< Back
ஆலய வரலாறு
திருஞானசம்பந்தருக்காக பூஜை நேரத்தையே மாற்றிய இறைவன்
ஆலய வரலாறு

திருஞானசம்பந்தருக்காக பூஜை நேரத்தையே மாற்றிய இறைவன்

தினத்தந்தி
|
20 Dec 2024 7:17 PM IST

தன் அடியவர்களுடன் படகில் ஏறிய திருஞானசம்பந்தர், இறைவனை நினைத்து பதிகம் பாடியதையடுத்து, துடுப்பு இல்லாமல் ஓடம் செல்லத் தொடங்கியது.

சிவபெருமானின் பஞ்சாரண்யத் தலங்கள் ஐந்து. 'ஆரண்யம்' என்றால் 'காடு' என்று பொருள். 'பஞ்சாரண்யம்' என்றால் ஐந்து வகை வனங்கள் என்று பொருள்படும். ஈசன் முல்லை வனத்தில் அருளும் திருக்கருகாவூர், பாதிரி வனத்தில் அருளும் திருஅவளிவநல்லூர், வன்னி வனத்தில் அருளும் திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவார மங்கலம்), பூளை வனத்தில் அருளும் திரு இரும்பூளை (ஆலங்குடி), வில்வவனத்தில் அருளும் திருக்கொள்ளம்புதூர் (திருக்களம்பூர்) ஆகிய தலங்களே பஞ்சாரண்யத் தலங்களாகும்.

திருக்களம்பூர் திருத்தலம்

இந்த தலங்களில் ஒன்றான திருக்கொள்ளம்புதூர் என்னும் திருக்களம்பூரில், சிவபெருமான் திருஞானசம்பந்தருக்காக தீபாவளி அன்று நடுஇரவில் நடக்க வேண்டிய அர்த்தஜாம பூஜையை, மறுநாள் அதிகாலை உஷத் காலத்தில் ஏற்று அருள்புரிந்துள்ளார்.

சிவாலயங்கள் பலவுக்கும் சென்று பதிகம்பாடி இறைவனை தரிசித்து வந்த திருஞானசம்பந்தர், திருக்களம்பூர் திருத்தலத்திற்கு வந்தார். வழியில் அகத்திய காவிரி (முள்ளியாறு) என்னும் வெட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சம்பந்தரால் ஆற்றைக் கடந்து திருக்களம்பூர் செல்ல முடியவில்லை. ஆற்றில் ஓடமும் செலுத்த முடியாத அளவுக்கு பெருவெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் ஓடக்காரர்கள் தங்கள் ஓடங்களை, கரையில் நிறுத்தியிருந்தனர். ஆனால் ஈசனை தரிசிக்காமல் செல்லக்கூடாது என்பதில் திருஞானசம்பந்தர் உறுதியாய் இருந்தார்.

துடுப்பின்றி சென்ற ஓடம்

ஏனெனில், அதற்கு முன்பாக சம்பந்தர், திருக்கருகாவூரில் உஷத் கால பூஜை, அவளிவநல்லூரில் காலசந்தி, அரித்துவாரமங்கலத்தில் உச்சிகாலம், ஆலங்குடியில் சாயரட்சை பூஜைகளை முடித்துக் கொண்டு, அர்த்தஜாம பூஜையில் கலந்து கொள்ள திருக்களம்பூர் திருத்தலத்திற்கு வந்திருந்தார். ஆனால் இங்கு ஆற்றைக் கடக்க முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டு செய்வதறியாது திகைத்தார்.

பின்னர் ஆற்றின் கரையில் நிறுத்தியிருந்த ஓடம் ஒன்றில், தன் அடியவர்களுடன் ஏறிய திருஞானசம்பந்தர் பஞ்சாட்சரம் கூறினார். பின்னர் ஓடத்தை ஆற்று நீரில் செலுத்த முயன்றார். ஆனால் துடுப்பு இல்லை. எனவே இறைவனை நினைத்து பதிகம் பாடினார். என்ன விந்தை! துடுப்பு இல்லாமல் ஆற்றில் ஓடம் செல்லத் தொடங்கியது. ஆற்றின் மறுகரையை அடைந்தது. அந்த கரையிலேயே ஈசன், உமையுடன் இடப வாகனத்தில் தோன்றி சம்பந்தருக்கும், அவரது அடியவர் களுக்கும் காட்சி கொடுத்தார். அந்த அற்புத காட்சியைக் கண்ட சம்பந்தர், மீதி பதிகத்தையும் பாடியபடி திருக்களம்பூர் ஆலயம் நோக்கிச் சென்றார்.

அதிகாலையில் அர்த்தஜாம பூஜை

இதற்கிடையில் அர்த்தஜாம பூஜையை செய்ய இருந்த அர்ச்சகர்களிடம், அசரீரியாக ஒலித்த ஈசன், 'என் பக்தன் சம்பந்தன் வந்து கொண்டிருக்கிறான். எனவே அர்த்தஜாம பூஜையை சற்று தாமதமாக செய்யுங்கள்' என்று கூறியதை சிரமேற்கொண்டு, அர்ச்சகர்கள் அனைவரும் திருஞானசம்பந்தரின் வருகைக்காக காத்திருந்தனர். இதற்குள் அர்த்தஜாம பூஜைக்கான நள்ளிரவு நேரம் கடந்து விட்டது. சம்பந்தர் ஆற்று வெள்ளத்தைக் கடந்து திருக்கோவிலை அடைந்தபோது அதிகாலை வந்து விட்டது.

இதையடுத்து அதிகாலையில் நடைபெறும் உஷத் கால பூஜையின்போது, முன்தினம் நள்ளிரவில் நடைபெற வேண்டிய அர்த்த ஜாம பூஜையை அர்ச்சகர்கள் செய்தனர். அதனை கண்டுகளித்து ஈசனை வழிபட்டார் திருஞானசம்பந்தர். அன்றைய தினம் ஐப்பசி மாத அமாவாசையாகும். அதாவது தீபாவளி அன்று நள்ளிரவில் நடக்க வேண்டிய அர்த்தஜாம பூஜை, தீபாவளிக்கு மறுநாள் அதிகாலையில் நடைபெற்றது. இதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சம்பிரதாயமாக இந்த பூஜை, அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஓடத் திருவிழா

திருஞானசம்பந்தர் திருக்களம்பூருக்கு எழுந்தருளிய சம்பவத்தை நினைவுகூரும் வகையில், தனி விழாவாக 'ஓடத் திருவிழா' நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தர் உற்சவர் சிலையை படகில் வைத்து, ஓதுவார்கள் தேவாரப் பதிகம் ஓத, வெட்டாற்றின் இக்கரையில் இருந்து அக்கரைக்கு படகில் கொண்டு செல்வார்கள். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பாக படகு கரை வந்து சேரும். அங்கே திருஞானசம்பந்தரையும், அவரது அடியவர்களையும் ரிஷப வாகனத்தில் கயிலை வாசனான திருக்களம்பூர் ஈசனும், பார்வதிதேவியும் எதிர்கொண்டு அழைப்பார்கள். பிறகு அனைவரும் கோவிலுக்குள் செல்வார்கள். அப்போது தான் அந்த காலை வேளையில் அர்த்தஜாம பூஜை நடைபெறும்.

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இதுபோன்ற காலம் தவறிய பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டால், நம் வாழ்வில் நமக்கு தேவைப்படும் அனைத்து ஐஸ்வரியங்களும் தவறாமல் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓடத் திருவிழாவில் கலந்து கொண்டு, வாழ்க்கை ஓட்டத்துக்கான அனைத்தையும் திருக்களம்பூர் ஈசனிடம் பெற்று உயர்வடைகிறார்கள்.

கோவில் அமைப்பு

வெட்டாற்றின் கரையில் 'நம்பர் கோவில்' என்னும் 'சம்பந்தர் கோவில்' அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள கிராத மூர்த்தி பிரசித்தம். தொடர்ந்து ஐந்து பவுர்ணமியில் இந்த ஆலயம் வந்து கிராத மூர்த்தியை நெய் தீபமேற்றி வழிபட்டால் எதிலும் வெற்றி வாகை சூடலாம். ஓடத்தில் வந்திறங்கிய திருஞானசம்பந்தரையும், அவரது அடியார்களையும் ஈசனும், உமையாளும் வரவேற்ற இடம் இந்த நம்பர் கோவில் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திருகளம்பூர் திருத்தலத்தில் ஐந்து நிலை உள்கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கொடிமர விநாயகரை வழிபடலாம். கிழக்கு நோக்கிய மூலவர் வில்வ வனநாதரையும், தெற்கு நோக்கிய அம்பாள் 'அழகுநாச்சி' என்னும் சவுந்திர நாயகியையும் தரிசனம் செய்யலாம். இத்தல விநாயகருக்கு 'காரியசித்தி விநாயகர்' என்று பெயர். இவரது துதிக்கை வலது பக்கமாக சுழித்தபடி உள்ளது. இவரை சங்கடஹர சதுர்த்தி நாட்களில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் காரியங்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும் என்கிறார்கள்.

தீர்த்தங்கள்

கோவிலுக்கு வெளியே தெற்கு வீதியில் 'பசுமடம்' உள்ளது. இங்கு நடைபெறும் கோபூஜையில் அதிகாலை வேளையில் கலந்து கொண்டால், நாக தோஷங்கள், பெண் சாபங்கள், பிதுர் தோஷங்கள் அகலும். வெட்டாறு, பிரம்மதீர்த்தம், அர்ச்சுன தீர்த்தம், அகத்திய தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் இங்கு உள்ளன.

ஆலய உட்பிரகாரத்தில் பொய்யா கணபதி, தண்டபாணி, முருகர், கஜமுக்தீஸ்வரர், முல்லைவன நாதர், ஆதிவில்வநாதர், கஜலட்சுமி, சாட்சிநாதர், பாதாள வரதர், மகாலிங்கர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, விசாலாட்சி, சரஸ்வதி, பைரவர், சூரியன், சனி பகவான், லிங்கோத்பவர், பிட்சாடனர், துர்க்கை, சண்டேஸ்வரர், பிரம்மன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பல சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன.

திருக்களம்பூரில் இறப்பவர்களுக்கு, சிவபெருமானே பஞ்சாட்சர மந்திரத்தை வலது செவியில் ஓதி முக்தி அளிப்பதாக தல புராணம் தெரிவிக்கிறது. எனவே இத்தலத்திற்கு 'பஞ்சாட்சரபுரம்' என்ற பெயரும் உண்டு. அர்ச்சுனன் இத்தல ஈசனை வழிபட்டு பாசுபத அஸ்திரத்தைப் பெற்றுள்ளான். பிரம்மா, இத்தல ஈசனை வழிபட்டு தனது சாபத்தைப் போக்கிக் கொண்டுள்ளார்.

கும்பகோணம்- திருவாரூர் பாதையில் குடவாசலில் இறங்கி 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் செல்லூர் என்ற ஊர் வரும். அங்கிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் 1 கிலோமீட்டர் தூரத்தில் திருக்களம்பூர் திருத்தலம் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்