< Back
வாழ்க்கை முறை
உயரம் குறைந்தவர்கள் புடவை அணியும் பொழுது...
வாழ்க்கை முறை

உயரம் குறைந்தவர்கள் புடவை அணியும் பொழுது...

தினத்தந்தி
|
10 July 2022 1:30 AM GMT

புடவையின் முந்தானையை எப்போதும் சிறிய மடிப்புகளாக மடிக்க வேண்டும். சிறிய முந்தானை மடிப்புகள் நேர்த்தியாகவும், உயரமாகவும் காண்பிக்கும்.

'புடவை' இந்தியப் பெண்களின் பிரதான ஆடை. பல பெண்கள் மேற்கத்திய ஆடைகள் அணிந்தாலும், விழாக்கள், திருமணங்கள் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் புடவை அணிவதையே விரும்புகின்றனர். உயரம் குறைவாக உள்ள பெண்கள், புடவை அணிவது தங்கள் உயரத்தை மேலும் குறைத்து காண்பிக்குமோ என்று தயங்குவது உண்டு.

அவர்கள் புடவை அணியும்போது, உயரமாக தெரிவதற்கு சில வழிமுறைகளை காண்போம்.

 உயரம் குறைவாக உள்ளவர்கள் முதலில் கவனிக்க வேண்டியது புடவையின் துணி வகை. மெல்லிய புடவை ரகங்களான லெனின், ஜார்ஜெட், சாப்ட் சில்க் போன்ற புடவைகளை அணியலாம். இத்தகைய உடலோடு ஒட்டும் புடவைகள் உங்களை உயரமாக காட்டுவதற்கு உதவும்.

 அடர்ந்த நிறங்களான கருப்பு, அடர் பச்சை, கருநீலம், சிவப்பு போன்ற நிறங்கள் கொண்ட புடவைகள் உயரத்தை அதிகரித்து காண்பிக்கும்.

 பெரிய டிசைன்கள் உள்ள புடவைகள் பருமனாகவும், உயரம் குறைவாகவும் காண்பிக்கும். எனவே எந்த டிசைனும் இல்லாத ஒரே நிற புடவைகளைத் தேர்வு செய்வது நல்லது அல்லது சிறிய பூக்கள் அல்லது டிசைன்கள் பதித்த புடவைகளை அணியலாம்.

 புடவையின் முந்தானையை எப்போதும் சிறிய மடிப்புகளாக மடிக்க வேண்டும். சிறிய முந்தானை மடிப்புகள் நேர்த்தியாகவும், உயரமாகவும் காண்பிக்கும்.

 சிறிய பார்டர் கொண்ட புடவைகளை அணிவது உயரம் குறைந்தவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். பெரிய பார்டர் புடவைகள் உயரத்தை குறைத்து காண்பிக்கும்.

 புடவையின் முந்தானைப் பகுதி முன்புறமாக வந்து, இடுப்பு வழியாக வரும் பகுதியை நன்றாக இழுத்து நேர்த்தியாக, வலது தொடை பக்கமாக 'பின்' செய்வது அவசியம். அவ்வாறு செய்கையில், அது உடல் அமைப்பை அழகாக எடுத்துக் காண்பிப்பதோடு மட்டுமில்லாமல் உயரத்தையும் அதிகரித்துக்காட்டும்.

புடவை அணியும்போது கவனிக்க வேண்டிய மற்ற விஷயங்கள்:

 ரவிக்கை வேறு நிறத்தில் இல்லாமல், புடவையின் நிறத்திலேயே அணிவது உயரமாக காண்பிக்கும்.

 ஹீல்ஸ் அணிபவர்கள் புடவை உடுத்துவதற்கு முன் ஹீல்ஸ் அணிந்து கொண்டு, பின்பு புடவையை அதன் உயரத்தோடு சேர்த்து அணியலாம்.

 'போட் நெக்' அல்லது 'குளோஸ் நெக்' போன்ற டிசைன்களுக்கு பதிலாக, அகன்ற கழுத்துள்ள டிசைன் இருக்கும் ரவிக்கைகளை அணிவது நல்லது.

 உயரம் குறைவாக உள்ளவர்கள், புடவையுடன் சோக்கர் போன்ற நகைகளை தவிர்ப்பது நல்லது. அவ்வகை நகைகள் கழுத்து பகுதியின் உயரத்தை குறைத்துக் காண்பிக்கும்.

மேலும் செய்திகள்