< Back
பொழுதுபோக்கு
தனித்துவமான சவுரா ஓவியங்கள்
பொழுதுபோக்கு

தனித்துவமான சவுரா ஓவியங்கள்

தினத்தந்தி
|
9 July 2023 7:00 AM IST

சவுரா பழங்குடியின மக்கள் தங்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சூரியன், சந்திரன், மரம், மக்கள், யானை, குதிரை உள்ளிட்ட சில விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு சுவரோவியங்களை வரைந்து வந்தனர்.

காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்த ஆதி மனிதர்களின் தொடர்பு கருவியாக இருந்தவை சுவரோவியங்கள். இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் இத்தகைய ஓவியங்களை பார்க்க முடியும். அந்த வகையில், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையானவை ஒடிசா மாநில பழங்குடியின மக்களின் 'சவுரா சுவரோவியங்கள்'.

நீளமான கோடு, முக்கோணம், வட்டம் என கணித வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன. கண்களை கவரும் வகையில், எளிமையான வரைபடங்களாக இவ்வகை ஓவியங்கள் காணப்படுகின்றன.

தற்போதுள்ள பெரும்பாலான ஓவியங்களுக்கு முன்னோடியாக விளங்கும் சவுரா ஓவியங்களை 'ஐகான்கள்' என்றும் அழைக்கிறார்கள். சவுரா பழங்குடியின மக்களின் வீடுகளில் உள்ள சுவர்களில் வரையப்பட்டு வந்த இந்த ஓவியங்களை, அவர்களின் முக்கிய தெய்வமான இடாலுக்கு அர்ப்பணித்தார்கள்.

சவுரா பழங்குடியின மக்கள் இயற்கையோடு ஆழமாக இணைந்திருப்பவர்கள். பெரும்பாலும் ஓவியங்கள் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வந்தனர். அவர்களின் ஓவியக் கலையை மேலோட்டமாக பார்த்தால், அன்றாட கிராம வாழ்க்கையை எளிமையாக சித்தரிப்பது போல் தோன்றும். ஆனால், அது குறியீடுகள் மற்றும் அர்த்தங்கள் நிறைந்தது. இந்த ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டுதான், அவர்களின் பழக்கவழக்கங்கள், கலாசாரம் ஆகியவை இருந்தன.

தங்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சூரியன், சந்திரன், மரம், மக்கள், யானை, குதிரை உள்ளிட்ட சில விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு சுவரோவியங்களை வரைந்து வந்தனர். இன்று சில புதுமைகள் புகுத்தப்பட்டு இருந்தாலும், அடிப்படையில் பழைய நடைமுறையில்தான் சவுரா ஓவியங்கள் வரையப்படுகின்றன.

சுவர்களில் மட்டும் பிரதிபலித்து வந்த சவுரா ஓவியங்கள் தற்போது கேன்வாஸ், மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டு புத்தகங்கள் மற்றும் ஆடைகளிலும் வரையப்படுகின்றன. கேன்வாஸ் மற்றும் காகிதம் போன்றவற்றில் அக்ரலிக் வண்ணங்கள் கொண்டு அழகுபடுத்துகின்றனர்.

மேலும் செய்திகள்