< Back
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
குழந்தைகளுக்கு புத்தகம் பரிசளிக்கும்போது நினைவில்கொள்ள வேண்டியவை
|2 April 2023 7:00 AM IST
குழந்தைகள் கிழித்தாலும், தூக்கி எறிந்தாலும் பரவாயில்லை என மீண்டும் அவர்கள் கையில் புத்தகத்தை எடுத்துக் கொடுப்பது சிறந்தது. புத்தகம் பற்றிய செயல்பாட்டை ஆரம்ப கட்டத்தில் இருந்தே அவர்கள் தெரிந்துகொள்ள, இது ஒரு சிறந்த நடைமுறை பழக்கமாகும்.
குழந்தைகளுக்கு பிறந்த நாள் மற்றும் சிறப்பு நாட்களின்போது பொம்மைகள், துணிகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றை பரிசளிப்பது அனைவரது வழக்கம். தற்போது, வாசிக்கும் ஆர்வத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் விதமாக, பலரும் புத்தகங்களை பரிசளித்து வருகிறார்கள். புத்தக வாசிப்பு அடுத்த தலைமுறைக்கும் செல்ல வேண்டும். அந்தவகையில் குழந்தைகளுக்குப் புத்தகங்களை பரிசளிக்கும்போது, நாம் சில விஷயங்களை நினைவில்கொள்ள வேண்டும் என்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த கதை சொல்லி வனிதாமணி. அவர் கூறிய குறிப்புகள் இதோ…
- குழந்தைகளுக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதற்கு தனிப்பட்ட வயது வரம்பு இல்லை. பொம்மைகளை அறிமுகப்படுத்தும்போதே, புத்தகத்தையும் அறிமுகம் செய்யலாம். புத்தகங்களை கிழித்து விடுவார்கள் என்ற பதற்றத்தில் அவர்களை மிரட்டுவது, அடிப்பது, திட்டுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம். இவை புத்தகங்கள் மீது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தக்கூடும்.
- குழந்தைகள் கிழித்தாலும், தூக்கி எறிந்தாலும் பரவாயில்லை என மீண்டும் அவர்கள் கையில் புத்தகத்தை எடுத்துக் கொடுப்பது சிறந்தது. புத்தகம் பற்றிய செயல்பாட்டை ஆரம்ப கட்டத்தில் இருந்தே அவர்கள் தெரிந்துகொள்ள, இது ஒரு சிறந்த நடைமுறை பழக்கமாகும்.
- நடக்கப் பழகாத குழந்தைகளுக்கு பல வண்ணப் படங்கள் இருக்கக் கூடிய, கெட்டியான அட்டைகள் உள்ள புத்தகங்களை முதலில் வாங்கிக் கொடுக்கலாம்.
- குழந்தைகள் நடக்க ஆரம்பித்த பின்னர், ஒரு பக்கம் முழுவதும் படங்களும், மறுபக்கம் முழுவதும் பெரிய அளவு எழுத்துக்களால் எழுதப்பட்ட ஒரு சில வார்த்தைகளும் இருக்கக்கூடிய புத்தகங்களை தேர்வு செய்யலாம்.
- பேச ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு, படங்களுடன் கூடிய பெரிய எழுத்துக்களால் ஆன ஒரு வரி கதைகள் கூறும் புத்தகத்தை வாங்கிக் கொடுக்கலாம்.
- பள்ளி செல்ல ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு, வண்ணம் தீட்டுதல் மற்றும் பாடல்கள் நிறைந்த புத்தகங்களை தேர்வு செய்யலாம். அவர்களையே அழைத்துச் சென்று புத்தகத்தை தேர்வு செய்ய முற்படுத்தலாம்.
- புதிய மொழியை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த புத்தகங்களே சிறந்த தேர்வு. குழந்தைகளுக்கு பல மொழிகளை கற்றுக் கொடுக்க விரும்புவோர் சிறார் புத்தகங்களை வாங்கலாம்.
- தூங்க வைக்கும் கதைகள் மட்டுமில்லாமல், அவர்களை கதைசொல்லியாக மாற்றும் வகையிலான உவமைகள் நிறைந்த கதைப் புத்தகங்களை தேர்ந்தெடுக்கலாம்.
- பெரும்பாலும், ஒரு பக்கக் கதைகள் அல்லது ஒரு புத்தகம் முழுவதும் ஒரே கதை படங்களுடன் விவரிக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை வாங்கலாம்.
- ஒரே கடையில் புத்தகங்கள் வாங்குவதை விட, புத்தகத் திருவிழாக்களுக்குச் சென்று புத்தகங்களை வாங்குவது சிறந்தது.
- நன்றாக வாசிக்க ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு துணுக்குகள், விடுகதைகள், விளையாட்டு, புதிர்கள் இருக்கக்கூடிய பல்வேறு வகையான புத்தகத் தொகுப்பை பரிசளிக்கலாம்.