நடனத்தை நேசிக்கும் சகோதரிகள்
|நடனம் கற்றுக் கொடுப்பது என்பது, நடன ஆசிரியர்களால் எளிதாக செய்யக்கூடிய காரியம். ஆனால் கலையுடன் இணைந்து நற்பண்புகளை வளர்த்து, அறிவுத்திறனை மேம்படுத்தி, உற்சாகமான மனநிலை கொண்ட மாணவர்களை உருவாக்குவதே எங்களின் தலையாய நோக்கமாகும்.
"வாழ்க்கையில் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும், இருவரும் இணைந்தே பயணிக்க வேண்டும்" என்று பெற்றோர் கூறியதை ஏற்று, தங்களுடைய கலைப் பயணத்தை இணைபிரியாமல் தொடர்ந்து வருகிறார்கள் நிஷா, கவிதா எனும் சகோதரிகள். நாட்டியத்தின் மீது தீராத காதல் கொண்ட இருவரும் பரதம், குச்சுப்புடி, கதக், மோகினி ஆட்டம், கரகம், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கும்மி, தெம்மாங்கு, பாம்பு நடனம், நாட்டிய நாடகம், வாய்ப்பாட்டு, மேற்கத்திய நடனம் என பல்வேறு வகையான நடனப் பயிற்சிகளை தங்கள் பள்ளியில் கற்பித்து வருகிறார்கள்.
உலகெங்கிலும் நாட்டியக்கலையை பரப்பி வரும் இவர்களது மாணவர்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒருங்கிணைந்து 'திருக்குறளில் பரதநாட்டியம்' என்ற தலைப்பில் 26 நிமிடங்கள் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடத்தி 'ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனையில் இடம் பிடித்துள்ளனர். நாட்டிய சகோதரிகளுடன் ஒரு சந்திப்பு.
நிஷா: "எங்களுடைய தந்தை கேரள மாநிலத்தையும், தாய் தமிழ்நாட்டையும் சேர்ந்தவர்கள். திருச்சி கலைக் காவேரி நுண்கலை கல்லூரியில் பரதக் கலையில் பட்டப்படிப்பை முடித்தோம். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருக்கும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நான் நடன ஆசிரியையாக பணியாற்றி இருக்கிறேன். இப்போது நாகர்கோவிலில் நானும், எனது சகோதரியும் நாட்டியப் பள்ளியை நடத்தி வருகிறோம்.
கவிதா: மாணவர்களுக்கு முதலில் உடல் வலிமை பெறுவதற்கான பயிற்சிகளை அளிக்கிறோம். அதனைத் தொடர்ந்து அடவுகள், நடன உருப்படிகள், முகபாவனைகள் ஆகியவற்றை பயிற்றுவிக்கிறோம். அதன் பிறகே பரதக் கலையை தொன்மை மாறாமல் கற்றுக் கொடுக்கிறோம்.
நிஷா: இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, மாணவர்களுக்கு நடனத்தில் சிறப்பு தேர்வுகள் நடத்துகிறோம். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு விருதுகள், உதவித்தொகை மற்றும் பல்வேறு மேடைகளில் நடன நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதன்மூலம், மாணவர்கள் கலை அறிவோடு, மற்ற கலாசாரங்களையும், மொழிகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு இலவச நடனப் பயிற்சி அளிக்கிறீர்களா?
நிஷா: எங்களுடைய நாட்டியப்பள்ளியில் பயிலும், 40 சதவீத மாணவர்கள் இலவசமாக நடனம் பயின்று வருகின்றனர். குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம் போன்ற காரணங்களால் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக நடனக் கலையை கற்றுக் கொடுக்கிறோம். எங்களிடம் பயிலும் மாணவர்களில் பலரும் கடலோரப் பகுதியின் குக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.
உங்களுடைய எதிர்கால இலக்கு குறித்து சொல்லுங்கள்?
நடனம் கற்றுக் கொடுப்பது என்பது, நடன ஆசிரியர்களால் எளிதாக செய்யக்கூடிய காரியம். ஆனால் கலையுடன் இணைந்து நற்பண்புகளை வளர்த்து, அறிவுத்திறனை மேம்படுத்தி, உற்சாகமான மனநிலை கொண்ட மாணவர்களை உருவாக்குவதே எங்களின் தலையாய நோக்கமாகும்.