அழகு அனைவருக்கும் பொதுவானது- சுஹாஷினி
|2007-ம் ஆண்டு இலங்கையில் போர்ச்சூழல் இருந்தபோது, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலையில் இருந்து கிளம்பி, சனிக்கிழமை காலை கொழும்பு சென்றடைவேன். அங்கே ஒரு வீட்டில் கட்டணம் செலுத்தி தங்கி, வார இறுதி நாட்களில் அழகுக் கலை பயிற்சியை முடித்துவிட்டு, ஞாயிறு மாலை கொழும்பில் இருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை காலையில் வீடு வந்து சேர்வேன்.
"பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் பெண்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும் என்பது என் லட்சியம்" என்று அக்கறையோடு கூறுகிறார் சுஹாஷினி. இலங்கையைச் சேர்ந்த இவர், அழகுக் கலை நிலையம் மற்றும் பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளில் தனது தொழில் திறமையை வளர்த்து, பல விருதுகளைப் பெற்றவர். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக மணப்பெண் அலங்கார பயிற்சி கொடுத்து, அவர்கள் நிரந்தர வருமானம் பெற வழிவகுத்தவர். தான் கடந்து வந்த பாதை குறித்து இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
"இலங்கை திருகோணமலை மாவட்டம், திருக்கடலூர் எனது சொந்த ஊர். எனது தந்தை நாகப்பன் பரசுராமன், தாயார் மாலா. என்னுடன் பிறந்தவர்கள் 4 சகோதரிகள். கல்வி தான் பெண் குழந்தைகளுக்கான அங்கீகாரம் என்பதில் உறுதியாக இருந்த எனது பெற்றோர், எங்கள் அனைவரையும் பட்டதாரி ஆக்கினர். நான் அழகுக் கலை மற்றும் சிகை அலங்காரம் பட்டயப்படிப்பு முடித்து, கடந்த 20 வருடங்களாக அழகு நிலையம் நடத்தி வருகிறேன். என் ஒரே மகன் விஷ்வப்ரநீத் 5-ம் வகுப்பு படிக்கிறான்."
அழகுக் கலையில் ஆர்வம் வந்தது எப்படி?
பெற்றோருக்கு நாங்கள் ஐவரும் பெண் பிள்ளைகள். சிறுவயது முதலே அம்மா எங்கள் ஐவருக்கும் விதவிதமான உடை உடுத்தி, பல்வேறு சிகை அலங்காரங்கள் செய்து, அழகான ஆபரணங்கள் அணிவித்து அழகு பார்ப்பார். அதனால் அழகுக் கலை மீது இயல்பாகவே எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. இலங்கையிலும், இந்தியாவிலும் அதற்கான பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன்.
2007-ம் ஆண்டு இலங்கையில் போர்ச்சூழல் இருந்தபோது, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலையில் இருந்து கிளம்பி, சனிக்கிழமை காலை கொழும்பு சென்றடைவேன். அங்கே ஒரு வீட்டில் கட்டணம் செலுத்தி தங்கி, வார இறுதி நாட்களில் அழகுக் கலை பயிற்சியை முடித்துவிட்டு, ஞாயிறு மாலை கொழும்பில் இருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை காலையில் வீடு வந்து சேர்வேன். இவ்வாறு மிகுந்த சிரமங்களுக்கு இடையில்தான் அழகுக் கலையைப் படித்தேன்.
பெண்களுக்கு இலவச பயிற்சி அளித்தது பற்றி சொல்லுங்கள்?
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்று எண்ணினேன். அவர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றினால், தங்களின் வாழ்க்கை நிலையை உயர்த்திக்கொள்வார்கள் என்று நம்பினேன். அவ்வகையில் இயற்கைப் பேரிடர்களால், பொருளாதார சீர்கேடுகளால் நேரடியாகப் பாதிக்கப்படுவதில் மீனவச்சமுதாயமும் ஒன்று. நானும் அவர்களில் ஒருவர். ஆகையால் மீனவப் பெண்களுக்கு இலவச அழகுக் கலை பயிற்சி அளிக்க நினைத்தேன். இதுவரை 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசப் பயிற்சி அளித்திருக்கிறேன்.
மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட நீங்கள் எடுக்கும் முயற்சிகள் என்ன?
'அழகு என்பது அனைவருக்கும் பொதுவானது' என்பதை ஆணித்தரமாக நம்புபவள் நான். நிறம், உடல்வாகு, பொருளாதாரச் சூழல் போன்றவை பலரது தயக்கத்துக்கு காரணமாக உள்ளது. இதை மாற்றும் முயற்சியின் முதற்படியாக இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்ட, மிகவும் பின்தங்கிய கிராமமான முல்லைத்தீவினைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வி மதுராவை மாடல் ஷூட் செய்தேன். ஆர்வம் இருந்தும் முதற்படி எடுத்து வைக்கத் தயங்கும் அனைவருக்கும் இது முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இலவச அழகுக் கலை பயிற்சி அளிப்பது தவிர, வேறு எத்தகைய சமூக சேவைகளைச் செய்து வருகிறீர்கள்?
எனது தந்தை தொடர்ந்து சமூக சேவை செய்து வருகிறார். அவரைப் போல நானும் நிறைய சேவை செய்ய வேண்டும் என்பதற்காகக் கனடாவைச் சேர்ந்த 'விழித்தெழு பெண்ணே' என்ற தொண்டு நிறுவனத்தின் உறுப்பினராக, அவர்களின் மூலம் கொரோனா காலத்திலும், மற்ற காலத்திலும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறோம்.
உங்களுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள்?
திருகோணமலையின் அழகுக்கலை நிபுணர்கள் சங்கத் தலைவியாக பதவி வகிக்கிறேன். சென்னையில் நடைபெற்ற மணப்பெண் அலங்காரத்திற்கான போட்டியில் 'சிறந்த தமிழ் மணப்பெண் அலங்காரத்திற்கான விருது', கனடாவில் நடைபெற்ற உலக தமிழ் அழகிப்போட்டியில் இலங்கைப் பெண்களுக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியமைக்காகச் 'சிறப்புக் கவுரவ விருது', விழித்தெழு பெண்ணே நிறுவனத்தால் 'சாதனைப்பெண் விருது', நந்தவனம் பவுண்டேசனால் 'சாதனைப்பெண் விருது' போன்ற பல விருதுகள் வாங்கியிருக்கிறேன்.