< Back
பொழுதுபோக்கு
மாதவிடாய் காலங்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள்
பொழுதுபோக்கு

மாதவிடாய் காலங்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள்

தினத்தந்தி
|
17 Sept 2023 7:00 AM IST

அதிக அளவு உதிரப்போக்கை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை பயணத்தின்போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பப்பாளி, எள் போன்றவற்றை கொண்டு தயாரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு பிரச்சினைகளை அனுபவிப்பார்கள். இந்த நேரத்தில் சரியான முன்னேற்பாடுகளை செய்யாமல் பயணம் மேற்கொள்வது மேலும் சிரமத்தை உண்டாக்கும். அவற்றை தவிர்ப்பதற்கான வழிகளைத் தெரிந்துகொள்வோம்.

நீண்ட தூர பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு, உங்களது மாதவிடாய் காலத்தை கணக்கிட்டு, அதற்கு ஏற்றதுபோல பயணத்தை திட்டமிட வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சானிட்டரி நாப்கின்கள் அல்லது மாதவிடாய் கோப்பைகளை கூடுதல் எண்ணிக்கையில் உடன் கொண்டு செல்ல வேண்டும்.

கூடுதலாக உள்ளாடைகள் மற்றும் வெட் டிஷ்யூ எனப்படும் ஈரப்பதமுள்ள துணிகளை உடன் வைத்திருப்பது நல்லது. அதிக உதிரப்போக்கு ஏற்படக்கூடிய சமயங்களில் இது உதவும்.

எப்போதும் ஒரு பாலிதீன் பையை உடன் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் கறை படிந்த உடைகளை அதில் போட்டு பாதுகாப்பாக வைக்க முடியும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலிகளை பயணத்தின்போது சமாளிப்பது சற்றே சிரமமானது. எனவே ஹீட்டிங் பேடு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.

பயணத்தின்போது இறுக்கமான ஆடைகளை அணியாமல், அடர் நிறத்தில் இருக்கும் மெல்லிய பருத்தி உடைகளை அணியலாம். இதன் மூலம் அந்தரங்க பகுதிகளில் வியர்வை படிவதன் காரணமாக அரிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

அதிக அளவு உதிரப்போக்கை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை பயணத்தின்போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பப்பாளி, எள் போன்றவற்றை கொண்டு தயாரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. பயணத்தின்போது எலுமிச்சம் பழச்சாறு அதிகமாக குடிப்பதன் மூலம் உதிரப்போக்கை கட்டுப்படுத்த முடியும்.

பயணத்தின்போது சுத்தமான கழிப்பறைகள் எங்கு இருக்கின்றன என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

மாதவிடாய் நாட்களில் செய்ய வேண்டியவையும், கூடாதவையும்:

ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் தொடங்கும் மற்றும் முடிவடையும் நாட்களை தவறாமல் குறித்து வையுங்கள்.

மாதவிடாய் நாட்கள் நெருங்கும் சமயத்தில், உடல் மற்றும் மன ரீதியாக அதற்கு தயாராகுங்கள்.

மாதவிடாய் நாட்களில் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். மிதமான சூடுள்ள தண்ணீர் குடிப்பது நல்லது.

தினமும் இரவில் எட்டு மணி நேரம் ஆழ்ந்து தூங்குங்கள். இதன்மூலம் ஹார்மோன்கள் சமநிலைப்படும்.

மாதவிடாய் நாட்களில் இனிப்புகள், நொறுக்குத்தீனிகள் மீது அதிக ஈர்ப்பு ஏற்படும். சர்க்கரை சேர்த்த பொருட்களை அதிகமாக சாப்பிடும்போது மன அழுத்தம் அதிகரிக்கும். அதிகப்படியான உப்பு கலந்த உணவுகள் உடலில் வீக்கத்தை உண்டாக்கும்.

மிதமான நடைப்பயிற்சி, யோகா போன்ற பயிற்சி களைச் செய்யலாம்.

மேலும் செய்திகள்