மோனிஷாவின் ஓவியங்கள்
|தூங்குவதற்கு முன் ஓவியங்கள் சிலவற்றை வரைந்து விடுவேன். ஓவியம் வரைவது எனக்குள் உயிராகக் கலந்துவிட்டது.
கோயம்புத்தூர் உள்ளியம்பாளையம் பகுதியில் வசித்து வரும் மோனிஷா வரையும் ஓவியங்களைப் பார்ப்பவர்கள் வியந்து பாராட்டுகின்றனர். தனது ஓவியத்தின் மூலம் 'கின்னஸ் சாதனை' படைத்து, தமிழக முதல்வரிடம் பாராட்டும், வாழ்த்தும் பெற்றிருக்கிறார்.
தனது ஓவியத் திறமைக்காக, சென்னை கல்வி அமைப்பின் மூலம் 'கவுரவ டாக்டர்' பட்டம் பெற்றிருக்கும் மோனிஷாவுடன் ஒரு சந்திப்பு.
ஓவியம் வரையும் ஆர்வம் உங்களுக்கு எப்போது வந்தது?
நான் மழலையர் பள்ளியில் படிக்கும்போதே, தொலைக்காட்சியில் வரும் கார்ட்டூன்கள், பத்திரிகைகளில் பிரசுரமாகும் கதைகளில் வரும் ஓவியங்களைப் பார்த்து வரையத் தொடங்கினேன். நாளடைவில் கோலங்கள் வரைவது, மெகந்தி போடுவது என என்னுடைய திறனை வளர்த்துக் கொண்டேன்.
சிறுவயது முதலே என் பெற்றோர், நான் ஓவியம் வரைய தேவைப்படும் பொருட்களை வாங்கித் தந்ததோடு மாறுபட்ட சிந்தனைகளை பிரதிபலிக்கும் படியான ஓவியங்களை வரைவதற்கு ஊக்குவித்தார்கள்.
உங்கள் 'ஓவிய சாதனை' பற்றி சொல்லுங்கள்?
மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த ஓவிய போட்டியில், நான் வரைந்த 'பென்சில் ஆர்ட்' பரிசை வென்றது. நடிகரும், பிரபல ஓவியருமான சிவகுமார் எனக்கு பரிசு தந்து ஊக்குவித்தார். என் முதல் போட்டி ஓவியமே பரிசுப் பெற்றதால், கல்லூரியில் படிக்கும்போதும் ஓவிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன்.
முட்டையில் ஓவியம் வரைந்து 'இந்தியா புக்ஸ் ஆப் ரெக்கார்டில்' இடம் பிடித்தேன். இரண்டரை வருடம் முயற்சி செய்து பல தடைகளை, போராட்டங்களைக் கடந்து, பதிமூன்று மணி நேரம் தொடர்ந்து வரைந்து 'கின்னஸ்' சாதனையும் படைத்தேன்.
கல்லூரியில் படிக்கும்போது, விடுமுறை தினங்களில் 'ஓவிய கல்லூரி' சென்று படித்து பட்டமும் பெற்றிருக்கிறேன்.
ஐ.டி.துறையில் பணியாற்றுவதால் இரவில்தான் வீடு திரும்புவேன். ஆனாலும், தூங்குவதற்கு முன் ஓவியங்கள் சிலவற்றை வரைந்து விடுவேன். ஓவியம் வரைவது எனக்குள் உயிராகக் கலந்துவிட்டது.
ஓவியங்கள் வரைந்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?
வாட்டர் கலர் ஓவியங்கள் சவாலானதாக இருந்தாலும், அவற்றை சீக்கிரம் வரைந்து முடித்து விடலாம். 'பென்சில் ஆர்ட்' வரைவதற்கு இரண்டு மணி நேரம் வரை ஆகலாம். 'ஆயில் பெயிண்ட்' உலர்வதற்கு நேரம் எடுக்கும் என்பதால் இருபது முதல் முப்பது நாட்கள் கூட ஆகும்.
என் பெற்றோரை ஓவியமாகத் தீட்டி இருக்கிறேன். இதுபோல் யாருடைய தோற்றத்தையும் அச்சு அசலாக வரைய முடியும். ஆனால், சிறு தவறு செய்தாலும் உருவ அமைப்பு மாறிவிடும். மிகவும் பொறுமையாக, ஆழ்ந்த கவனத்துடன் வரைய வேண்டும்.
எனவே ஓவியங்களைப் பொறுத்து, அதன் தன்மைக்கு ஏற்ப வரைந்து முடிக்கும் நேரம் மாறுபடும்.
வருங்காலத்தில் ஓவியத் துறையில் நீங்கள் செய்ய விரும்புவது என்ன?
'மோனலிசா ஓவியம்' போல, நானும் உலகம் புகழும் பல ஓவியங்களை வரைய வேண்டும். இதுவே எனது எதிர்கால லட்சியம்.