பள்ளிக் குழந்தைகளின் 'பிரியசகி'
|2003-ம் ஆண்டு அரசு உதவிபெறும் பள்ளியில் எனக்கு வேலை கிடைத்தது. முதல் தலைமுறையாகப் படிக்கும் குழந்தைகள்தான் அங்கே அதிகமாக இருந்தனர். கூலி வேலை செய்பவர்களின் குழந்தைகளான அவர்களுக்கு ‘கால்பந்து, ஓட்டப் பந்தயம் போன்றவற்றில் அதிக திறமைகள் இருந்தும், படிப்பில் ஏன் அவர்களால் பிரகாசிக்க முடியவில்லை?’ என்ற கேள்வி எழுந்தது.
சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தையெல்லாம், பள்ளிக் குழந்தைகளின் முன்னேற்றமாக மாற்றிக் காட்டியுள்ள ஆசிரியை அனி பிளாரன்ஸ், மாணவர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.
மதிப்பெண்களை நோக்கி ஓடாமல், குழந்தைகளின் முழுத்திறமையையும் வெளிக்கொண்டுவரும் களமாகப் பள்ளிக்கூடம் இருக்க வேண்டுமெனப் பணியாற்றி வரும் அவருடன் நடந்த உரையாடல்...
''நான் மதுரையைச் சேர்ந்தவள். அப்பா சேவியர் செல்வராஜ், அம்மா மேரி. நான் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும், கவுன்சிலிங் மற்றும் பிசியோதெரபியில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறேன். அதோடு எம்.ஏ., பி.எட் முடித்திருக்கிறேன். கவிதை நூல்கள், கல்வியியலில் உளவியல் நூல் உள்ளிட்டவற்றையும் எழுதியுள்ளேன். எனது கணவர் ஆண்டனி வில்சன் பாபு அரசுத் துறையில் பணியாற்றுகிறார். மகள் ஜெனிபர் கீர்த்திகா கல்லூரி மாணவி.
பள்ளிக் குழந்தைகளுடன் இந்த அளவுக்கு ஒன்றியது எப்படி?
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த எனது சகோதரி மதிப்பெண் குறைவாக வாங்கியதால் பெற்றோரை அழைத்துவரும்படி ஆசிரியர் சொல்லியிருக்கிறார். 'பெற்றோருக்கு அவமானமாகிவிடுமே' என்பதற்காக எனது சகோதரி தற்கொலை செய்து கொண்டார். அந்த அதிர்ச்சியில் தந்தைக்குப் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகிவிட்டார். அவர் உயிரோடு இருக்கும்போதே எனக்குத் திருமணத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக, உறவுக்குள்ளேயே திருமணம் செய்ததால் எனது முதல் குழந்தை மரபியல் நோயால் பாதிக்கப்பட்டு ஒன்றரை வயதிலேயே இறந்து போனது.
அதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த என்னை, அதில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்காக, எனது கணவர் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பை படிக்க வைத்தார். அதன்பின்பு தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றியபோது, அரசு சாரா அமைப்புடன் இணைந்து மாணவர்களோடு சுற்றுச்சூழல் சார்ந்து நிறைய பணிகளைச் செய்தேன்.
அதற்கு அடுத்து எனக்குப் பிறந்த இரட்டைக்குழந்தைகளுக்கும், அதே மரபியல் நோய் வந்து மூன்றரை வயதில் இறந்து போனார்கள். அந்த சோகத்தில் இருந்து மீண்டு வர, மிகவும் சிரமப்பட்டேன். மனதை திசை மாற்றுவதற்காக, கலை நிகழ்ச்சிகளுக்குப் பயிற்றுவித்தல், தோட்டம் உருவாக்குதல், மண்புழு உரம் தயாரித்தல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணிகள் நடத்துதல் என்று தனியார் பள்ளிக் குழந்தைகளுடன் ஐக்கியமானேன்.
கற்றல் குறைபாடுடைய குழந்தைகளைக் கைதூக்கி விட வேண்டும் என்ற எண்ணம் எதனால் வந்தது?
2003-ம் ஆண்டு அரசு உதவிபெறும் பள்ளியில் எனக்கு வேலை கிடைத்தது. முதல் தலைமுறையாகப் படிக்கும் குழந்தைகள்தான் அங்கே அதிகமாக இருந்தனர். கூலி வேலை செய்பவர்களின் குழந்தைகளான அவர்களுக்கு 'கால்பந்து, ஓட்டப் பந்தயம் போன்றவற்றில் அதிக திறமைகள் இருந்தும், படிப்பில் ஏன் அவர்களால் பிரகாசிக்க முடியவில்லை?' என்ற கேள்வி எழுந்தது. அவர்களைப் போலவே மற்ற வகுப்புகளிலும் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள் என்று அறிந்தபோது, அதிர்ச்சியாக இருந்தது. இதே பிரச்சினையால் எனது சகோதரியைப் பறிகொடுத்ததும் மனதில் ரணமாக இருந்ததால், அதை மாற்ற என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்தேன்.
உங்கள் உறுதியை எவ்வாறு செயல்படுத்தினீர்கள்?
'கற்றல் குறைபாடு என்றால் என்ன, அது எதனால் ஏற்படுகிறது, அதை எவ்வாறு குணப்படுத்துவது?' என்பதையெல்லாம் அறிந்துகொள்ள, 'மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷனில்' சேர்ந்து ஆசிரியர்களுக்கான மூன்று மாத சான்றிதழ் படிப்பை முடித்தேன். அதில் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அதே நேரத்தில் வெளிவந்த 'தாரே ஜமீன் பர்' திரைப்படமும் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
அதன் பின்பு, டிஸ்லெக்ஸியா உள்ள குழந்தைகள் குறித்தும், சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அவர்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பது குறித்தும், பள்ளிகளில் பொம்மலாட்டம் நடத்தினோம். மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் வீதி நாடகங்கள் போட்டோம்.
அரசுப் பள்ளிக் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக நீங்கள் செய்துவரும் வேறு பணிகள் என்னென்ன?
'நிறைவகம்' என்ற உளவியல் சேவை மையத்தைத் தொடங்கி, பல பள்ளிகளில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்துக் கற்றல் குறைபாடுடைய குழந்தைகளின் குறை நீக்கிட வகை செய்திருக்கிறோம். ஏராளமான அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலமாக குழந்தைகளுக்கு சிறப்புக் கவனிப்பு அளிக்க வழி செய்திருக்கிறோம். நான் 'பிரியசகி' என்ற பெயரில் மாயக்குரல் கலைஞராக மாறி, 'சகா' என்ற மனிதக்குரங்கு பொம்மையுடன் யூடியூப் சேனலில், குழந்தைகளுக்கு கதைகளையும் சொல்லி வருகிறேன்.
கற்றல் குறைபாடுடைய குழந்தைகளை எப்படி அடையாளம் காண்கிறீர்கள்?
குழந்தைகளை அடையாளம் காண்பதற்கு பல படி நிலைகள் உள்ளன. என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதைப் பட்டியலிட்டு வைத்திருக்கிறோம். ஒன்பதை ஆங்கிலத்தில் 'பி' போல மாற்றி எழுதுவது, 'அ'-வை திருப்பி எழுதுவது போன்றவை அதில் சில. சிறப்பு ஆசிரியர்களால் அல்லது பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் சிறப்புக் கவனமெடுத்து தொடர்ந்து பயிற்சி அளிப்பதன் மூலமாக அவர்களை மேம்படுத்த வழி செய்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்திருக்கிறோம். ஊரடங்கு காலத்தில் மட்டுமே பத்து நாட்கள் கொண்ட ஐந்து பயிற்சிப் பட்டறைகளை நடத்தினோம்.
உங்களுக்கு கிடைத்துள்ள விருதுகள், அங்கீகாரங்கள் பற்றிச் சொல்லுங்கள்?
சிறந்த ஆசிரியர், சீர்மிகு ஆசிரியர், கனவு ஆசிரியர், சேவா ரத்னா உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன். சேவை செய்வதால் கிடைக்கும் மனநிறைவு தான் எனக்கு மிகப்பெரிய விருது.
எல்லா குழந்தைகளுக்குள்ளும் ஏதேனும் ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதை நாம் தான் அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் என்னால் இயன்ற வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம்.