினாவதியின் பரம்பரையினரே அந்த விழாவை இன்றும் நடத்தி வருகின்றனர். சுகப்பிரசவம் ஆகவிரும்பும் பெண்கள் தாயுமானவரை வணங்கினால் தாங்கள் விரும்பியபடி சுகப்பிரசவம் உண்டாகும் என பக்தர்கள் பெரிதும் நம்புகின்றனர்.
உறையூரில் மக்களின் காவல் தெய்வமாக, கூரையில்லா கோவிலில் அன்னை வெக்காளியம்மன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். பவுர்ணமி நாட்களில் மலைக்கோட்டையைச் சுற்றி கிரிவலம் நடக்கிறது.
தாயாக உருமாறி தனது பக்தையான செட்டிப் பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த தாயுமானவரை வழிபடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.