மகிழ்ச்சியான தொழிலாகும் 'குழந்தைகள் விளையாட்டு மையம்'
|குழந்தைகளைக் கவரும் வகையில் பிளே ஸ்டேஷன் அமைக்க வேண்டும். சிலவற்றில் ‘ரைம்ஸ்’ போன்ற பாட்டுகள் ஒலிக்கும். அவை குழந்தைகளை அதிகமாக ஈர்க்கும்.
இரண்டு முதல் பத்து வயது வரையில் இருக்கும் குழந்தைகள் பொழுதுபோக்குவதற்கான இடம்தான் 'கிட்ஸ் பிளே ஸோன்' எனப்படும் குழந்தைகள் விளையாட்டு மையம்.
வார இறுதியில் அல்லது விடுமுறை நாட்களில் குழந்தைகளை பொழுதுபோக்கிற்காக ஷாப்பிங் மால் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது உணவு, போக்குவரத்து உள்பட பலவற்றுக்கு செலவு செய்ய வேண்டும்.
மாறாக வீட்டுக்கு அருகில் அவர்களின் மனம் மகிழும் வகையில் பொழுதுபோக்கு நிறைந்த இடம் இருந்தால், பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கான சுயதொழில் ஆலோசனைதான் 'கிட்ஸ் பிளே ஸோன்'. சில ஆயிரங்களில் முதலீடும், இடவசதியும் இதற்கு அவசியம் வேண்டும். 'கிட்ஸ் பிளே ஸோன்' அமைப்பதற்கு குறைந்தபட்சம் 400 சதுர அடி இடம் வேண்டும்.
முதலில் உங்கள் பகுதியில் வசிக்கும் மக்களின் பொருளாதார நிலை மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பற்றி ஆய்வு செய்யுங்கள். என்னென்ன விலைகளில் எத்தனை வகையான பிளே ஸ்டேஷன்கள் கிடைக்கின்றன எனவும் விசாரியுங்கள். இணையத்தில் வாங்குவதைவிட, தயாரிப்பாளரிடம் நேரடியாக வாங்கினால் கொள்முதல் விலை குறையும். உங்கள் இடவசதிக்கேற்பவும், முதலீட்டு அளவிற்கேற்பவும் வாங்கலாம். இதற்கு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் செலவாகும்.
'கிட்ஸ் பிளே ஸோன்' தொடங்குவதற்கு முன்பு கீழ் காணும் சில குறிப்புகளை கவனத்தில் கொள்ளுங்கள்.
- குழந்தைகளைக் கவரும் வகையில் பிளே ஸ்டேஷன் அமைக்க வேண்டும். சிலவற்றில் 'ரைம்ஸ்' போன்ற பாட்டுகள் ஒலிக்கும். அவை குழந்தைகளை அதிகமாக ஈர்க்கும்.
- குழந்தைகளின் மனோதத்துவம் புரிந்த, தகுந்த பயிற்சி பெற்ற பணியாளர்களை நியமியுங்கள்.
- அரசாங்க விதிமுறைகள், வணிகத்துக்கான மின் இணைப்பு, பாதுகாப்பு போன்ற விஷயங்களைக் கட்டாயமாக பின்பற்றுங்கள்.
- முதலுதவி வசதிகள், கழிவறை வசதிகள் போன்றவற்றை சரியான முறையில் செய்ய வேண்டியது அவசியம்.
- உங்கள் பகுதியில் வசிப்பவர்கள்தான் பெரும்பாலும் வருவார்கள் என்பதால் ஒவ்வொரு வீட்டிலும் நேரில் சென்று விளம்பரப்படுத்துவது பலன் அளிக்கும்.
- உங்கள் சேவைகள் சிறப்பாக இருக்கும்போது எளிதாக மற்ற வாடிக்கையாளர்களுக்கு உங்கள் நிறுவனத்தின் பெயர் சென்றடையும்.
- ஆரம்பத்தில் 2 பிளே ஸ்டேஷன்கள் இருந்தால் போதுமானது. வாடிக்கையாளர்கள் பெருகும்போது விரிவுப்படுத்தலாம்.
- இடவசதி இருந்தால் குழந்தைகள் விரும்பும் தின்பண்டங்கள், எழுது பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றையும் விற்பனை செய்யலாம்.