< Back
பொழுதுபோக்கு
வருமானத்துக்கு வழிகாட்டும் பசை தயாரிப்பு
பொழுதுபோக்கு

வருமானத்துக்கு வழிகாட்டும் பசை தயாரிப்பு

தினத்தந்தி
|
19 Feb 2023 7:00 AM IST

தயாரிக்கும் பசையை மொத்தமாகவும், சில்லறையாகவும் சந்தைப்படுத்தலாம். தொழிற்சாலை, பெரிய கடைகள், தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் மொத்தமான ஆர்டரின் பெயரில் தயாரித்து விற்பனை செய்யலாம்.

சுயதொழில் தொடங்கும் ஆர்வம் கொண்டவர்கள், நீங்கள் தயாரிக்கப்போகும் பொருளுக்கான தேவை, தன்மை மற்றும் தரம் ஆகியவற்றை மனதில் கொண்டு செயல்பட்டால் எளிதாக வெற்றி பெற முடியும். அந்த வகையில் பல தொழில்களுக்கு மூலப்பொருளாக விளங்கும் ஒட்டும் பசை தயாரிப்பது தொடர்பாக தெரிந்துகொள்வோம்.

பை மற்றும் அட்டைப் பெட்டி தயாரித்தல், ஜவுளித் துறை, பட்டாசு தயாரித்தல், கலை மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரித்தல் என பல பொருட்களின் தயாரிப்புக்கு மூலப்பொருளாகப் பயன்படுவது ஒட்டும் பசை.

பாரம்பரியமான காகித பசை, நீர்ப்புகா பசை, பசை பவுடர், பிசின், வெள்ளைப்பால் பசை, பாலிமர் கலவைகள், பிவிஏ பசை, சிலிக்கேட் பிசின், தச்சுப் பசை, மாவுப் பசை, ஸ்டார்ச் பசை, டைட்டானியம் பசை, மரப்பசை, கேசின் பசை போன்ற பல வகையான பசைகள் உள்ளன. உலர்த்தும் முறை மற்றும் பொருளின் ஒட்டும் தன்மைக்கு ஏற்றவாறு இவற்றின் வகைகள் மாறுபடும்.

பசை தயாரிப்புக்கு மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு அல்லது கோதுமை மாவை மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம். இவையே பசை தயாரிப்பின் அடிப்படை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பசையின் வகைக்கு ஏற்ப இவற்றை பயன்படுத்தலாம்.

தயாரிக்கும் பசையை மொத்தமாகவும், சில்லறை யாகவும் சந்தைப்படுத்தலாம். தொழிற்சாலை, பெரிய கடைகள், தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் மொத்தமான ஆர்டரின் பெயரில் தயாரித்து விற்பனை செய்யலாம்.

'நீட்ஸ்' (NEEDS) மற்றும் ஸ்டான்ட்-அப் (STAND-UP) ஆகிய அரசு திட்டங்கள் மூலம் மானியம் அல்லது கடன் பெற்று பசை தயாரிப்பு தொழிலைத் தொடங்கலாம். ஒட்டும் பசைக்கு தேவை அதிகம் இருப்பதால், சிறிய அளவில் தயாரித்தாலும் நிறைவான வருமானம் ஈட்ட முடியும்.

வீட்டிலேயே பசை தயாரிக்கும் முறை:

பி.வி.ஏ. பசை - தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 100 கிராம்

தண்ணீர் - ½ லிட்டர்

ஜெலட்டின் - 5 கிராம்

கிளிசரால் - 4 கிராம்

எத்தனால் - 10 மில்லி கிராம்

செய்முறை:

முதலில் ஜெலட்டினை திரவ நிலைக்கு கொண்டு வந்து, பின்னர் நீராவியில் வேக வைக்கவும். ஜெலட்டின் முற்றிலுமாக கரைந்தவுடன், அதில் கோதுமை மாவை சிறிது சிறிதாகக் கொட்டி குறைவான தீயில் கட்டி இல்லாமல் கிளற வேண்டும். கலவை நன்றாக கெட்டி ஆனதும், அடுப்பில் இருந்து இறக்கி அதில் கிளிசரால் மற்றும் எத்தனால் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவை நன்றாக குளிர்ந்தபின்பு பசையாகப் பயன்படுத்தலாம்.

குறிப்பு: தயாரித்த பின்னர் பசை நீர்த்துப்போனால், அதன் தரத்தில் பாதிப்பு உண்டாகும். அதைத் தவிர்க்க, ஒரு கொள்கலனில் தண்ணீர் ஊற்றி, அதன் மேல் மற்றொரு பாத்திரம் வைத்து அதில் நீர்த்துப்போன பசை கலவையை ஊற்றி, ஒரு கொதி நிலைக்கு வரும்வரை சூடு செய்யலாம்.

மேலும் செய்திகள்