பிரிந்த தம்பதியரை இணைக்கும் இளமையாக்கினார் கோவில்
|பிரிந்து வாழும் கணவன், இளமையாக்கினார் கோவிலில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் ஒன்று சேர்வார்கள் என்று நம்பப்படுகிறது.
சிதம்பரம் நகர எல்லைக்குள் நடராஜர் கோவிலுக்கு மேற்கு பகுதியில் இருக்கிறது திருப்புலீச்சுரம் எனப்படும் இளமையாக்கினார் கோவில். இக்கோவில் 7-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என கூறப்படுகிறது.
தல புராணம்
சிதம்பரம் தில்லை வனமாக இருந்தபோது, பாலமுனிவர் தனது தந்தை மத்தியந்தன முனிவரின் உபதேசப்படி தில்லை வனத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் அங்குள்ள சிவகங்கை தீர்த்தக் குளத்தில் குளித்துவிட்டு, அதற்கு தெற்கே ஒரு ஆலமரத்தின் நிழவில் இருந்த திருமூலட்டானேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை கண்டு தரிசித்து வணங்கி வந்தார். அந்த சிவலிங்கம்தான் நடராஜர் கோவிலின் மூலவரான ஆதிமூலநாதர் ஆவார். அப்போது தில்லைக்கு மேற்கே ஒரு திருக்குளத்தைக் கண்டு அதன் அருகில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி, அதற்கு அருகிலேயே ஒரு யாகசாலை அமைத்து பூஜை செய்து வழிபட்டார்.
பூஜைக்கு பறிக்கும் பூக்களை வண்டுகள் எச்சம் செய்வதை பார்த்த அவர், விடியும் முன் மரத்தில் ஏறி பூக்களை பறிப்பதற்கு வசதியாக புலிக்கால், புலிக்கைகள் மற்றும் ஒளி தரும் கண்கள் ஆகியவற்றை கேட்டு இறைவனை வேண்டினார். சிவபெருமான் அவர் வேண்டுதலை ஏற்று முனிவருக்கு புலிக் கால், புலிக் கைகள், ஒளி தரும் கண்கள் ஆகியவற்றை அளித்து அருள் செய்தார். இதனால் அவர் 'வியாக்ரபாதர்' என பெயர் பெற்றார்.
இவர் நாள்தோறும் விடியும் முன்பு பூக்களை பறித்து சிவபூஜை செய்து வந்தார். நாளடையில் வியாக்ரபாதர், வசிஷ்ட முனிவரின் தங்கையை திருமணம் செய்து உபமன்யு என்ற மகனை பெற்றார். ஒருநாள் வியாக்ரபாதர் பூஜித்துக் கொண்டிருந்தபோது குழந்தை பாலுக்காக அழுததால் திருப்பாற்கடலையே அம்பலவன் அருளினார். இதனை 'பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்' என சேந்தனார் பாடியுள்ளார்.
தல சிறப்பு
வேதநெறியினர் வாழும் தில்லையில் குயவர் குலத்தில் தோன்றியவர் திருநீலகண்டர். இவர் தினந்தோறும் நடராஜப் பெருமானை வழிபடுவதோடு, இறைவனின் அடியார்களுக்கு தொண்டும் செய்து வந்தார். வாழ்வதற்காக குலத் தொழிலாகிய மண்பாண்டங்களை செய்து விற்று வந்தாலும், சிவனடியார்களுக்கு யாசகம் பெறும் பாத்திரமான திருவோடுகளை செய்து, அதனை அடியவர்களுக்கு இலவசமாகக் கொடுத்து வந்தார். இவர் மனைவி ரத்தினசலை அம்மையார். கற்பிலும், அழகிலும், சிவ தொண்டிலும் சிறந்து விளங்கியவர்.
ஒரு முறை திருநீலகண்டர் இளமைப்பருவ ஈர்ப்பின் காரணமாக, சிற்றின்பத்தில் ஈடுபாடு கொண்டு வேறொரு பெண்ணிடம் தகாத தொடர்பு கொண்டார். இதனை அறிந்த அவரது மனைவி ரத்தினசலை, மிகவும் வருத்தம் அடைந்தார். திருநீலகண்டரிடம், "இனி என்னைத் தொடக்கூடாது" என்று சிவபெருமானின் மீது ஆணையிட்டு கூறிவிட்டார். அதனைக் கேட்ட திருநீலகண்டர், தன் மனைவியை அயலவர் போல நோக்கி "எம்மை எனப் பன்மைச் சொல்லாற் கூறியதால் இனி மற்ற மாதர்களை என் மனத்தாலும் தீண்ட மாட்டேன்" என உறுதி கூறினார்.
அன்று முதல் கணவன்-மனைவி இருவரும், ஒரே வீட்டில் எவ்வித தொடர்பும் இன்றி வாழ்ந்து வந்தனர். ஆனால் இறைவன் மேல் உள்ள பற்றால் தொடர்ந்து இருவரும் இறைவனுக்கு தொண்டு புரிந்து வந்தனர். ஆண்டுகள் பல செல்ல, அவர்கள் இருவரும் இளமை நீங்கி முதுமையை அடைந்தனர். உடல் தளர்ச்சியுற்ற நிலையிலும், இறைவன் மீது கொண்ட அன்பால், அடியார்களுக்கு தொண்டு செய்து வந்தனர்.
இவர்களது இல்வாழ்க்கை சிறப்பினை உலகறிய செய்வதற்காக, சிவபெருமான் திருஉள்ளம் கொண்டார். அவர் சிவயோகியார் வேடம் பூண்டு திருநீலகண்டரின் வீட்டினை அடைந்தார். அப்போது வீட்டில் இருந்த திருநீலகண்டரிடம், திருவோடு ஒன்றை கொடுத்து 'இதனை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் கேட்கும் போது திருப்பித்தர வேண்டும்" என்று கூறி யாத்திரை சென்று விட்டார்.
பல நாட்கள் கழித்து திரும்பி வந்த சிவயோகியார், "நான் முன்பு உன்னிடம் கொடுத்த திருவோட்டினை தருக" என்று திருநீலகண்டரிடம் கேட்டார். நீலகண்டரும் தான் வைத்திருந்த இடத்தில் தேடியபோது திருவோட்டைக் காணவில்லை. இறைவனின் திருவிளையாடலில், அந்த திருவோடு மறைந்திருந்தது.
இதனால் திகைப்புற்ற திருநீலகண்டர், சிவயோகியாரை வணங்கி, "ஐயா தாங்கள் தந்து சென்ற திருவோட்டினை, நான் வைத்த இடம் மட்டுமின்றி வேறு இடங்களிலும் பல முறையும் தேடியும் காணவில்லை. அதனினும் சிறப்புடைய நல்லதொரு பாத்திரம் தருகின்றேன். அதனை ஏற்றுக் கொண்டு எனது பிழையை பொறுத்தருள வேண்டும்" என வேண்டினார்.
அதைக் கேட்ட சிவயோகியார் "நான் தந்த மண் ஓடு அல்லாமல், நீ கொடுப்பது பொன்னால் செய்யப்பட்டது என்றாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். முன்பு நான் கொடுத்த ஓட்டினை கொண்டு வா" என்றார்.
"நான் கொடுத்த ஓட்டினை தொலைத்துவிட்டது உண்மையாக இருப்பின், உன் மனைவியின் கைப்பற்றி குளத்தில் மூழ்கி சத்தியம் செய்" என சிவயோகியார் கூறினார். "நானும் என் மனைவியும் எங்களிடையே உள்ள ஒரு சபதத்தால் உடன் மூழ்க முடியவில்லை. நானே குளத்தில் மூழ்கி சத்தியம் செய்கிறேன். என்னுடன் வாரும்" என்றார் திருநீலகண்டர். இதனால் சினம் கொண்ட சிவயோகியார், "தில்லைவாழ் அந்தணர்கள் கூடியிருக்கும் பேரவையில் இவ்வழக்கினை கூறுவேன்" என்றார்.
திருநீலகண்டரும் அதற்கிசைந்து அவருடன் சென்றார். சபையின் முன்பு சிவயோகியாரும், திருநீலகண்டரும் தங்களின் வழக்கை எடுத்துக் கூற, அதனை கேட்ட தில்லைவாழ் அந்தணர்கள் திருநீல கண்டரை பார்த்து "இவர் கொடுத்த ஓட்டினை தொலைத்து விட்டீர்கள் என்றால், மனைவியுடன் குளத்தில் மூழ்கி உறுதி கூறுதலே முறையாகும்" என்றார்கள். அதனை கேட்ட திருநீலகண்டர், தன் மனைவியை தொட முடியாத காரணத்தை வெளியில் சொல்ல முடியாததால் செய்வதறியாது திகைத்தார். பின்னர் கணவன்-மனைவி இருவரும் ஒரு கம்பின் இரு முனையையும் பற்றிக் கொண்டு கோவில் குளத்தில் மூழ்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனைவரும் தில்லை திருப்புலீச்சுரம் கோவில் முன்புள்ள குளத்தினை அடைந்தனர்.
அங்கு திருநீலகண்டரும், அவரது மனைவியும் குச்சியை பற்றியபடி குளத்தில் மூழ்கி எழுந்தனர். அப்போது அவர்கள் இருவரும் முதுமை நீங்கி, இளமை தோற்றத்தைப் பெற்றிருந்தனர். அதுவரை கரையில் நின்றிருந்த சிவயோகியார் மறைந்து, அம்மையப்பராக காட்சி தந்து, தம்பதிகள் இருவரும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி முடித்து கயிலாயம் வந்து சேரும்படி அருளி மறைந்தார்.
புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் நாள்தோறும் ஆத்மார்த்தமாக பூஜை செய்து வந்தமையால் திருப்புலீச்சுரம் என்னும் பெயருடைய கோவில், திருநீலகண்ட நாயனாருக்கும் அவர் மனைவியாருக்கும் இளமைத்தன்மையை வழங்கியதால் இளமையாக்கினார் கோவில் என்று அழைக்கப்பட்டது.
முன்பு இங்குள்ள மூலவரின் பெயர் 'திருப்புலீச்சுரர் என்றும், அம்பாள் பெயர் 'திரிபுரசுந்தரி' என்றும் இருந்தது. கோவில் எதிரே உள்ள வியாக்ரபாத தீர்த்த குளத்தில் திருநீலகண்ட நாயனாரை இளமை பெறச் செய்ததால், இங்குள்ள இறைவன் 'யவனேஸ்வரர்' (இளமையாக்கினார்) எனவும், அம்பிகை 'யவனாம்பிகை' (இளமைநாயகி) எனவும் அழைக்கப்பட்டனர். இக்கோவிலின் எதிரே உள்ள வியாக்ரபாத தீர்த்தம் 'யவன தீர்த்தம்' என்ற சிறப்புப் பெயருடன் திகழ்கிறது.
பழமை வாய்ந்த இக்கோவிலில் நாள்நோறும் நான்கு கால பூஜை நடைபெற்று வருகின்றது. கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் கனம்புல்ல நாயனார் குருபூஜை விழாவும், தை மாதம் விசாக நட்சத்திரத்தில் திருநீலகண்ட நாயனார் விழாவும் நடைபெறுகின்றன.
பிரிந்து வாழும் கணவன், மனைவி இக்கோவிலில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் ஒன்று சேர்வார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் திருமணமாகாதோர் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தால் திருமணத் தடை நீங்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும், கடலூரில் இருந்து 52 கிலோ மீட்டர் தூரத்திலும், சீர்காழியில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலும் இக்கோவில் உள்ளது.