< Back
ஆளுமை வளர்ச்சி
திருக்குறளில் சாதனை செய்த சுதாதேவி
ஆளுமை வளர்ச்சி

திருக்குறளில் சாதனை செய்த சுதாதேவி

தினத்தந்தி
|
11 Jun 2023 7:00 AM IST

பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் உங்களுடைய முயற்சிகளுக்கு சவால்கள் இருக்கத்தான் செய்யும். அதையும் தாண்டி சாதனை புரியும் போது, இந்தச் சமூகம் உங்களை கொண்டாடும்.

விதாயினி, மேடைப் பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகத்திறமையோடு விளங்குகிறார் கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் பகுதியில் வசிக்கும் முனைவர் கோ.சுதாதேவி. இவர் தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார். ஒரு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலமாக சமூகப் பணிகள் செய்து வருகிறார். 300-க்கும் மேற்பட்ட மாநாடு மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு, ஆன்மிகச் சொற்பொழிவு உரையாற்றி இருக்கிறார். நற்றமிழருவி, குரல் வித்தகர் போன்ற 260-க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றிருக்கிறார். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றிய தொடர் உலக சாதனை நிகழ்வில் உரையாற்றியதற்காக இவருக்கு 'ஆரஞ்சு உலக சாதனை விருது' வழங்கப்பட்டது.

மருத ஓலை, தென்னை ஓலை, டைல்ஸ் போன்றவற்றில் திருக்குறளை எழுதியது, தொடர்ந்து 19 மணி நேரம் பாட்டும், பொருளும் என்ற தலைப்பில் பாடியது என சுதாதேவி இரண்டு உலக சாதனைகள் புரிந்திருக்கிறார். காதல் தேன் துளிகள், காதல் வார்ப்புகள், சிந்தனைக் களஞ்சியம், மகாகவி பாரதியின் மகத்துவம் போன்ற தலைப்புகளில் நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவர் எழுதி இருக்கும் வானத்துச் சுடர்கள் எல்லாம், செல்லப் பிராணிகளோடு எனது அனுபவம், ஆண் தேவதை போன்ற நூல்கள் விரைவில் வெளிவர உள்ளன. இவரிடம் பேசியதிலிருந்து:

திருக்குறளை ஓலை மற்றும் டைல்ஸில் எழுதி சாதனை படைத்தது பற்றி கூறுங்கள்?

பள்ளியில் படிக்கும்போது அனைத்து திருக்குறள்களையும் படித்தும், ஒப்புவித்தும் பல பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறேன். அதனால் என்னுடைய வாழ்வில் திருக்குறளில் ஏதாவது சாதனை புரிய வேண்டும் என்று எண்ணினேன். அதை நிறைவேற்றும் வகையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி தென்னை ஓலை, பிள்ளை மருத இலை, டைல்ஸ் போன்றவற்றில் 1,330 திருக்குறள்களையும் எழுதி சாதனை புரிந்துள்ளேன். மொழி, இனம் போன்றவற்றைக் கடந்து அனைவருக்கும் தேவையான தலைசிறந்த கருத்துக்கள் திருக்குறளில் உள்ளது. அதை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதை எனது கடமையாக நினைக்கிறேன்.

நீங்கள் செய்த சமூகப் பணிகள் குறித்து சொல்லுங்கள்?

என்னுடைய அறக்கட்டளை சார்பாக எங்களால் இயன்ற அளவில் சமூகப் பணிகள் செய்து வருகிறோம். எங்களது கிராமத்தில் பனை விதைகள் மற்றும் பல்வேறு விதமான மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். பெண்களுக்கு இலவச சுயதொழில் பயிற்சி வகுப்புகள், இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்குகள் நடத்துகிறோம். கலைகளை வளர்க்கும் விதமாக கலைஞர்களை உற்சாகப்படுத்தி வருகிறோம்.

பேச்சு, எழுத்துக்கள் மூலமாக சமூகத்திற்கு நீங்கள் சொல்லும் கருத்துகள் என்ன?

பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் உங்களுடைய முயற்சிகளுக்கு சவால்கள் இருக்கத்தான் செய்யும். அதையும் தாண்டி சாதனை புரியும் போது, இந்தச் சமூகம் உங்களை கொண்டாடும். சமூகத்தை சரியான முறையில் வழிநடத்திச் செல்லும் திறமை பெண்களுக்கு நிறையவே உள்ளது. ஆகவே சமூகத்தை மாற்றும் வல்லமை படைத்த பெண்கள், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும்.

மேலும் செய்திகள்