விழிப்புணர்வு முயற்சியால் சுயதொழில் தொடங்கிய காயத்ரி
|முதன் முதலில் ஒருவருக்கு, என்னுடைய பயன்பாட்டிற்காக வாங்கி வைத்திருந்த நல்லெண்ணெய்யில் இருந்து 2 லிட்டரைக் கொடுத்தேன். அதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ரூபாய் 3 ஆயிரம் முதலீட்டில், செக்கு எண்ணெய்யை வாங்கி வந்து விற்பனை செய்யத் தொடங்கினேன்.
"எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்த நேரத்தில் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தேன். அப்போது முகநூலில் என் கண்ணில் பட்ட பல சமையல் வீடியோக்களில் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்யை மட்டுமே பயன்படுத்தி சமைத்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பாரம்பரிய உணவுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினேன். அதுதான் இப்போது என்னைத் தொழில் முனைவோராக மாற்றியது" என்று தான் சுயதொழில் தொடங்கிய கதையைக் கூற ஆரம்பித்தார் காயத்ரி சுந்தர்.
"சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில், 22 பேரைக் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். சிறு வயதில் இருந்தே வீட்டில் செய்த தின்பண்டங்கள் தான் எனது விருப்ப உணவு. மாடர்ன் உலகத்தில் பலர் சமையலுக்கு பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் குறித்து தெரிந்ததும், அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பித்தேன்.
முதலில் முகநூலில் செக்கு எண்ணெய்களின் பலன்கள் குறித்து பதிவிட்டேன். அப்போது பலரும் என்னிடம் "உங்களால் முடிந்தால் செக்கு எண்ணெய் வாங்கித் தர முடியுமா?" எனக் கேட்க ஆரம்பித்தனர். அவ்வாறு முதன் முதலில் ஒருவருக்கு, என்னுடைய பயன்பாட்டிற்காக வாங்கி வைத்திருந்த நல்லெண்ணெய்யில் இருந்து 2 லிட்டரைக் கொடுத்தேன். அதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ரூபாய் 3 ஆயிரம் முதலீட்டில், செக்கு எண்ணெய்யை வாங்கி வந்து விற்பனை செய்யத் தொடங்கினேன்.
முதலில் நல்லெண்ணெய்யில் ஆரம்பித்தேன். பிறகு வாடிக்கையாளர்கள் கேட்டதற்கு ஏற்ப, அனைத்து வகையான எண்ணெய்களையும் பாரம்பரிய முறையில், ரசாயனக் கலப்பு இல்லாமல் செக்கில் ஆட்டி, விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.
அப்போது எனது வாடிக்கையாளர்கள் சிலர், "வீட்டிற்குப் பயன்படக்கூடிய பிற பொருட்களையும் இப்படிப் பாரம்பரிய முறையில் தயார் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்" எனக் கேட்டனர். குடும்பத்தினரின் உதவியை நாடினேன். அவர்களும் உதவினார்கள்.
முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக முதற்கட்ட விற்பனையைத் தொடங்கினோம். அதனையடுத்து தரமான உணவுப் பொருட்களை உலகம் முழுவதும் விற்பனை செய்ய முடிவெடுத்து, எங்கள் நிறுவனத்தின் பெயரில் இணையதளத்தைத் தொடங்கினோம். எங்கள் தயாரிப்புக்களை 'பான் இந்தியா' பொருட்களாக மாற்றினோம்.
தற்போது இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் மசாலா பொருட்களை விற்பனை செய்து வருகிறேன்.
எனது பாட்டியிடம் இருந்து கிடைத்த யோசனையின்படி, மாங்காயுடன் உப்பு, காரம், புளிப்பு ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் 'மாங்காய் வடை மிட்டாய்' என்ற உணவை விற்பனை செய்ய ஆரம்பித்தோம். இதற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் வரவேற்பு கிடைத்தது. இதற்காக சேலத்தில் புதிதாக ஒரு யூனிட்டை ஆரம்பித்து, 15 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளோம்.
அடுத்ததாக மாங்காயுடன் ஏலக்காய், மலை நெல்லிக்காய், பேரீச்சம் பழம், அன்னாசி, சுக்கு ஆகிய சுவைகளுடன் இந்த மிட்டாயைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்று உற்சாகத்துடன் கூறினார் காயத்ரி சுந்தர்.