< Back
ஆலய வரலாறு
கந்தசஷ்டி 3-ம் நாள் விழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது - ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம்
ஆலய வரலாறு

கந்தசஷ்டி 3-ம் நாள் விழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது - ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம்

தினத்தந்தி
|
4 Nov 2024 8:30 AM IST

கந்தசஷ்டி திருவிழாவில் நேற்று தங்க சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளினார்

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவில் 2-வது நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் உள்ள சுவாமி, அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி, அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோவிலில் வழக்கமாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கந்தசஷ்டி திருவிழா தொடங்கி உள்ளதால் நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது குடும்பத்துடன் குவிந்தனர். இதனால் பக்தர்கள் கடலில் புனித நீராடி சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா 3ம் நாள் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

விழாவில் 6-ம் திருநாளான வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணி அளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்