தமிழ் மொழியை வளர்க்கும் தருமாம்பாள்
|பெண்மை என்றாலே மென்மை என்று கூறப்படுகிறது. ஆனால் சில சமயம் அவள் நீறுபூத்த நெருப்பாக இருப்பாள் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பெண், உணர்வில் ஆணிடமிருந்து வேறுபட்டவள் எனப்படுகிறது. இது முற்றிலும் உண்மையல்ல.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்து 22 வருடங்களாக மஸ்கட்டில் வாழ்ந்து வருபவர் தருமாம்பாள் சீனிவாசன். இவர் அங்குள்ள குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ் மொழியை கற்றுக் கொடுக்கிறார்.
மஸ்கட் தமிழ்ச் சங்கம் நடத்தும் வகுப்புகளில் தன்னார்வ தமிழாசிரியர், தன்னம்பிக்கை பேச்சாளர், 1993-ம் ஆண்டில் காரைக்குடியில் திறந்து வைக்கப்பட்ட தமிழ்த்தாய் திருக்கோவிலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெருமைக்குரியவர், 2020-ம் ஆண்டில் டெல்லி கலை இலக்கிய பேரவை மற்றும் உலகத் தமிழ்ச்சங்கம் இணைந்து வழங்கிய சாதனையாளர் விருதுகளில் 'நாவரசி' என்ற விருது, ஸ்ரீசக்தி விருது, தமிழால் இணைவோம் - உலகத் தமிழ்ப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ் வளர்ச்சிப் பணிகளை போற்றும் விதமாக 2022-ம் ஆண்டுக்கான 'தங்கமங்கை' விருது போன்ற பல்வேறு விருதுகள் பெற்றவர்.
இவரிடம் பேசியதிலிருந்து…
உங்களுடைய முதல் மேடை அனுபவம் பற்றி?
எனது பேச்சுத்திறனின் அடிப்படை ஆசான் என் தந்தை. அவருடைய தணியாத தமிழ் தாகமே, எங்கள் தமிழ்ப்பற்றின் அச்சாணி. முதல் மேடை எனது ஒன்றே முக்கால் வயதில் 10 குறள்களை ஒப்புவித்தது ஆகும். குன்றக்குடி அடிகள் தலைமையில் அந்த நிகழ்ச்சி நடந்தது. அதில் 'குறள் செல்வி' பட்டம் பெற்றேன். பின்னர் பள்ளி, கல்லூரி நாட்களில் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். காரைக்குடி கம்பன் விழாவில் இரண்டு முறை மற்றும் சென்னை கம்பன் கழக விழாக்களில் பங்குபெற்றிருக்கிறேன்.
திருமணத்திற்கு முன் இன்றைய முன்னணி பட்டிமன்ற நடுவர்களின் தலைமையில் பல நிகழ்ச்சிகளிலும் காரைக்குடி மற்றும் மஸ்கட் அரட்டை அரங்கத்திலும் பங்கேற்றிருக்கிறேன். நான் அடிப்படையில் உயிரியல் ஆசிரியை. ஆனால், தமிழ் தான் எனது உயிர் என்று சொல்வேன். தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் எனது பங்கு சிறிதளவேனும் இருப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்.
மேடைப்பேச்சு மூலமாக பெண்களுக்கு நீங்கள் சொல்லும் கருத்துகள் என்ன?
பெண்மை என்றாலே மென்மை என்று கூறப்படுகிறது. ஆனால் சில சமயம் அவள் நீறுபூத்த நெருப்பாக இருப்பாள் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பெண், உணர்வில் ஆணிடமிருந்து வேறுபட்டவள் எனப்படுகிறது. இது முற்றிலும் உண்மையல்ல. ஆண்-பெண் இருவருக்கும் ஆக்கப்பூர்வமான உணர்வுகளும், அறிவுப்பூர்வமான உணர்வுகளும் உண்டு. ஆனால் அதை வெளிப் படுத்துவதில் தான் இருபாலருக்கும் வித்தியாசங்கள் இருக்கிறது. பெண் தனது மனதில் உள்ளதை எளிதில் வெளிப்படுத்துவதில்லை.
அன்பு சூழ்ந்த உலகத்தை உருவாக்குவதில் பெண்களின் பங்கு மிக முக்கியம். தங்கள் அன்பை குடும்பத்தினருக்கு அளித்து, இல்லறக் கடமைகளை நிறைவேற்றுவதிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.
மஸ்கட்டில் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் என்ன?
மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் மூலம் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளும், இங்குள்ள மக்களின் திறமைகளை வெளிக்கொணரும் விழாக்களும் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. அதில் நானும் இணைந்து செயல்படுகிறேன். நமது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் பணியை தமிழ்ச்சங்கம் பல ஆண்டுகளாக செய்து வருகிறது. தமிழ் மக்களின் அயராத உழைப்பாலும், தொடர் முயற்சியாலும் மஸ்கட் நகரின் பள்ளிகளில் தற்போது இரண்டாம் பாட மொழியாகத் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக சென்ற வருடம் முதன் முறையாக தமிழை மொழிப் பாடமாக தொடங்கிய பள்ளிகளில் ஒன்றாக நான் பணியாற்றும் பள்ளி அமைந்தது. தமிழ்ச்சங்கத்தின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளை இந்த கொரோனா காலத்தில் செய்தோம். நானும் அதன் ஒரு பகுதியாக கணவருடன் இணைந்து செயல்பட்டது மனதிற்கு நிறைவான நிகழ்வு.
மாணவர்களின் கல்வி மேம்பாடு பற்றி உங்கள் கருத்து?
மாணவர்கள் வருங்கால சமுதாயத்தின் ஆணிவேர்கள். மதிப்பெண்கள் மட்டுமே அவர்களது வாழ்க்கை அல்ல. பள்ளி என்பது ஒரு மாணவனின் அறிவை வளர்ப்பதோடு மட்டுமில்லாமல், சமுதாயத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை பயிற்றுவிக்கும் ஒரு நிலையம்.
எனவே மாணவர்கள் தங்களது படிப்போடு சேர்த்து ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்ளுமாறு, நீதிபோதனை வகுப்பு, ஆளுமை பயிற்சி வகுப்புகள் முதலியவற்றை புகுத்தி பாடத்திட்டங்களை மேலும் மேம்படுத்த வேண்டியது நமது உடனடித் தேவை. ஏனெனில் மாணவர்கள் உள்ளதை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றவர்கள். நாம் எதைக் கொடுக்கிறமோ, அதை உள்வாங்கி மேலும் அழகாக மிளிர்பவர்கள்.
அதனால் எதிர்கால சமுதாயத்தின் தூண்களான மாணவர்களை சமுதாய நோக்கத்தோடு, ஒழுக்கத்தையும் பயிற்றுவிக்கும் கல்வியாக நமது பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.