< Back
ஆலய வரலாறு
வல்லம் ஏகவுரி அம்மன் கோவில்
ஆலய வரலாறு

வல்லம் ஏகவுரி அம்மன் கோவில்

தினத்தந்தி
|
26 Nov 2024 11:56 AM IST

இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னை இரண்டு தலைகளுடன், அதாவது ஒன்றின் மீது ஒன்றாக அமைந்த இரு திருமுகங்களுடன் காட்சி தருவது சிறப்பு அம்சம்.

தஞ்சாவூர் நகரம் தோன்றுவதற்கு முன்பு, சோழர்களின் தலைநகராக வல்லம் இருந்தது. அப்போது, முற்காலச் சோழர்களால் அமைக்கப்பட்ட கோவில்தான் வல்லம் ஏகவுரி அம்மன் கோவில். சோழர்களின் வழிபாட்டு தெய்வமாகவும், குல தெய்வமாகவும், அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய வல்லத்துக் காளியாகவும் விளங்கியவள்தான் இந்த ஏகவுரி அம்மன்.

கோவிலின் நுழைவாசல் முதல் பெரிய சுற்றுப்பாதை ஒரு கோட்டையைப் போல பாதுகாப்பாக உள்ளது. இந்த அன்னை வல்லப சோழன் காலத்தில் வழிபடப்பட்டு, கரிகால் சோழ மன்னனால் 'கரிகாற் சோழ மாகாளி' என்றும், பராந்தக சோழனால் 'வல்லத்துப் பட்டாரகி' என்றும், ராஜராஜ சோழனால் 'காளாபிடாரி கைத்தலைப் பூசல் நங்கை' என்றும் அழைக்கப்பட்டு வந்தவள்.

தஞ்சைப் பிரகதீசுவரர் கோவில் கட்டுவதற்கு முன்பாகவே இக்கோவில் இருந்துள்ளது. சோழ மன்னர்கள் அரசு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும், வெற்றி வாகை சூடப் போர்க்களம் செல்லும்போதும், இந்தத் தேவியிடம் அருள்வாக்கு கேட்டு உத்தரவு பெற்ற பின்னரே செயல்படுவார்களாம்.

தல புராணம்

தஞ்சாசுரன் என்னும் அசுரன் தஞ்சையில் வாழ்ந்தான். சிறந்த சிவ பக்தனான அவன், சிவனை நினைத்துக் கடுந்தவம் புரிந்தான். தவத்துக்கு மகிழ்ந்த இறைவன் தோன்றி 'என்ன வரம் வேண்டும், கேள்' என்றார். 'பெண்களைத் தவிர வேறு எவரும் என்னை வெல்ல முடியாத வரம் வேண்டும்' என்று வரம் கேட்டான் தஞ்சாசுரன். அதைக் கேட்ட சிவனார் சிரித்தார். அப்படியானால் உன்னை பெண் ஒருத்தி வென்றால் பரவாயில்லையா? எனக் கேட்டார். அதற்குத் தஞ்சாசுரன் 'ஆண்களை வெல்ல பெண்களால் முடியாது. அதனால்தான் அப்படியொரு வரம் கேட்டேன்' என்றான். பெண்மையைக் கேவலமாக நினைத்த தஞ்சாசுரனுக்கு, தன்னுள் பாதியாக இருந்த பார்வதி தேவி மூலம் பாடம் புகட்ட எண்ணினார் இறைவன்.

'அப்படியே ஆகட்டும், உன்னை ஒரு பெண்ணைத் தவிர யாராலும் வெல்ல முடியாது' என்ற வரத்தை வழங்கினார். வரம்பெற்ற ஆணவத்தில், மனிதர்களையும், தேவர்களையும் இம்சிக்கத் தொடங்கினான், தஞ்சாசுரன்.

தேவர்கள் சிவனை சரண் அடைந்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய சிவன், 'பெண்மையே சக்தி என அறியாதவன், தஞ்சாசுரன். அவன் அழியும் நேரம் வந்துவிட்டது. கவலைப்படாதீர்கள்' என்றார். பின்னர் தன் துணைவியான பார்வதி தேவியை 'ஏ கவுரி' என்று அழைத்து, தஞ்சாசுரனை அழிக்க ஆணையிடுகிறார்.

அசுரனை அழித்த ஏகவுரி அம்மன்

அசுரனின் அக்கிரமங்களை அறிந்த தேவியின் முகத்தில் உக்கிரம் ஏற, எட்டுக் கரங்களிலும் ஆயுதம் ஏந்தி அசுரனை நோக்கிப் புறப்பட்டாள். அசுரனுக்கும், தேவிக்கும் கடும் போர் மூண்டது. முடிவில் அசுரனை வதம் செய்தார் தேவி. உயிர் பிரியும் நேரத்தில் அசுரன், தேவியைப் பணிந்து 'பெண்மையை இழிவாகப் பேசிய என்னை மன்னிக்க வேண்டும்' என்றும், 'இந்தப் பகுதி என் பெயரால் தஞ்சாபுரி என வழங்கப்படவேண்டும்' எனவும் வேண்டினான். தேவியும் அப்படியே ஆகட்டும்' என்று வரம் அளித்தார். எருமைக் கிடா உருவம் தாங்கிய அசுரனின் கழுத்தை வெட்டி தலையை ஒரு கையில் ஏந்தினாள். உடல் கீழே சாய்ந்ததும் அசுரன் எருமை உருவம் நீங்கி இறந்தான்.

அசுரனை வதம் செய்த பின்னரும், அன்னையின் உக்கிரம் குறையவில்லை. மாங்காளி வனம் என்று அழைக்கப்பட்ட வல்லத்தில் அலைந்து திரிந்தாள். அதனால், நீர் நில நிலைகள் வறண்டன. வனமெங்கும் தீப்பற்றி எரிந்தது. நிலைமையை உணர்ந்த சிவபெருமான், ஏகவுரி அம்மனிடம் 'சாந்தம் கொள்' என்றார். அம்மனின் கோபம் சற்று தணிந்தது. சிவபெருமான், கோபத்தைத் தணித்துக்கொண்டு அப்பகுதி மக்களுக்குத் தெய்வமாக இருந்து காப்பாற்றும்படி கூறினார். வறட்சி, பஞ்சம் நீங்கியது. அப்போது, மக்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அங்கேயே எழுந்தருள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

மக்களின் வேண்டுகோளின்படி, அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறாள். அம்மன் அசுரனை வதம் செய்த தினம், ஆடி கடைசி வெள்ளிக்கிழமை. எனவே, அன்றைய நாளில் மக்கள் பால்குடம் எடுத்து வந்து தீ மிதித்து அம்மனை சாந்தப்படுத்துகின்றனர்.

இரண்டு திருமுகம்

எட்டுத் திருக்கரங்களுடன் தேவி பத்ம பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். இந்தத் தேவி இரட்டை தலையுடன் அதாவது, ஒன்றின் மீது ஒன்றாக அமைந்த இரு திருமுகங்களுடன் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. அசுர குணம் கொண்டவர்களை அழிக்க ஆக்ரோஷத்துடன் ஒரு முகமும், அல்லல்பட்டு வரும் அடியவர்களின் துயர் தீர்க்க சாந்தத்துடன் இன்னொரு முகமும் அமைந்துள்ளது. இப்படி இரு திருமுகங்களுடன் அமைந்த அம்மனை காண்பது அரிது.

காட்டில் அம்மன் எழுந்தருளிய இடத்தில் சுதை வடிவத்தில் அம்மன் சிலை எழுப்பப்பட்டது. 2,500 ஆண்டுகளுக்கு மேலாக அந்தச் சுதை வடிவம் இன்றளவும் மாற்றப்படாமல் வழிபடப்பட்டு வருகிறது.

திருவிழா

ஆடி மாதம் 18-ந் தேதி அன்று வல்லம் கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் விழாவோடு, ஏகவுரி அம்மன் கோவில் திருவிழாவும் நடத்தப்படுகிறது. ஏகவுரி அம்மன், மாரியம்மன், அய்யனார் ஆகிய உற்சவ மூர்த்திகளைத் தனித்தனியே அலங்கரித்து வீதி உலா நடத்துகின்றனர். ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமையில் ஆடித் திருவிழா நடைபெறுகிறது. தீ மிதித்தல், அம்மனுக்கு பகலில் சைவ பூஜை, தொடர்ந்து இரவில் எருமைக்கிடா பூஜை போன்றவை நடைபெறும். கோவில் காவல் தெய்வங்களுக்கு ஆடு, கோழி பலியிட்டு வழிபடுகின்றனர். இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவில் தேவிக்கு நடத்தப்படும் சண்டி ஹோமம், திருவிளக்கு பூஜை, சித்ரா பவுர்ணமி விழா அடங்கும்.

சண்டி ஹோமம் செய்வதால் பராசக்தியின் வடிவங்களாகிய துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகள் மிகவும் மகிழ்ந்து, வாழ்வில் உள்ள சூனியங்களை அழித்து சகல சுகங்களையும் அருள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும், அபி ஷேக ஆராதனைகளும் நடை பெறுகிறது. இங்கு நடைபெறும் ஹோமத்தில் கலந்துகொண்டு அம்மனை வழிபட, சகல சங்கடங்களும் தீர்ந்து மகிழ்ச்சி நிலைக்கும். ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், கிரகக் கோளாறுகளால் துன்பம் அடைபவர்களும் இந்த அற்புத ஹோமங்களில் பங்கு கொண்டு பலன் பெறுகின்றனர்.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையும் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் கூடுதல் நேரம் கோவில் திறந்திருக்கும்.

தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் தஞ்சையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வல்லம் என்ற ஊர். இங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடி சாலையில் ஒரு கிலோமீட்டர் சென்றால், இந்த ஆலயத்தை அடையலாம்.

மேலும் செய்திகள்