பெண்களுக்கு ஏற்ற விர்ச்சுவல் அசிஸ்டென்ட் வேலை
|உங்கள் வீட்டில் இருந்தபடி பகுதி நேரமாக விர்ச்சுவல் அசிஸ்டென்ட் பணியை செய்து வருமானம் ஈட்டலாம். பிரீலான்சராக செயல்படும்போது உங்கள் நேரத்தைப் பல நிறுவனங்களுக்குப் பகிர்ந்து அளிக்க முடியும்.
சில பெண்கள் பட்டப்படிப்பு படித்து, ஆங்கில மொழியில் புலமை பெற்று இருப்பார்கள். ஆனால் இவர்களால் வெளியே சென்று, ஒரு நிறுவனத்தில் முழுநேர வேலை செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். அதனால் பெரும்பாலும் வீட்டில் இருந்தவாறே பணியாற்றுவதை விரும்புவார்கள். அத்தகைய பெண்களுக்கு ஏற்றது விர்ச்சுவல் அசிஸ்டென்ட் பணி. இதைப் பற்றிய தகவல்கள் இங்கே...
விர்ச்சுவல் அசிஸ்டென்ட் என்றால் என்ன?
ஒரு நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பவர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்கள், தங்களுடைய அன்றாட அலுவலகப் பணிகளை ஒழுங்குபடுத்தி அமைப்பதற்கு உதவியாக தனிச்செயலர்களை நியமிப்பார்கள். அவர்களின் தொழில்முறை பயணத்துக்கு டிக்கெட் புக் செய்வது, தங்கும் விடுதியில் அறை புக் செய்வது போன்ற வேலைகளை தனிச்செயலர் மேற்கொள்வார். ஒவ்வொரு நாளும் நடைபெறும் தொழில்முறை சந்திப்புகளை நிர்மாணித்து வரிசைப்படுத்தி அட்டவணை அளிப்பார். இந்த பணிகளையே தொலைவில் இருந்துகொண்டு தொழில்நுட்ப உதவியோடு ஆன்லைன் மூலமாக மேற்கொள்வதுதான் 'விர்ச்சுவல் அசிஸ்டென்ட்' பணியாகும்.
யாருக்கெல்லாம் 'விர்ச்சுவல் அசிஸ்டென்ட்' தேவைப்படும்?
இன்று ஆயிரக்கணக்கான இணையவழி தொழில்கள் தினந்தோறும் உருவாகின்றன. ஆன்லைன் வியாபாரம் செய்யும் தொழில்முனைவோருக்கும், முழுவதுமாக ஆன்லைன் வழியாக இயங்கும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் தனிச்செயலர் தேவை. அவர்களின் வியாபார தளங்களில் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைக்கக்கூடிய 'வாடிக்கையாளர் சேவை' செய்யவும், பலவகையான பணிகளை மேற்கொள்ளவும் 'விர்ச்சுவல் அசிஸ்டென்ட்' தேவை.
விர்ச்சுவல் அசிஸ்டென்டின் வேலைகள் என்ன?
தகவல்களை பதிவு செய்வது, மின்னஞ்சல்களை கையாள்வது, வாடிக்கையாளர் சேவை, தொழில்முறை பயணத்துக்கான பணிகளை மேற்கொள்வது, சமூக வலைத்தள பக்கங்களை கையாள்வது, தொழில்முறை தொலைபேசி அழைப்புகளை கையாள்வது போன்ற வேலைகளுடன் அந்தந்த துறை சார்ந்த தொழில்நுட்ப திறமைகளும் தனிச்செயலரிடம் எதிர்பார்க்கப்படும்.
'விர்ச்சுவல் அசிஸ்டென்ட்' பணிக்கு தேவையான தகுதிகள் என்ன?
ஆங்கில மொழிப் புலமையும், கணினி அறிவும், தொடர்பு கொள்ளும் திறமையும், முடிவெடுக்கும் திறனும் அடிப்படை தகுதிகளாகும். இது தவிர அந்தந்த நிறுவனம் வரையறுக்கும் தனித்திறன்களும் தேவைப்படும்.
தனிச்செயலர் வேலையில் இதற்கு முன்பு பணியாற்றிய அனுபவம் இருந்தால், உங்களுக்கு விர்ச்சுவல் அசிஸ்டென்ட் வேலை கிடைப்பது சுலபமாக இருக்கும். பல்வேறு ஆன்லைன் தளங்களில் இந்த வேலைக்கான வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
உங்கள் வீட்டில் இருந்தபடி பகுதி நேரமாக இந்த பணியை செய்து வருமானம் ஈட்டலாம். பிரீலான்சராக செயல்படும்போது உங்கள் நேரத்தைப் பல நிறுவனங்களுக்குப் பகிர்ந்து அளிக்க முடியும்.