பள்ளி செல்ல அடம்பிடிக்கும் குழந்தையை கையாளும் வழிகள்
|குழந்தைகள் காலை உணவை நிதானமாக சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் செல்வதே நல்லது. நீங்கள் வேலைக்குச் செல்லும் பெற்றோர் என்றால் குழந்தையை அவசரப்படுத்தாமல், நீங்களும் பதற்றமடையாமல், நேரத்தை அதற்கேற்றபடி முன்பே திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
"நீ அடம்பிடிச்சா உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்துடுவேன்", "சாப்பிடாம இருந்தா டீச்சர்கிட்ட உன்னை அடிக்க சொல்லுவேன்" என்று சேட்டை செய்யும் பிள்ளைகளை பயமுறுத்தும் பெற்றோர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த சமயத்தில் அதைக்கேட்டு குழந்தை அமைதியானாலும், பள்ளி மற்றும் ஆசிரியர்கள் மீது அவர்கள் மனதுக்குள் வெறுப்பு மற்றும் பய உணர்வு உண்டாகும். இதனால் பள்ளி செல்வதற்கு அடம் பிடிப்பார்கள். இத்தகைய குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என்று பார்ப்போம்.
முதலில் குழந்தைகள் மனதில் பள்ளியைப் பற்றிய நேர்மறையான பிம்பத்தை உண்டாக்க வேண்டும். ''பாப்பா! நீ பள்ளிக்கூடத்துக்குப் போகப் போகிறாய், அங்கு உனக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க. அவர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடலாம். நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்'' என குழந்தையின் மனதில் குதூகலம் ஏற்படும் விதமாக பேச வேண்டும்.
உங்களுக்குத் தெரிந்தவர்களுடைய குழந்தைகளும் அதே பள்ளியில்தான் இப்போது படிக்கிறார்கள் என்றால், அவர்களை சந்திப்பது போல் உங்கள் குழந்தையை அந்தப் பள்ளிக்கு அழைத்துச் செல்லலாம். இவ்வாறு அடிக்கடி செய்வதன் மூலம் உங்கள் குழந்தைக்கு பள்ளியின் சூழல் பழகி இருக்கும். புதிய இடம் போல தோன்றாது.
உங்கள் குழந்தைக்கு பிடித்த புத்தகப்பை, அழகான புத்தகங்கள், கலர் பென்சில், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை உடன் அழைத்து சென்று வாங்குங்கள். அவர்களுக்கானதை அவர்களே தேர்ந்தெடுக்கும்போது உற்சாகமாக பள்ளிக்கு செல்வார்கள்.
இரவில் தூங்கச் செல்வது, காலையில் கண் விழிப்பது, காலைக் கடன்களை முடிப்பது போன்றவற்றை குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும்.
காலை உணவை நிதானமாக சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் செல்வதே நல்லது. நீங்கள் வேலைக்குச் செல்லும் பெற்றோர் என்றால் குழந்தையை அவசரப்படுத்தாமல், நீங்களும் பதற்றமடையாமல், நேரத்தை அதற்கேற்றபடி முன்பே திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
முழு நேர பள்ளி என்றால், குழந்தைக்குப் பிடித்தமான உணவுகளை மதிய உணவாக கொடுத்து அனுப்புங்கள்.
நீங்கள் வேலைக்குச் செல்பவர் என்றால், பள்ளி நேரம் முடிந்த பிறகு குழந்தையை யார் வீட்டுக்கு அழைத்து வருவது? என்பது குறித்து தெளிவாக முடிவு செய்யுங்கள். மழலையர் பாதுகாப்பகத்தில் உங்கள் குழந்தையை விடுவதென்றாலும், அதற்கு தேவையான விஷயங்களையும் முன்பே திட்டமிடுங்கள்.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பின்பு குழந்தைகளை அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டில் ஈடுபடுவதற்கு உற்சாகப்படுத்துங்கள். பிறகு வீட்டுப் பாடங்களை செய்யச் சொல்லுங்கள்.
பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள். அப்போதுதான் குழந்தையின் கற்றல் சார்ந்த நடவடிக்கைகள் உங்கள் கவனத்திற்கு வரும்.
ஒருவேளை உங்கள் குழந்தை இதற்கு முன்பு மழலையர் பள்ளி சென்று பழகி இருந்தாலும், இப்போதைய பள்ளி நேரம் அதிகம் என்பதால் இயல்பாகவே அவர்களுக்கு பள்ளியைப் பற்றிய பயமும், பதற்றமும் ஏற்படும். அடம் பிடிக்காமல் பள்ளிக்கு சென்று வந்தாலும் திடீரென்று சில நாட்கள் முரண்டு பிடிப்பார்கள். அத்தகைய நேரங்களில் பதற்றமடையாமல், அவர்களை மென்மையாக அணுகி பள்ளிக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள்.