ஓவியக்கலையில் தேர்ச்சி பெற்றால் ஐ.டி. துறையில் சாதிக்கலாம்
|ஐ.டி. துறை, சினிமா துறை, கல்வித் துறை, கட்டிடத்துறை என பல்வேறு துறைகளில் ஓவியர்களின் தேவை இருக்கிறது. ஆனால், இதற்கு அந்தந்தத் துறைக்கேற்ப சில மென்பொருட் களின் பரிச்சயம் வேண்டும்.
பல பெண்களின் விருப்பமான பொழுதுபோக்குகளில் ஒன்று ஓவியம் வரைவது. சிலர் அதை தொழிலாகவும் செய்து வருகின்றனர். ஓவியக் கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் காத்திருக்கின்றன. பல துறைகளில் இதன் தேவை அதிகரித்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் ஓவியர்களுக்குப் பல்வேறு கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. கலை ரீதியாகவும் பலவிதமான சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது.
கணினித் திரையில் மென் பொருட்கள் மூலம் வரையும் போது, அதன் பயன்பாடு வெவ்வேறு தளங்களுக்கு விரிவடைகிறது. ஐ.டி. துறை, சினிமா துறை, கல்வித் துறை, கட்டிடத்துறை என பல்வேறு துறைகளில் ஓவியர்களின் தேவை இருக்கிறது. ஆனால், இதற்கு அந்தந்தத் துறைக்கேற்ப சில மென்பொருட் களின் பரிச்சயம் வேண்டும்.
ஐ.டி. துறையில் வாய்ப்புகள்:
ஐ.டி. துறையில் விஷுவல் டிசைனர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஐகான் மற்றும் லோகோ உருவாக்குதல், இணையதள வடிவமைப்பு, அனிமேஷன் காட்சிகளை உருவாக்குதல், விளம்பர வடிவமைப்பு எனப் பல்வேறு வேலைகள் உள்ளன.
சமூக வலைத்தளங்களில், மொபைல் திரைகளில் நாம் பார்க்கும் சிறிய பொத்தான்கள், விருப்பக் குறிகள், எமோஜிக்கள், கவர்ந்திழுக்கும் போஸ்டர்கள், கார்ட்டூன் உருவங்கள் போன்றவை மென்பொருட்களைப் பயன்படுத்தி ஏதேனும் ஒரு ஓவியர் வரைந்ததுதான். பெண்கள் இந்தத் துறைகளில் தற்போது கோலோச்சி வருகின்றனர். பிரபலமான அனைத்து ஐ.டி. நிறுவனங்களிலும் இதற்கெனத் தனிப்பிரிவே செயல்படுகிறது.
என்னென்ன மென்பொருட்கள் தெரிந்திருக்க வேண்டும்?
அடோப் போட்டோஷாப் (Adobe Photoshop), அடோப் இல்லஸ்ட்ரேட்டர் (Adobe Illustrator), அடோப் பிரஸ்கோ (Adobe Fresco), புரோகிரியேட் (Procreate - iPad), கோரல் பெயிண்டர் (Corel Painter) போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி அடிப்படையான வடிவமைப்புகளை எளிதாகவும், விரைவாகவும், துல்லியமாகவும் உருவாக்க முடியும். இதற்கு அடுத்தகட்டமாக 3டி தொழில் நுட்பத்தைக் கற்கவும் பல மென்பொருட்கள் உள்ளன.
இந்த மென்பொருட்களை எங்கு படிப்பது, அதற்கு அதிக கட்டணம் செலவாகுமே என்ற கவலை தேவை இல்லை. வீட்டிலிருந்தபடி ஆன்லைன் மூலமாகக் கற்கலாம்.
கற்றுக்கொள்ளும் வழிகள்:
ஒவ்வொரு மென்பொருளுக்கும், ஒவ்வொரு நிலையிலும் எளிதாக, இலவசமாக தமிழில் கற்பதற்கு ஏராளமான வீடியோக்கள் யூ-டியூப்பில் கிடைக்கின்றன. எந்த வழியில் கற்கிறோம் என்பது முக்கியமில்லை, நாமாக எவ்வாறு பயிற்சி எடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் இதில் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்ல முடியும். ஓவியக் கலையில் ஆர்வம் இருப்பவர்களுக்கு இந்த மென்பொருட்கள் கற்பது எளிதாகும்.
மென்பொருளை உபயோகிக்கத் தெரிந்த பின்னர் நாம் என்ன மாதிரியான வேலைகளைச் செய்ய வேண்டும், சமகாலத்தில் மற்ற வடிவமைப்பாளர்கள் எத்தகைய படைப்புகளை உருவாக்குகிறார்கள், நிறுவனங்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.