< Back
ஆளுமை வளர்ச்சி
பெண்களுக்கு சுய மதிப்பு முக்கியம் - சங்கரி சுதர்
ஆளுமை வளர்ச்சி

பெண்களுக்கு சுய மதிப்பு முக்கியம் - சங்கரி சுதர்

தினத்தந்தி
|
25 Jun 2023 7:00 AM IST

திருமணமான பெண்கள் வேலைகளை திறம்பட செய்யமாட்டார்கள். பணிகளை தள்ளிப்போடுவார்கள் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் எங்களிடம் பணிபுரியும் பெண்கள் இதனை பொய்யாக்குகின்றனர். சரியான வாய்ப்பும், நேரமும் அமையும்போது அவர்களாலும் மற்றவர்களை காட்டிலும் அதிகமாக ஜொலிக்க முடிகிறது

ங்கள் முழு நேரத்தையும் குடும்பத்தை கவனிப்பதற்காக ஒதுக்கும் இல்லத்தரசிகள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் அதிகமாக படித்திருந்தும், திறமைகள் பல கொண்டிருந்தும் பணிக்கு செல்ல முடியாமல் பெரும்பாலும் மற்றவர்களை சார்ந்து வாழ்வார்கள். அத்தகைய பெண்களுக்கு, 'உங்களாலும் பணிக்கு செல்ல முடியும். உங்களின் தேவைகளை நீங்களே பூர்த்திசெய்துகொள்ள முடியும். பொருளாதார சுதந்திரத்துடன் செயல்பட முடியும்' என நம்பிக்கையை ஏற்படுத்துகிறார் சங்கரி சுதர். இல்லத்தரசிகளின் திறமைகளுக்கேற்ற பணி வாய்ப்புகளை வழங்கி வரும் அவருடன் ஒரு சந்திப்பு.

"நான் தூத்துக்குடி மாவட்டம் சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்தவள். எனது பெற்றோர், என்னுடைய சிறுவயதில் இருந்தே 'நான் நன்றாக படிக்க வேண்டும்' என வலியுறுத்துவார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப நானும் நல்ல முறையில் படித்து முடித்து பணியாற்றினேன்.

அதன்பின்னர் திருமண வாழ்க்கையில் நுழைந்த எனக்கு, கொரோனா தொற்று பரவல் ஏற்பட்ட காலகட்டத்தில் குழந்தை பிறந்தது. மகப்பேறு விடுப்பு முடிந்ததும் என்ன செய்ய போகிறேன்? என்று யோசித்தேன். பச்சிளங்குழந்தையை தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் செல்லவும் பயமாக இருந்தது. எனவே, குழந்தையையும், வீட்டையும் கவனித்துக்கொள்வதற்காக வேலையில் இருந்து விலகினேன். ஆகவே, என்னுடைய முழுநேரமும் வீட்டிலேயே கழிந்தது.

ஆனால் அது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. என்னுடன் பணிபுரிந்த பலர், அவர்களின் பணித்தளத்தில் உயர்வடைந்ததை கவனித்தேன். அதேசமயம், எனது தோழிகள் பலர், குழந்தை பிறந்ததும் பணியில் இருந்து விடுபட்டு குடும்பத்தை கவனிக்க ஆரம்பித்ததையும் பார்த்தேன். இன்னும் சிலரோ சிரமத்துடனும், குழந்தையை பார்த்துக்கொள்ள முடியவில்லை என்ற கவலையுடனும் பணிக்கு செல்வதையும் கேள்விப்பட்டேன்.

குழந்தையையும், வீட்டையும் பார்த்துக்கொண்டு, அதே சமயம் வீட்டில் இருந்தவாறே ஓய்வு நேரத்தில் பணிபுரிய வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்தேன். அதன் விளைவாகவே எனது நிறுவனத்தைத் தொடங்கினேன்.

எனது நிறுவனம் மூலம், பெண்களுக்கு வீட்டில் இருந்தபடியே அவர்களின் திறமைக்கேற்ற வேலைகளை பெற்றுத் தருகிறேன். சமூக வலைத்தள மேலாளர், மனிதவள அதிகாரி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற பல பணிகளை வழங்குகிறேன். இதில் பணியாற்றும் அனைத்துப் பெண்களும் திறம்பட செயலாற்றி பணிகளை சிறப்புடன் முடித்துத் தருவதால், என்னிடம் பணிகளை ஒப்படைத்த நிறுவனங்கள் திருப்தி அடைகின்றன.

திருமணமான பெண்கள் வேலைகளை திறம்பட செய்யமாட்டார்கள். பணிகளை தள்ளிப்போடுவார்கள் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் எங்களிடம் பணிபுரியும் பெண்கள் இதனை பொய்யாக்குகின்றனர். சரியான வாய்ப்பும், நேரமும் அமையும்போது அவர்களாலும் மற்றவர்களை காட்டிலும் அதிகமாக ஜொலிக்க முடிகிறது.

நான் நிறுவனத்தை ஆரம்பிக்கும்போது, பெண்களை பொருளாதார சுதந்திரம் உடையவர்களாக மாற்றப் போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் நிறுவனத்தை தொடங்கிய பின்புதான் இல்லத்தரசிகளின் பிரச்சினை பணம் இல்லை, சுய மதிப்பு என்று தெரிந்துகொண்டேன். அவர்கள் பணிக்கு செல்லாமல் இருப்பதால், மற்றவர்களிடம் தைரியமாக பேச கூட முடிவதில்லை. தீர்மானங்களை எடுக்க முடிவதில்லை. இன்னும் பல விதங்களில் மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதை என்னால் முடிந்தவரை மாற்ற முயற்சிக்கிறேன். இதுவே எனது குறிக்கோள்" என்று நம்பிக்கையோடு கூறியவரை வாழ்த்தி விடைபெற்றோம்.

மேலும் செய்திகள்