மதுரையில் விமரிசையாக நடைபெற்ற 7 ஊர் அம்மன் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
|மதுரையில் விமரிசையாக நடைபெற்ற 7 ஊர் அம்மன் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், 7 ஊர் அம்மன் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு 6 கிராமங்களில் இருந்து 40 அடி உயரமுள்ள, பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களை கிராம மக்கள் சுமந்து, தாய் கிராமமாக உள்ள அம்மாபட்டிக்கு ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.
அம்மாபட்டியில் அம்மன் சிலைகளை வழிபட்டு, பின்னர் 7 அம்மனை அவரவர் சப்பரங்களில் வைத்து, கிராம மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்று வழிபாடு நடத்தினர். இந்த திருவிழாவுக்கு மதுரையின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமிதரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் டி.எஸ்.பி. துர்கா தேவி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.