மழைக்காலத்தில் உண்டாகும் சலிப்புத்தன்மையை தவிர்க்கும் வழிகள்
|மழைக்காலத்தின் குளிர்ச்சிக்கு இதமாக இரவு உடையோடு போர்வையை போர்த்திக்கொண்டு இருந்தால், தூங்கும் மனநிலையே அதிகரிக்கும். எனவே சரியான உடையை அணிந்து ஒப்பனை செய்து கொள்ளுங்கள். இது மந்தநிலையை மாற்றுவதற்கு உதவும்.
வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொண்ட நம்மை குளிர்விக்க மழைக்காலம் வந்து விட்டது. பல இடங்களில் சாரல் மழையின் சங்கீதம் ஆரம்பமாகிவிட்டது. மழை பொழியும் சத்தமும், மிதமான குளிர்ச்சியும் நமக்கிருக்கும் வேலைகளையும் மீறி, லேசான உறக்க நிலைக்கு அழைத்துச் செல்லும். செய்து கொண்டிருக்கும் பணிகளில் சற்றே சலிப்பை ஏற்படுத்தி, 'ஓய்வு எடுத்தால் நன்றாக இருக்குமே' என்ற மனநிலையை உருவாக்கிவிடும்.
பருவ மழைக்காலத்தின்போது பலரும் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். இதற்கு பின்னால், சில அறிவியல் சார்ந்த காரணங்கள் இருக்கின்றன. நமது உணர்ச்சி நிலை, மழையின் ஒலி, ஈரப்பதத்தின் அளவு மற்றும் புற ஊதா ஒளியின் பற்றாக்குறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.
மழையின் சத்தம் மனிதர்களால் கேட்கக்கூடிய, பல்வேறு அதிர்வெண்களின் கலவையான 'பிங்க் சத்தம்' எனும் ஒலியை உருவாக்குகிறது. அந்த அதிர்வெண்களில் நடக்கும் வெவ்வேறு ஆற்றல் விநியோகம், நம்மை தூக்கம் மற்றும் ஓய்வு நிலைக்கு கொண்டு செல்கிறது. இதை மாற்றி சுறுசுறுப்பாக இருப்பதற்கான வழிமுறைகள் இதோ:
நீங்கள் இருக்கும் அறைகளில் பிரகாசமான ஒளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இயற்கையான வெளிச்சத்தில் அதிக நேரம் இருக்க முயற்சி செய்யுங்கள்.
மழைக்காலத்தில் அறையில் ஒளி குறைவாக இருப்பது, மேலும் மந்த நிலையை உருவாக்கும். எனவே ஜன்னல்களை மூடியிருக்கும் திரைசீலைகளை திறந்து, வெளிச்சம் உள்ளே வரும்படி செய்யுங்கள்.
மழைக்காலத்தின் குளிர்ச்சிக்கு இதமாக இரவு உடையோடு போர்வையை போர்த்திக்கொண்டு இருந்தால், தூங்கும் மனநிலையே அதிகரிக்கும். எனவே சரியான உடையை அணிந்து ஒப்பனை செய்து கொள்ளுங்கள். இது மந்தநிலையை மாற்றுவதற்கு உதவும்.
காலை வேளையில் உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்கும். மதிய உணவுக்குப் பின்னர் சிறிது நேரம் உங்கள் வீட்டை அல்லது அலுவலகத்தைச் சுற்றி நடைப்பயிற்சி செய்யுங்கள். உடல் செயல்பாடு மனதை விழிப்புணர்வோடும், புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க உதவும்.
உங்களுக்குப் பிடித்த சூப் தயாரித்து சாப்பிடுங்கள். மழைக்காலத்தின் குளிர்ச்சியான நிலையில் சூப் பருகும்போது, அதில் உள்ள காரமும், மணமும் சோம்பலைப் போக்கி சுறுசுறுப்பை அதிகரிக்கும்.
ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுங்கள். ஒரே வேலையில் தொடர்ந்து ஈடுபடாமல், அவ்வப்போது இடைவெளி எடுத்து பிடித்த வேலைகளை செய்யுங்கள். படைப்பாற்றல் தொடர்பான பணிகளில் ஈடுபடுவது, மனதை புத்துணர்வோடு இருக்க செய்யும் 'செரடோனின்' ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும்.
சுறுசுறுப்பான இசையைக் கொண்ட பாடல்களை கேளுங்கள். அது உங்கள் மனநிலையை மாற்றும் சக்தி கொண்டது.
அவசரப் பணிகள் எதுவும் இல்லையென்றால், 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஒரு குட்டித்தூக்கம் போடுங்கள். இதனால் உடலும், மனமும் புத்துணர்ச்சி அடையும்.