< Back
ஆளுமை வளர்ச்சி
அலுவலக சூழலை சுமூகமாக்கும் வழிகள்
ஆளுமை வளர்ச்சி

அலுவலக சூழலை சுமூகமாக்கும் வழிகள்

தினத்தந்தி
|
3 Sept 2023 7:00 AM IST

புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கும்போது, ஒருவரிடம் அனுபவம் இருக்கிறதா என்பதை மட்டும் பார்க்காமல் திறமையும், அர்ப்பணிப்புத் தன்மையும் இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.

கொரோனா தொற்றுநோய் காலகட்டத்துக்கு பின்பு, பெண் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு வகையான தொழில்களை முன்னெடுத்து பெண்கள் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.

ஒரு தொழில் நல்ல முறையில் வெற்றி பெறுவதற்கு முதன்மையான காரணம் வாடிக்கையாளர்கள்தான். அதேசமயம், தரமான வாடிக்கையாளர் சேவையை வழங்கும் அலுவலக ஊழியர்களும் முக்கியமானவர்கள்.

உங்கள் அலுவலக ஊழியர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு உங்களுடைய வாடிக்கையாளர்கள் தரமான சேவையை பெறுவார்கள். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக இருப்பவர், ஒவ்வொரு வாடிக்கையாளர்களையும் நேரடியாக சந்திப்பது சிரமமான காரியமாகும். உங்களுடைய தயாரிப்பை நல்ல முறையில் வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பவர்கள் ஊழியர்கள். அந்த வகையில் ஊழியர்களின் மனநிறைவு, நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரியும் என்பதை பெண் தொழில்முனைவோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அலுவலகத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரும் வேலையில் முழுமனதுடன் ஈடுபட வேண்டும். அத்தகைய சூழலை அலுவலகத்தில் உருவாக்க வேண்டியது முக்கியமாகும்.

ஒரு வேலையை யாரிடத்தில் ஒப்படைத்தால் அதை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பதை தெளிவாக ஆராய்ந்து, அவரிடம் அந்த வேலையைக் கொடுக்க வேண்டும். இதில் வேலையைப் பற்றிய அறிவு, திறமை ஆகியவற்றை மட்டும் கவனிக்காமல், அந்த ஊழியருக்கு நீங்கள் கொடுக்கும் வேலை பிடித்திருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.

புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கும்போது, ஒருவரிடம் அனுபவம் இருக்கிறதா என்பதை மட்டும் பார்க்காமல் திறமையும், அர்ப்பணிப்புத் தன்மையும் இருக்கிறதா என்பதையும் பாருங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஊழியர் எதிர்காலத்தில் உங்கள் நிறுவனத்தில் எத்தகைய மாற்றத்தை கொண்டு வருவார் என்பதை பற்றியும் சிந்தியுங்கள்.

தொழிலில் வெளிப்படைத்தன்மை என்பது மிகவும் அவசியம். உங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் நீங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்வது முக்கியமானது. ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து வேலை செய்யும் இயந்திரங்கள் அல்ல. அவர்களுக்கும் சோர்வு ஏற்படும். ஓய்வு தேவைப்படும். அத்தகைய நேரத்தில் அவர்களின் மனநிலையைப் பொறுத்து, அவர்களுக்கு வேண்டிய வழிவகைகளை செய்துகொடுங்கள். இதன்மூலம் ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் வேலை செய்வார்கள்.

ஒரு ஊழியர் தன்னுடைய ஆலோசனையை கூறும்போது அதை காதுகொடுத்து கேளுங்கள். சிறு சிறு முயற்சிகளாக இருந்தாலும் ஊழியர்களைப் பாராட்ட மறக்காதீர்கள். ஒரு நிறுவனத்தின் முதலாளியிடம் இருந்து கிடைக்கும் பாராட்டை, ஊழியர்கள் பெரிதாக நினைப்பார்கள். அது அவர்கள் மேலும் கடுமையாக உழைப்பதற்கான ஊக்க சக்தியாக செயல்படும்.

மேலும் செய்திகள்