< Back
ஆளுமை வளர்ச்சி
மனம் சொல்வதைக் கேளுங்கள் - தேவகி
ஆளுமை வளர்ச்சி

மனம் சொல்வதைக் கேளுங்கள் - தேவகி

தினத்தந்தி
|
29 Jan 2023 7:00 AM IST

ஆரம்பத்தில் தோல்விகளை சந்திக்க நேர்ந்தாலும், நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவோம் என்று முழுமையாக நம்புங்கள். தோல்விகள் உங்களை மெருகேற்றும். சுய சந்தேகம் கொள்ளாதீர்கள். தன்னம்பிக்கையோடு செயலாற்றினால் கண்டிப்பாக சாதிக்க முடியும்.

ட சென்னைப் பகுதியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த தேவகி, ஆரம்பப் பள்ளியில் இருந்தே வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தவர். பத்தாம் வகுப்பு படிக்கும்போது தனது தந்தை இறந்த துக்கம் இருந்தாலும், கடின உழைப்பு மற்றும் ஆசிரியர்களின் ஆதரவால் தொடர்ந்து படித்து பள்ளியில் முதல் மாணவியாக வந்தார். அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, அந்த வருமானத்தில் தனது தம்பி-தங்கையை படிக்க வைத்திருக்கிறார்.

கற்றுக் கொடுக்கும் திறமையும், ஆர்வமும் இருந்ததால் சிறப்பாக பணியாற்றி, விரைவிலேயே பயிற்சியாளராக பணி உயர்வு பெற்றார். திருமணத்துக்கு பின்னர் பல பெண்கள் சந்திக்கும் 'கேரியர் கேப்' எனப்படும் பணி இடைவெளியை இவரும் சந்தித்தார்.

திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பின்னர், தனக்குள் இருக்கும் கற்பித்தல் திறமையை மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் ஏன் தொழிலாக மாற்றக் கூடாது? என்று எண்ணினார். தன் மானசீக குருவான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவாக ஒரு அகாடமியை நிறுவினார். அதில் திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாமல் சிரமப்படும் பெண்களை சேர்த்து, அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து வல்லுனர்களாக மாற்றினார்.

இன்று இவரது அகாடமியில் இந்தியா மட்டுமின்றி கனடா, அமெரிக்கா, துபாய், தான்சானியா, ஜெர்மனி, போஸ்வானா போன்ற பல நாடுகளில் இருந்தும் மாணவர்கள் ஆன்லைன் வழியே கல்வி கற்கின்றனர். தாய் மொழியான தமிழ் மீதுள்ள அன்பால் வெளிநாட்டவருக்கும் தமிழை எளிமையான முறையில் கற்றுக் கொடுக்கிறார்.

உலகமே கொரோனா காலகட்டத்தில் கலங்கி நின்ற நேரத்தில் திறமை உள்ள பெண்களுக்கு பயிற்சி அளித்து, அவர்கள் பலன் பெறவும், மாணவர்கள் சிறந்த கல்வியை பெறவும் உதவினார்.

மன தைரியமும், தன்னம்பிக்கையும் நிறைந்த தேவகி, ''உங்கள் மனம் சொல்வதை நம்பி, அது காட்டும் வழியில் பயணியுங்கள். ஆரம்பத்தில் தோல்விகளை சந்திக்க நேர்ந்தாலும், நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவோம் என்று முழுமையாக நம்புங்கள். தோல்விகள் உங்களை மெருகேற்றும். சுய சந்தேகம் கொள்ளாதீர்கள். தன்னம்பிக்கையோடு செயலாற்றினால் கண்டிப்பாக சாதிக்க முடியும்'' என்று தன்னைப் போல் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு கூறுகிறார்.

மேலும் செய்திகள்