< Back
பொழுதுபோக்கு
சூடான பொருட்களைக் கையாள உதவும் ஹாட் கிளவுஸ்
பொழுதுபோக்கு

சூடான பொருட்களைக் கையாள உதவும் 'ஹாட் கிளவுஸ்'

தினத்தந்தி
|
30 July 2023 7:00 AM IST

சமையல் அறையில் சூடான பாத்திரங்கள் மற்றும் குக்கர்களை கையாள ‘ஹாட் கிளவுஸ்கள் (சூட்டை தாங்கும் கையுறை)’ பயன்படுத்தலாம். மைக்ரோவேவ் சாதனங்களின் உள்ளே வைக்கப்படும் பாத்திரங்களில் அதிக சூடு இருக்கும். அவற்றை பாதுகாப்பாக கையாள்வதற்கு ஹாட் கிளவுஸ்கள் உதவும்.

மையல் அறையில், அடுப்பில் இருந்து சூடான பாத்திரங்களை பாதுகாப்பாக இறக்கி வைப்பதற்கும், சூடான பொருட்களை கையாள்வதற்கும் சிறு துணியை பயன்படுத்துவோம். இருந்தாலும், சில நேரங்களில் நம்மையும் அறியாமல் சூடு மற்றும் தீக்காயங்கள் ஏற்படுவது உண்டு.

இதைத் தவிர்ப்பதற்கு சமையல் அறையில் சூடான பாத்திரங்கள் மற்றும் குக்கர்களை கையாள 'ஹாட் கிளவுஸ்கள் (சூட்டை தாங்கும் கையுறை)' பயன்படுத்தலாம்.

மைக்ரோவேவ் சாதனங்களின் உள்ளே வைக்கப்படும் பாத்திரங்களில் அதிக சூடு இருக்கும். அவற்றை பாதுகாப்பாக கையாள்வதற்கு ஹாட் கிளவுஸ்கள் உதவும். இந்த கையுறைகளை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று இங்கே பார்ப்போம்.

செய்முறை:

1. பயன்படுத்தாத பழைய ஜீன்ஸ் அல்லது ஏதேனும் கனமான துணியை எடுத்து அதை இரண்டாக மடித்துக்கொள்ளுங்கள். பின்பு உங்கள் கைகளை துணியின் மீது வைத்து, பெருவிரல் தவிர மற்ற 4 விரல்களையும் சேர்த்து வைத்தாற்போல அவுட்லைன் வரைந்துக்கொள்ளுங்கள். அதில் இருந்து ஒரு அங்குல அளவு அதிகமாக அளந்து துணியை வெட்டிக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் கை அளவுகொண்ட 2 துண்டு துணிகள் கிடைக்கும்.

2. இந்த அளவைக் கொண்டு ஒரு பருத்தித் துணியின் மீது வரைந்து, இதே அளவில் 10 துண்டுகள் வெட்டிக்கொள்ளுங்கள்.

3. இப்போது ஒரு ஜீன்ஸ் துணி துண்டுடன், 5 பருத்தித் துணி துண்டுகள் வீதம் 2 செட்களாக பிரித்துக்கொள்ளுங்கள்.

4. பின்னர் ஒரு செட் துணிகளை எடுத்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, அவற்றின் மேலே நடுப்பகுதியில் சாய்வாக ஒரு தையல் போடுங்கள். அதை போலவே குறுக்கும், நெடுக்குமாக கட்டங்கள் போட்டதுபோல தையல் போட்டுக்கொள்ளுங்கள்.

5. இதை போலவே மற்றொரு செட் துணிகளையும் தைத்துக்கொள்ளுங்கள்.

6. இப்போது தைத்து வைத்துள்ள கை வடிவிலான இரண்டு துணிகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக உள்பக்கமாக வைத்து, சுற்றிலும் கை வடிவிலேயே தைத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் இணைத்த பின்னர் அதை வெளிப்பக்கமாக மாற்றி எடுத்தால், சூடு தாங்கும் கையுறை தயார். கடைசியாக கையுறையின் அடிப்பகுதியையும் சீராக மடித்து தையல் போடுங்கள். இதைப்போல மற்றொரு கையுறையையும் தயாரித்துக் கொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்