திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்
|திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது.
திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இங்கு முருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் சிறப்பு மிக்கதாக கருதப்படுவது கந்தசஷ்டி திருவிழாவாகும்.
இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் உள்ள தற்காலிக கொட்டகைகளில் பக்தர்கள் விரதம் இருந்து வருகிறார்கள்.
விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜை, யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் சுவாமி, வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
மேலும் சுவாமி-அம்பாள்களுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதுபோல் 5-ம் நாளான நேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று பக்தர்கள் சிலர் தங்களது நேர்த்திக்கடனுக்காக சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், அவ்வையார், நாரதர் உள்ளிட்ட சாமி வேடங்கள் அணிந்து கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தனர்.
இந்நிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். கடற்கரையில் சுவாமி, சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி- அம்பாளுக்கு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகாரத்தில் உலா வந்து கோவிலை சேர்ந்த பின் அங்கு சாயாபிஷேகம் நடக்கின்றது.
இந்நிலையில் சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் கம்பு மற்றும் கம்பிகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது.
7-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. 5.30 மணி அளவில் தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார். காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் மாலைமாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.