நடனத்தால் கிடைத்த வெற்றி - திவ்யஸ்ரீ பாபு
|இந்திய இசை, அதன் பாடல்களில் தெய்வீகத் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அத்தகைய இசையின் பாரம்பரியத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
சென்னை ராயபுரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடனப் பள்ளியை நடத்தி வருபவர் திவ்யஸ்ரீ பாபு. இவர் சென்னையில் உள்ள தமிழ் இசைக்கல்லூரியில் கர்நாடக இசைக்கலைத் தேர்வு சான்றிதழும், பரதநாட்டியத்தில் பட்டயமும் பெற்றவர். நட்டுவாங்க கலைமணி பட்டம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டிய ஆசிரியர் பட்டம், தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். பல்வேறு தொலைக்காட்சிகளில் இவருடைய தலைமையில் இசை நாட்டியாஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது. இவர் தனது கலைப் பயணத்தைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
நடனத்தின் மீது ஆர்வம் உண்டானது எப்படி?
எங்கள் குடும்பத்தினர் கலையின் மீது ஆர்வம் கொண்டவர்கள். என் அம்மாவின் தூண்டுதலால், மூன்று வயதிலேயே குரு தனவந்தனின் வழிகாட்டுதலில் ஆர்வத்துடன் நடனம் கற்றுக்கொண்டேன். அதன் பின்னர் புகழ்பெற்ற நடனக்கலைஞர்கள் சித்ரா, கவிதா சார்லஸ் ஆகியோரிடம் பயிற்சி பெற்றேன்.
தமிழ் இசைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், முனைவர் சுமதி சுந்தர் தலைமையில் பரதநாட்டியம் மற்றும் நட்டுவாங்கத்தை அரங்கேற்றி 'அபிநயசிரோன்மணி', 'நட்டுவாங்க சிரோன்மணி' போன்ற பட்டங்களைப் பெற்றேன்.
கலைமாமணி இந்திர ராஜனோடு தென்காசி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கும்பகோணம் போன்ற பல்வேறு நகரங்களில் என்னுடைய நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. சிதம்பரம், திருநள்ளாறு, திருவிழிமிழலை போன்ற இடங்களில் 'நாட்டியாஞ்சலிகள்' நடத்தி இருக்கிறேன்.
உங்கள் மாணவர்கள் குறித்து சொல்லுங்கள்?
மாணவர்களின் மனநிலையை சரியாக புரிந்துகொண்டு கற்றுக்கொடுத்தால், அவர்கள் எதையும் எளிதாகக் கற்றுக்கொள்வார்கள். என்னுடைய மாணவர்கள் தஞ்சாவூர், திருச்செந்தூர், கரூர், வடபழனி, மயிலை போன்ற பல்வேறு திருத்தலங்களிலும், சபாக்களிலும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். கலை தொடர்பான பல்கலைக்கழக தேர்வுகளில் தேர்ச்சி அடைந்து சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இவையெல்லாம் எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கலையைக் கற்றுக் கொடுப்பது தான் மனநிறைவைத் தருகிறது. இனிவரும் காலங்களில் அரசு சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளுக்குச் சென்று, இலவசமாக வகுப்புகள் எடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
இந்திய இசையின் மீது நீங்கள் கொண்டுள்ள பற்று குறித்து சொல்லுங்கள்?
நடனம் போன்று இசையின் மீதும் எனக்கு ஆர்வம் அதிகம். இந்திய இசையின் மீது எனக்கு தீராத காதல் உண்டு. இந்துஸ்தானி இசையாக இருந்தாலும், கர்நாடக இசையாக இருந்தாலும், இந்திய பாரம்பரிய இசைக்குள் ஒரு தெய்வீகத் தன்மை இயற்கையாக அடங்கியிருக்கிறது. இந்த இசை நமது ஆன்மாவை உயர்ந்த நிலைக்கு கடத்திச் செல்லும் திறன் கொண்டதாகும். இந்திய இசை, அதன் பாடல்களில் தெய்வீகத் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அத்தகைய இசையின் பாரம்பரியத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.