சித்தர்களால் உருவாக்கப்பட்ட சிவாலயம்
|பகளவாடி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பன்னிரண்டு ராசிகளுக்கும் உரிய கோவில் என்பதால், 'ராசிக்கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா பகளவாடி அருகே உள்ளது சத்திரம் அம்மாபாளையம் கிராமம். காவிரியின் வடகரையில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்திலும், துறையூர் நகரில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த கிராமம் முற்காலத்தில் அடர்த்தியான காடுகளை கொண்டிருந்தது. அக்காலத்தில் இந்த கிராமத்தில் நாவல் மரங்கள் அதிக அளவில் இருந்ததால், இந்த இடத்திற்கு 'ஜம்புவனம்' என்று பெயரிட்டு அழைக்கப்பட்டது.
சித்தர்களால் உருவானது
இந்த வனத்திற்கு அருகில் இருக்கும் மலைகளில் அற்புதமான குகைகளும் உள்ளன. அந்த குகைகளில்தான் சித்தர்களும், மகான்களும் தங்கி தவத்தினை செய்து சித்தி பெற்றுள்ளார்கள். அதற்கு சான்றாக தற்போதும் இந்த குகைகளை அங்கு காணலாம். முந்தைய காலகட்டத்தில் அந்த கிராமம் மிகவும் செழிப்பாகவும், அங்கு வசித்த மக்கள் மிகுந்த மனநிறைவோடும் வாழ்ந்து இருக்கின்றனர். காலமாறுதல்களால் அங்கு வசித்து வந்த மக்கள் அந்த பகுதியை விட்டு நகரங்களை நோக்கி குடியேற தொடங்கி விட்டனர்.
அந்த புராதனமான கிராமத்தில்தான் சித்தர்களால் உருவாக்கப்பட்ட அரிய பொக்கிஷமான ஒரு சிவன் கோவில் இருந்தது. அங்கு வசித்து வந்த மக்கள் அந்த கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்ததாலும், வேற்று மதத்தினர் படையெடுத்ததாலும், அந்த எழில்மிகு கிராமமும், சித்தர்களால் உருவாக்கப்பட்ட சிவபீடமும் (சிவன் கோவில்) சிதைந்துவிட்டன.
பிறகு சில காலம் கழித்து, அந்த புண்ணிய பூமியை அறிந்த சிவனடியார்களும், சான்றோர்களும் அந்த சிவபீடத்தை மீண்டும் உருவாக்கும் பெரு முயற்சியில் ஈடுபட்டனர். அந்த முயற்சியில் சிவபெருமானுக்கும், அன்னை பராசக்திக்கும் அடித்தளம் வரை எழுப்பினார்கள். அதுவும் ஏதோ ஒரு காரணத்தினால் தடைபட்டு நின்று விட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் கருங்கற்களால் கட்டப்பட்ட கருவறைகள் இருந்து, சரியான பராமரிப்பும், தகுந்த கவனிப்பும் இல்லாததால் காலப்போக்கில் அதுவும் சிதிலம் அடைந்தது.
முந்தைய காலங்களில் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள், இந்த சிறப்பான சிவ பீடத்தின் மகிமையை அறிந்து இங்கு வந்து அடியார்களையும், சான்றோர்களையும் சந்தித்து ஆசி பெற்று பொதுமக்களும், சிவனடியார்களும் தங்கும் வண்ணம் மண்டபத்தினை அமைத்து அன்னதானமும் செய்துள்ளார்.
தெய்வ பிரசன்னம்
இந்த சிவ பீடத்திற்கு அருகில் ஒரு அழகிய குளமும் அமைந்துள்ளது. கால மாறுதல்களாலும், மக்கள் அங்கிருந்து வெளியேறியதாலும் சிவ பீடம் நிறைவு பெறாமல் நின்று போனது. மேலும் அங்கிருந்த அன்ன சத்திரமும், மண்டபங்களும் கூட சிதிலம் அடைந்தன. இந்நிலையில் அந்த கிராமத்தில் வசித்த முன்னோர்களின் கனவிலும், கிராமத்து மக்கள் பலரின் கனவிலும் சிவபெருமான் தோன்றினார். அவர், 'இங்குள்ள சிவபீடத்தின் பெருமையை, உலக மக்கள் அறியும் காலம் வந்து விட்டது' என்று கூறியுள்ளார். இதனை வைத்து அப்பகுதி மக்கள், தெய்வ காரியங்களில் உண்மை அறியும் முயற்சியாக கடந்த தெய்வ பிரசன்ன ஜோதிடம் பார்த்தனர்.
அந்த பிரசன்னத்தில் குறிப்பிட்ட இடத்தில் சித்தர்கள் வாழ்ந்ததும், சித்தர்களால் உருவாக்கப்பட்ட சிவபீடம் இருந்ததும் ஊர்ஜிதம் செய்யப்பட்டது. படையெடுப்பினாலும், கலவரங்களாலும் அந்த சிவபீடம் சிதைந்து போனதும் தெரியவந்தது. அந்த சிவபீடத்தின் முக்கிய பூஜை பொருட்கள் அங்குள்ள ஒரு கிணற்றில் புதைந்திருப்பதும் கண்டறியப்பட்டது. அந்த சிவபீடத்தில் சிவபெருமானின் அருளும், அன்னை பராசக்தியின் அருளும் நிறைந்து இருப்பதையும் ஊர் மக்கள் உணர்ந்து கொண்டனர். இதையடுத்து அந்த சிவபீடத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்ட மக்கள் அதில் வெற்றி பெற்றனர். சிதிலமடைந்திருந்தும், பாதியில் நின்று போயிருந்த பணியை முடுக்கி விட்டு கோவில் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பயனாக கடந்த 2007-ம் ஆண்டில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.
ஏகாம்பரேஸ்வரர் கோவில்
இந்தக் கோவில் காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. சிவனுக்குரிய கருவறையானது, வட்ட வடிவமாக அமைந்துள்ளது. அதன்மேல் தாமரை மலரின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் பீடத்தை எட்டு யானைகளும், எட்டு நாகங்களும் தாங்கியிருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்குமேல் தேவகணங்களும், முனிவர்களும் அந்த பீடத்தை சார்ந்திருப்பதாக காட்சிகளும் செதுக்கப்பட்டு உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, மேல் சுற்றில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டு உள்ளது. பன்னிரண்டு ராசிகளுக்கும் உரிய கோவில் என்பதால், இது 'ராசிக்கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பீடத்தின் மேல் 8 பட்டை வடிவத்தில் சிவபெருமானின் கருவறையும், அதன் முன்னால் அர்த்த மண்டபமும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பானது சிவபெருமான் திருத்தேரின் மேல், பஞ்சாசனத்தில் மேரு மலையில் மகாமணி மண்டபத்தில் அமர்ந்து ஊஞ்சலாடுவதாக சொல்லப்படுகிறது. இந்த அமைப்பு உலகில் எங்கும் இல்லாததாகும்.
கோவில் அமைப்பு
அருகில் உள்ள அம்மனின் கருவறை நீண்ட சதுரத்தில் சிறந்த சிற்ப வேலைப் பாடுகளுடன் தாமரை தளத்தில் வரி வர்க்கங்களுடன் அமைந்துள்ளது. இப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த சித்தர் பீடத்தை திருப்பணிகள் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் முயற்சியின் காரணமாக சிவபீடமானது, மெல்ல மெல்ல பல திருப்பணிகள் செய்யப்பட்டு சிவபெருமானுக்கும், அன்னை பராசக்திக்கும், விநாயகருக்கும், முருகனுக்கும், மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமிக்கும் பீடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த கோவிலில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. பிரதோஷம், அன்னாபிஷேகம் உள்பட அனைத்து சிவன் கோவில்களிலும் நடைபெறும் விழாக்கள் இந்த கோவிலிலும் நடைபெற்று வருகிறது. திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் பஸ்சில் ஏறி கரட்டாம்பட்டியில் இறங்கி அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த சித்தர் சிவபீடத்தை அடைந்து சித்தர்களின் ஆசியையும், காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரரின் ஆசியையும் பெற்று செல்லலாம்.
மகான்கள் தவம் செய்த அற்புத குகை
இந்த கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பறந்த மலை உள்ளது. அந்த மலை சப்த கன்னிமலை என்று அழைக்கப்படுகிறது. அந்த மலையின் உச்சியில் மகான்கள் தவம் செய்த அற்புத குகையும் உள்ளது. அந்த குகையை சார்ந்து அற்புதமான ஒரு நீர் சுனையும் உள்ளது. அதன் அருகில் சப்தமாதாக்களுக்கு சன்னிதியும் உள்ளது. இப்போதும் அங்கு சப்தமாதாக்கள் அரூபமாகவும், உருவமாகவும் காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.
சீதாதேவி நீராடிய தீர்த்த குளம்
சித்தர் சிவபீடத்தின் அருகில் அக்னி மூலையில் ஒரு குளம் அமைந்து உள்ளது. இந்த குளத்திற்கு ஒரு வரலாறு உள்ளது. ராமாவதார காலத்தில் சீதையை ராவணன் சிறையெடுத்து சென்ற பின்னர் ஸ்ரீராமர், ராவணன் மீது படையெடுத்து ராவணனை அழித்து அன்னை சீதாதேவியை மீட்டார். அப்போது சீதாதேவி தூய்மையானவர்தான் என்று உலக மக்கள் அறியும் பொருட்டு ஸ்ரீராமர், சீதா தேவியை அக்னி பிரவேசம் செய்ய சொன்னார். ஸ்ரீராமபிரானின் வாக்கிற்கு இணங்க சீதா தேவியும் அக்னி பிரவேசம் செய்து தான் தூய்மையானவள்தான் என உலகுக்கு நிரூபித்தார்.
அந்த அக்னி பிரவேசத்திற்கு பிறகு அன்னை சீதாதேவி இங்குள்ள குளத்தில்தான் நீராடி இந்த பீடத்தில் அமைய பெற்றிருந்த சிவபெருமானை வழிபட்டு அருளை பெற்றார் என்று வரலாற்றில் உள்ளது. இந்த சிவபீடத்திற்கு வந்து சிவபெருமானை தரிசித்து அங்கு அமையப்பெற்றுள்ள தீர்த்த குளத்தில் உள்ள தீர்த்தத்தை சிரசிலிட பல ஜென்ம பாவங்கள் நீங்கி கிரக தோஷங்கள் நீங்கி நலம் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த குளத்தில் தீபங்களை ஏற்றி வைக்க ஏதுவாக அழகிய மாடங்களும் உள்ளது.