< Back
பொழுதுபோக்கு
பண்டிகைக்கால வீட்டு அலங்காரம்
பொழுதுபோக்கு

பண்டிகைக்கால வீட்டு அலங்காரம்

தினத்தந்தி
|
8 Jan 2023 7:00 AM IST

மாவிலைத் தோரணம், வண்ண மலர்கள் கொண்டு வீடு முழுவதும் அலங்கரித்தால், பண்டிகை களைக்கட்டும்.

ண்டிகை என்றாலே அனைவரது வீடும் விழாக்கோலம் பூண்டிருக்கும். அதிலும், பொங்கல் பண்டிகையின் போது வண்ணம் பூசப்பட்ட சுவர்கள், வாசல் கோலங்கள் என்று பார்க்கவே பரவசம் பொங்கும். அவ்வாறு, இந்த வருட பொங்கல் பண்டிகைக்கு வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்:

பொங்கல் பண்டிகைக்கு வீட்டை அலங்கரிப்பதற்கு முன்பு பண்டிகையின் சிறப்பை தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும், இதனை கிராமத்து பாணியில் கொண்டாடவே பலரும் விரும்புவார்கள். பொங்கல் பண்டிகை 4 நாள் கொண்டாட்டம் என்பதால், ஒவ்வொரு நாளும் அதற்கேற்ப வீட்டை அலங்கரிக்கலாம்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் நகரவாசிகள் பலருக்கு பொங்கல் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாட ஆசை இருந்தாலும், அதற்கான இடவசதி இருக்காது. பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் பால்கனி இருக்கும். இங்கு பாரம்பரிய முறைப்படி வண்ணப் பொடிகள், மலர்களைக் கொண்டு கோலம் வரையலாம். வண்ணம் பூசப்பட்ட பொங்கல் பானைகளை அவரவர் கற்பனைக்கேற்ப அடுக்கி வைத்து அலங்கரிக்கலாம். கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை இருபுறமும் நிறுத்தி வைக்கலாம். பால்கனியில் இருக்கும் இட வசதிக்கேற்ப மண் அடுப்பில் பானை வைத்தும் சமைக்கலாம்.

பழைய பொருட்களைக்கொண்டு, வித்தியாசமான கைவினைப் பொருட்கள் தயாரித்து வீட்டை அலங்கரிக்கலாம். சிறிய அளவிலான மண்பானைகளை வாங்கி, அதில் அலங்கார விளக்குகளைப் பொருத்தி தொங்கவிடலாம். சுவர்களில், வண்ண காகித அலங்காரங்கள் தயாரித்து ஒட்டினால் பார்க்க அழகாக இருக்கும்.

கரும்பை வீட்டின் மூலைகளில் நிறுத்தி வைக்கலாம். சுவர்களில் அழகாக ஒட்டி வைக்கலாம். இது பார்க்க அழகாக இருப்பதுடன், வித்தியாசமாகவும் இருக்கும். சுவர்களில் வித்தியாசமான கோலங்களை வரைந்து அலங்கரிக்கலாம். மாவிலைத் தோரணம், வண்ண மலர்கள் கொண்டு வீடு முழுவதும் அலங்கரித்தால், பண்டிகை களைக்கட்டும்.

வீட்டை அலங்கரிக்க தற்போது வெள்ளி போன்றே இருக்கும் 'கல் வெள்ளி உலோகம்' மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை உங்கள் வசதிக்கேற்ப வீட்டில் தோரணங்களாகவும், சுவர்கள், பூஜை அறை, சமையல் அறை என வீடு முழுவதும் அலங்காரங்களாகவும் மாட்டி வைக்கலாம். இதனால் நகர்ப்புற வீடாக இருந்தாலும் பாரம்பரியமும், கிராமப்புற கலைநயமும் கலந்து காட்சி அளிக்கும்.

கிராமப்புற பாணியில் வீட்டை அலங்கரிக்க விரும்பினால், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட லாந்தர் விளக்குகள் போன்றே அலங்கார விளக்குகள் கிடைக்கின்றன. பேட்டரி மற்றும் மின்சாரத்தால் இயங்கும் வகையில் அமைந்துள்ள இதை வீட்டின் சுவர்களில் அழகாக மாட்டி வைக்கலாம்.

மேலும் செய்திகள்