< Back
பொழுதுபோக்கு
டிஜிட்டல் ஓவியங்களால் கவனம் ஈர்க்கும் வருணா
பொழுதுபோக்கு

டிஜிட்டல் ஓவியங்களால் கவனம் ஈர்க்கும் வருணா

தினத்தந்தி
|
18 Sept 2022 7:00 AM IST

2004-ம் ஆண்டு, எனது 3 வயதில், 2 முதல் 4 வயதிற்கு உட்பட்டோர் பங்கேற்ற கண்காட்சியில் முதன் முதலில் எனது ஓவியங்கள் இடம்பெற்றன. அந்த நிகழ்வை நடிகை வைஜெயந்தி மாலா தொடங்கி வைத்தார். எனது 13 வயதிற்குள், 13 ஓவியக் கண்காட்சிகளில் பங்கெடுத்திருக்கிறேன். இவற்றில், நான் வரைந்த ஓவியங்கள் மட்டுமே இடம்பெற்ற தனிக் கண்காட்சிகளும் அடங்கும்.

ம்ளரில் ஆவி பறக்கும் காபி, தட்டில் வைக்கப்பட்ட இட்லி மீது கரண்டியில் இருந்து விழும் திக்கான சாம்பார், முறுகலான மசால் தோசை என உணவு வகைகளை, தனது கைவண்ணத்தால் ஓவியங்களாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வரைந்து அசத்தி வருகிறார் வருணா.

சென்னையைச் சேர்ந்த இவர், தனது இரண்டு வயதிலேயே ஓவியம் வரையப் பழகி இருக்கிறார். இப்போது 22 வயதான வருணா, ஓவியத்துறையில் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் ஏராளமானவை. அவருடன் ஒரு சந்திப்பு.

ஓவியம் வரைவதில் ஈர்ப்பு உண்டானது எப்படி?

எனது தந்தை வண்ணம் தீட்டுபவர். அதனால் குழந்தையாக இருக்கும்போதே நான் வண்ணங்களால் ஈர்க்கப்பட்டு பிரஷ் பிடிக்கத் தொடங்கினேன். வளர்ந்த பிறகும் ஓவியம் வரைவதிலேயே எனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டேன். இவ்வாறு கடந்த 19 ஆண்டுகளாக ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறேன்.

உலகப் புகழ்பெற்ற பிகாசோ, வான் கோ ஆகியோரின் ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. நமது நாட்டைச் சேர்ந்த ஓவியர்களிடம் இருந்தும் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன்.

பாங்காக்கில் ஓவியம் தொடர்பான டிப்ளமோ படிப்பையும், சென்னையில் தொலைதூரக் கல்வி வழியாக விஸ்காம் படிப்பையும் முடித்திருக்கிறேன்.

கண்காட்சியில் பங்கேற்கும் அனுபவம் குறித்து சொல்லுங்கள்?

2004-ம் ஆண்டு, எனது 3 வயதில், 2 முதல் 4 வயதிற்கு உட்பட்டோர் பங்கேற்ற கண்காட்சியில் முதன் முதலில் எனது ஓவியங்கள் இடம்பெற்றன. அந்த நிகழ்வை நடிகை வைஜெயந்தி மாலா தொடங்கி வைத்தார். எனது 13 வயதிற்குள், 13 ஓவியக் கண்காட்சிகளில் பங்கெடுத்திருக்கிறேன். இவற்றில், நான் வரைந்த ஓவியங்கள் மட்டுமே இடம்பெற்ற தனிக் கண்காட்சிகளும் அடங்கும்.

2006-ம் ஆண்டு முதன் முதலில் நடைபெற்ற எனது தனி ஓவியக் கண்காட்சியை நடிகர் கமலின் மகள் அட்சரா, நடிகை கவுதமி மகள் சுப்புலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். புகழ்பெற்ற ஓவியர்கள், ஓவிய ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்தக் கண்காட்சியைக் கண்டுகளித்தனர். நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ஆகியோர் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள்.

2007-ம் ஆண்டு, சென்னை ஆளுநர் மாளிகையில் உலக அமைதி நாளையொட்டி ஓவியக் கண்காட்சி நடந்தது. 194 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் படைப்புகள் அதில் இடம்பெற்றிருந்தன.

அப்போதைய ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, அந்த விழாவில் பேசியபோது, "குழந்தைப் பருவத்திலேயே இத்தகைய திறமையோடு ஓவியங்கள் வரைவது உலகிலேயே வருணா மட்டும்தான்" என்று பாராட்டினார்.

அந்த பாராட்டையும், சிறு வயதில் 'உலக அமைதி' என்ற கருப்பொருளை உள்வாங்கி என்னால் வரைய முடிந்ததையும், இப்போது நினைத்தாலும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.



எத்தகைய ஓவியங்களை வரைகிறீர்கள்?

வாட்டர் கலர், அக்ரலிக், டிஜிட்டல் என எல்லாவித ஓவியங்களும் வரைகிறேன். 'சிறு வயதில் தொட்ட பிரஷை, எந்தச் சூழ்நிலை வந்தாலும் கீழே வைத்துவிடக்கூடாது' என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

உணவு தொடர்பான தத்ரூபமான ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது பற்றி சொல்லுங்கள்?

சமூக வலைத்தளங்களில் உணவு தொடர்பான ஓவியங்கள் பலரின் கவனத்தை ஈர்த்தன. எனக்கும் அவற்றின் மீது ஆர்வம் உண்டானது. முதலில் வரைந்தது 'டம்ளரில் ஆவி பறக்கும் காபி'. அது டுவிட்டரில் பல ஆயிரக்கணக்கான 'லைக்'குகளை பெற்று வைரலானது. தொடர்ந்து மசாலா தோசை, இட்லி என்று பல உணவு வகைகளை வரையத் தொடங்கினேன். அவை ஒவ்வொன்றுக்கும் வரவேற்பு கிடைத்தது. பலர் அந்த டிஜிட்டல் ஓவியங்களைப் பார்த்துவிட்டு "இது ஓவியம் போல் தெரியவில்லை. அசல் உணவாகத் தெரிகிறது" என்று பாராட்டினார்கள். அந்த ஊக்கம்தான், உணவு ஓவியங்களைத் தொடர்ந்து வரைய உந்துதலைத் தந்தது.

உங்கள் திறமைக்கு கிடைத்த அங்கீகாரங்கள் என்ன?

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றேன். இந்தப் போட்டியில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஆசிய பசிபிக் மண்டலத்தில் கோரல்ட்ரா சான்றிதழ் பெற்ற முதல் இளம் வடிவமைப்பாளர் விருது, சென்னை ரோட்டரி கிளப் வழங்கிய இளம் சாதனையாளர் விருது ஆகியவற்றையும் பெற்றிருக்கிறேன்.

நேரு சென்டர் ஆர்ட் கேலரி நடத்திய கண்காட்சியில், இந்திய அளவில் அழைப்பு விடுக்கப்பட்ட இரண்டு பேரில் நானும் ஒருவர். தற்போது பிரபல நாளிதழ் நடத்திய 'தெர்ட்டி அன்டர் தெர்ட்டி' சாதனையாளர்கள் போட்டியில், இந்திய அளவில் மூன்று பேரில் ஒருவராகத் தேர்வாகி இருக்கிறேன்.

உங்களது மற்ற பணிகள் என்ன?

வடிவமைப்பு சார்ந்த பணிகளில்தான் முழுமையாக ஈடுபட்டிருக்கிறேன். தனியார் நிறுவனம் ஒன்றில் வடிவமைப்பாளராக உள்ளேன். சொந்தமாக சிறிய ஆர்ட் ஸ்டுடியோ வைத்திருக்கிறேன். பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து ஆர்டர்கள் பெற்று வடிவமைத்துக் கொடுக்கிறேன்.

இத்துறையில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

இது ஆர்வமும், கற்பனைத் திறனும் சார்ந்த துறை. இதில் முழுமையான ஈடுபாட்டுடன் செயலாற்ற வேண்டும். உலக நடப்பு விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது கலையின் வெளிப்பாட்டுக்கு உதவும். ஓவியக்கலை தொடர்பான கண்காட்சிகள், கருத்தரங்குகளில் பங்கேற்க வேண்டும். மெல்பர்ன் மற்றும் சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட அனுபவம், எனக்கு புதிய மாற்றத்தையும் சிந்தனையையும் தந்தது.

உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?

கவனிக்கத்தக்க கண்காட்சிகள் நடத்தத் திட்டமிட்டு வருகிறேன். வாழ்நாள் முழுவதும் ஓவியக்கலைஞராக இருக்க விரும்புகிறேன். எனவே இத்துறையில் வியத்தகு சாதனைகள் செய்து வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்பதே என் லட்சியம். இந்த பயணம் எளிதல்ல என்பது தெரியும். ஆனால், அதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும் செய்திகள்