< Back
பொழுதுபோக்கு
வருமானம் தரும் பரிசுப் பொருட்கள் தயாரிப்பு
பொழுதுபோக்கு

வருமானம் தரும் பரிசுப் பொருட்கள் தயாரிப்பு

தினத்தந்தி
|
12 Feb 2023 7:00 AM IST

நெருங்கிய தோழியின் திருமணத்துக்கு, புதுமணத் தம்பதியினரின் உருவங்களை 3டி மாடலாக வடிவமைத்து பரிசளிக்கலாம். நீங்கள் அளிக்கும் அத்தகைய பரிசு தனித்துவமாகத் தெரிவதுடன், உங்கள் அன்பையும், அக்கறையையும் பறைசாற்றும்.

னித்துவமான பரிசுப் பொருட்கள், பார்ப்பவர் மனதில் உடனடியாக இடம் பிடிக்கின்றன. நெருக்கமானவர்களின் பிறந்தநாள் அல்லது முக்கியமான விசேஷ நாட்களில், கடைக்குச் சென்று ஏதேனும் ஒரு பரிசுப் பொருளை வாங்கிக் கொடுப்பது எளிதானதுதான். ஆனால், அவர்களுக்காக கூடுதல் அக்கறையுடன் முன்னரே திட்டமிட்டு, மற்ற யாரும் அளிக்காத சிறப்பான பரிசை கொடுக்கும்போது, அவர்கள் மனதில் ஏற்படும் மகிழ்ச்சி அளவற்றது.

பரிசுப் பொருளில் ஒருவருடைய பெயரை பொறித்து அளிப்பது, உருவத்தை வடிவமைப்பது, புகைப்படத்தை அச்சடிப்பது என எண்ணற்ற வகைகள் உள்ளன. பல இணையதள நிறுவனங்கள் இந்த சேவையை செய்து தருகின்றன.

நீங்கள் ஓவியம் வரைவது கைவினைப் பொருட்கள் தயாரிப்பது போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர் என்றால், உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு பரிசுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யலாம். உதாரணத்திற்கு உங்களுக்கு கிளேயில் 'பிரிட்ஜ் மேக்னட்' செய்யத் தெரியும் என்றால், அதில் உங்கள் வாடிக்கையாளரின் பெயரை அழகாகப் பொறித்து கொடுக்கலாம். 'பாட்டில் பெயிண்டிங்' செய்வதில் வல்லவர் என்றால், அந்தப் பாட்டிலின் நடுவே புகைப்படத்தை பதித்து, அதனை அழகான போட்டோ பிரேமாக உருவாக்கிக் கொடுக்கலாம்.

தற்போதைய நாட்களில், விழாவிற்கு வரும் விருந்தினர்களுக்கு 'ரிடர்ன் கிப்ட்' அளிக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அளிப்பதிலும் தனித்துவத்தைக் காட்ட முடியும். உதாரணமாக, பிறந்தநாள் விழாவுக்கு வருகை தரும் குழந்தைகளுக்கு ஏதோ ஒரு அன்பளிப்பைக் கொடுப்பதை விட, அவர்களுடைய பெயர் பொறித்த தண்ணீர் பாட்டில் அல்லது அவர்களுடைய புகைப்படம் கொண்ட போட்டோ பிரேம் போன்ற பரிசுகளை அளிக்கலாம். அந்தப் பரிசை அக்குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பாதுகாப்பார்கள்.

நெருங்கிய தோழியின் திருமணத்துக்கு, புதுமணத் தம்பதியினரின் உருவங்களை 3டி மாடலாக வடிவமைத்து பரிசளிக்கலாம். நீங்கள் அளிக்கும் அத்தகைய பரிசு தனித்துவமாகத் தெரிவதுடன், உங்கள் அன்பையும், அக்கறையையும் பறைசாற்றும்.

வீடு கிரகப்பிரவேசம் செய்பவர்களுக்கு பரிசளிக்கும்போது, அந்த தம்பதியினர் அவர்களின் புது வீட்டில் எடுத்து வைக்கும் முதல் காலடி தடத்தை சிமெண்டில் பதிந்து கொடுப்பது, குழந்தைகளின் அறைகளுக்கு அவர்கள் பெயர் பொறித்த அழகான பதாகைகளை செய்து கொடுப்பது, இல்லத்தரசிக்குப் பிடித்த உணவுப் பண்டங்களை அவர் பெயருடன் 'கிளே' மாடலாக செய்து அளிப்பது என தனித்துவமான முறையில் பலவகையான பரிசுகளை கொடுக்கலாம்.

இவ்வாறு, பரிசுப் பொருட்கள் தயாரிப்பதைத் தொழிலாக செய்ய ஆரம்பிக்கும் முன்பு, இணையத்தை ஆராய்ந்து பல்வேறு ஐடியாக்களை தெரிந்துகொள்ளுங்கள். உள்ளூரில் உங்களுக்கு அத்தகைய சேவைகளை குறைந்த கட்டணத்தில் தரமாக யார் வழங்குவார்கள் என தேடி, சில ஐடியாக்களை மாடலாக செய்து வைத்துக் கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களை அணுகி இவற்றைக் காண்பித்து ஆர்டர்களை பெறலாம்.

பிறகு உங்கள் கற்பனை மற்றும் வாடிக்கையாளரின் தேவைகளுக்கேற்ப தொழிலை விரிவுப்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு கலை ரசனையும், வாடிக்கையாளர்களின் விருப்பம் அறிந்து பேசும் திறனும் இருந்தால், சுலபமாக இதை பெரிய அளவில் செய்ய முடியும்.

மேலும் செய்திகள்