சேவை செய்வதே லட்சியம்- ராணி சுரேந்திரன்
|கல்விக்காகவும், பொருளாதாரத்திற்காகவும் சிரமப்பட்டு வளர்ந்தது என் மனதில் ஆழமாக பதிந்தது. நன்றாகப் படித்து முன்னேறி எங்களைப் போல் கஷ்டப்படும் பலருக்கும் உதவ வேண்டும் என நினைத்தேன். படித்து முடித்து கோவை மருத்துவமனையில் பணிபுரிந்தேன். அங்கு நோயாளிகள் பலரும் விவரம் தெரியாமல் வருவார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்தேன். திருமணம் ஆனதும் கணவரின் ஆதரவுடன் தொண்டு நிறுவனம் ஆரம்பித்து தொடர்ந்து பலருக்கு உதவி வருகிறேன்.
தினசரி தேவைகளுக்காக சிரமப்படும் ஏழை மக்களுக்கு, சேவை செய்வதையே லட்சியமாகக்கொண்டு செயல்படுகிறார் ராணி சுரேந்திரன். திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் வசித்து வரும் அவருடன் ஒரு சந்திப்பு.
"நான் வால்பாறை எஸ்டேட்டில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பிறந்தேன். அந்த மலைப் பகுதியில், தேயிலைத் தோட்டத்திற்கு உள்ளே இருக்கும் கடினமான பாதை வழியாகத்தான் அனைவரும் பள்ளிக்குச் சென்று வருவோம். அப்போது பேருந்து வசதி இல்லாததால், பல கிலோமீட்டர் தூரம் நடந்தே போவோம்.
கல்விக்காகவும், பொருளாதாரத்திற்காகவும் சிரமப்பட்டு வளர்ந்தது என் மனதில் ஆழமாக பதிந்தது. நன்றாகப் படித்து முன்னேறி எங்களைப் போல் கஷ்டப்படும் பலருக்கும் உதவ வேண்டும் என நினைத்தேன்.
படித்து முடித்து கோவை மருத்துவமனையில் பணிபுரிந்தேன். அங்கு நோயாளிகள் பலரும் விவரம் தெரியாமல் வருவார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்தேன். திருமணம் ஆனதும் கணவரின் ஆதரவுடன் தொண்டு நிறுவனம் ஆரம்பித்து தொடர்ந்து பலருக்கு உதவி வருகிறேன்.
எம்.ஏ., ஆங்கில இலக்கியம் படித்த நான், நண்பர்கள் மற்றும் ஆர்வலர்கள் உதவியுடன் அரியமங்கலம் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு இரவு நேர பாட வகுப்புகள் எடுத்ேதன். அங்கு பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய குழந்தைகளையும் அழைத்து வந்து படிக்கச் செய்தோம்.
அரியமங்கலத்தைத் தொடர்ந்து, சுற்றி உள்ள கிராமங்களிலும் எங்கள் கல்விச் சேவை தொடர்ந்தது. பின்பு தொண்டுள்ளம் கொண்ட மருத்துவர்கள் உதவியுடன், மருத்துவ முகாம்களையும் நடத்தினோம்.
திருச்சியில் உள்ள மருத்துவமனைகளின் உதவியுடன் புற்றுநோய் மருத்துவ முகாம்கள் நடத்தினோம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்துச் சென்று மேல்சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் உதவினார்கள்.
ஊரகப்பகுதி பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கிறோம். அவர்கள் படிப்புக்கும், திறமைக்கும் ஏற்ற தொழில் பயிற்சிகளை அளித்து வருகிறோம். தேங்காய் எண்ணெய்யில் இருந்து சோப்பு தயாரிக்கும் பயிற்சி, மசாலாப் பொருட்கள், துணிப்பை, சணல் பை, பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் பயிற்சி போன்றவற்றை பெண்களுக்கு வழங்குகிறோம். இதற்குப் பலரும் ஆதரவு தருகிறார்கள்.
கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் இதன் மூலம் பயிற்சி பெற்று பலன் அடைந்து எங்களை மனமாரப் பாராட்டியபோது நெகிழ்ந்து போனோம். தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு ஆர்டர்கள் பெற்றுத் தந்து உதவி வருகிறோம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம். பெண்களுக்கு அரசு அளிக்கும் கடன் உதவிகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம்.
எனது கணவரும், குழந்தைகளும் தொடர்ந்து ஆதரவாக இருந்து வருகிறார்கள். உறவினர்களும், நண்பர்களும் ஊக்கம் அளிக்கிறார்கள். பல்வேறு அமைப்புகள் எங்கள் சமூகத் தொண்டுகளைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி இருக்கிறார்கள். தேவைகளுடன் இருக்கிற ஏழை மக்களை சந்தித்து அவர்களுக்கு, சேவைகளை அரசுடன் இணைந்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் எதிர்கால லட்சியம்" சொல்லி முடித்தார் ராணி சுரேந்திரன்.