பெண்களுக்கு ஏற்ற 'பூக்கள் உற்பத்தி' தொழில்
|மலர் வளர்ப்பு குறித்து, தமிழ்நாடு வேளாண் துறையில் பயிற்சிகள் மற்றும் வகுப்புகள் நடக்கின்றன. அவற்றின் மூலம் பூக்கள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறையை கற்றுக்கொள்ளலாம். தொழில் தொடங்குவதற்கான மானியமும் பெற முடியும்.
உலகம் முழுவதும் நடக்கும் சடங்குகள், மங்கல விழாக்கள், பண்டிகைகள் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பூக்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பூக்கள் உற்பத்தி மற்றும் விற்பனை என்பது தினசரி பயன்பாட்டுக்கானது என்பதைக் தாண்டி பூச்செண்டு தயாரிப்பு, மணமகள் அலங்காரம், அழகு மற்றும் நறுமணப் பொருட்கள் தயாரிப்பு என பல நிலைகளை அடைந்துள்ளது. இதை தொழிலாக தொடங்குவதற்கான ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.
முதலில் எத்தகைய தேவைக்காக நீங்கள் பூக்களை உற்பத்தி செய்யப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். பூக்கள் வளர்ப்பு தொழிலைப் பொறுத்தவரை தினசரி பயன்பாடு, அலங்காரம் மற்றும் அழகுப் பொருட்கள் தயாரிப்பு என மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. குறைந்த முதலீட்டில் இந்த தொழிலை தொடங்க முடியும். தொடக்கத்தில் உங்கள் வீட்டுத் தோட்டம் அல்லது மாடித் தோட்டத்திலேயே இதற்கான பூக்களை உற்பத்தி செய்யலாம்.
தினசரி பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்யும்போது, உங்களுடைய வட்டார சந்தையின் தேவைகளைப் பொறுத்து பூச்செடிகளை பயிரிட்டு வளர்க்கலாம். உதாரணமாக, சாமந்தி, மல்லி, ரோஜா, பாரிஜாதம், செம்பருத்தி, அரளி, மரிக்கொழுந்து, மகிழம் பூ, வாடாமல்லி, சம்பங்கி போன்றவற்றை, அவற்றின் சீசன் இல்லாத சமயங்களிலும் கிடைக்கும்படி காலத்தை கணக்கிட்டு வளர்ப்பது அதிக லாபம் தரும்.
அலங்காரம் மற்றும் பரிசாக வழங்குவதற்கு டாபோடில், ரோஜா, அல்லி, டெய்சி குடும்பத்தைச் சேர்ந்த ஜெர்பெரா, ஆர்க்கிட், கார்னேஷன், பியோனி போன்ற மலர்களை வளர்க்கலாம்.
மணப்பெண் அலங்காரத்துக்கு கார்னேஷன், டெய்சி, கார்டெனியா, ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா, டியூலிப், காலா அல்லி வகை, பெருமல்லி, ஆர்க்கிட்ஸ், காகித மலர் எனும் போகன்வில்லா, வெள்ளை அரளி, டேலியா, பானிசி, பேபி பிரீத் மலர் என்று அழைக்கக்கூடிய ஜிப்சோபிலா மற்றும் ரோஜா வகைகள் ஆகியவற்றை ஆர்டரின் பெயரில் வளர்க்கலாம்.
நறுமண மற்றும் அழகுப் பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படும் மல்லி, ரோஜா, லாவண்டர், ப்ளூமேரியா, அல்லி, சம்பங்கி போன்றவற்றையும், மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படும் தாமரை, பிகோனியா, கிரிஸாந்தமம்ஸ், லாவண்டர், சாமந்தி, சங்குப் பூ, செம்பருத்தி, கார்னேஷன், கார்டெனியா, மற்றும் கசகசா செடியின் பூக்கள் போன்றவற்றையும் பயிரிடலாம். இவை வருடம் முழுவதும் வருமானம் தரக்கூடியவை.
மலர் வளர்ப்பு குறித்து, தமிழ்நாடு வேளாண் துறையில் பயிற்சிகள் மற்றும் வகுப்புகள் நடக் கின்றன. அவற்றின் மூலம் பூக்கள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறையை கற்றுக்கொள்ளலாம். தொழில் தொடங்குவதற்கான மானியமும் பெற முடியும்.
இத்தகைய பூக்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில், 'சந்தைப்படுத்துதல்' என்பது மிகவும் முக்கியமானது. மலர்களின் ஆயுட்காலம் குறைவு என்பதால், அதற்கு ஏற்றார்போல் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். நீங்கள் வளர்க்கும் அனைத்து விதமான பூக்களையும், ஆன்லைன் மூலமாக வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யலாம். வெளிநாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதி செய்ய ஐ.இ.சி. உரிமம் (IEC License) பெறுவது அவசியம். பூக்கள் பூக்காத காலத்தில், பூச்செடிகளை விற்பனை செய்தும் லாபம் ஈட்டலாம்.