< Back
ஆளுமை வளர்ச்சி
சிறுதானிய கேக் தயாரிப்பில் அசத்தும் சிவசங்கரி
ஆளுமை வளர்ச்சி

சிறுதானிய கேக் தயாரிப்பில் அசத்தும் சிவசங்கரி

தினத்தந்தி
|
21 May 2023 7:00 AM IST

ஒருமுறை என் தோழியின் திருமணத்திற்கு நான் செய்து கொடுத்த கேக்கை சாப்பிட்ட விருந்தினர்கள் எல்லோரும் பாராட்டினார்கள். அது எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.

சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வரும் சிவசங்கரி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே சிறுதானியங்களைப் பயன்படுத்தி கேக் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டே, பகுதிநேரத் தொழிலாக கேக் தயாரிப்பில் ஈடுபடுகிறார்.

"விற்பனை வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், பெண்கள் தாராளமாக சிறுதானிய கேக் தயாரிப்பில் ஈடுபடலாம்" என்று கூறும் சிவசங்கரி தன்னுடைய அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

''என் மகனுக்கு கேக் மிகவும் பிடிக்கும். அதை அவனுக்கு ஆரோக்கியமான முறையில் கொடுப்பதற்காக கேழ்வரகு, கம்பு, கோதுமை மற்றும் சில சிறுதானிய வகைகளை சேர்த்து வீட்டிலேயே தயாரித்துக் கொடுத்தேன்.

சமையலில் எனக்கு இருந்த ஆர்வம் மற்றும் குடும்பத்தினர், நண்பர்களின் ஊக்குவிப்பால் இதையே தொழிலாக செய்ய ஆரம்பித்தேன். இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக என்னுடைய விற்பனையை விரிவுபடுத்தினேன்.

ஒரு வாரத்திற்கு 3 முதல் 4 ஆர்டர்கள் வரை கிடைக்கும். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப கேக் தயாரித்துக் கொடுக்கிறேன். கேக்கின் தரமும், சுவையும் அதில் சேர்க்கப்படும் பொருட்களின் தரத்தை பொறுத்தே அமையும்.

நான் கேக் தயாரிக்க மைதாவிற்கு பதிலாக பல்வேறு சிறுதானியங்களை மாவாக அரைத்து பயன்படுத்துகிறேன். வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக நாட்டு சர்க்கரையை உபயோகிக்கிறேன். இது வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

சிறுதானியங்களைக் கொண்டு கிரீம் கேக்குகள் மட்டுமில்லாமல், பிரவுனி மற்றும் பிளைன் கேக்குகளையும் தயாரிக்கிறேன்.

உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்கள், கலோரிகள் குறைவாக உள்ள சிறுதானிய கேக்குகளை சாப்பிடலாம். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்றவை சிறுதானிய கேக்குகள்.

ஆரம்பத்தில் சிறுதானியங்களைக் கொண்டு கேக் செய்வது சிரமமாக இருந்தது. பலமுறை முயன்ற பிறகே நான் எதிர்பார்த்த வடிவமும், சுவையும் கிடைத்தது. ஒருமுறை என் தோழியின் திருமணத்திற்கு நான் செய்து கொடுத்த கேக்கை சாப்பிட்ட விருந்தினர்கள் எல்லோரும் பாராட்டினார்கள். அது எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.

இப்போது பலரும் தங்கள் வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சியான தருணங்களை கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். எனவே தைரியமாக பெண்கள் சிறுதானிய கேக் தயாரிப்பு தொழிலில் ஈடுபடலாம். தங்களுக்கு போதுமான வருமானத்தைக் கொடுக்கக்கூடிய தொழிலாக இது அமையும்'' என்கிறார் சிவசங்கரி.

மேலும் செய்திகள்