< Back
வாழ்க்கை முறை
மருமகளை புரிந்து கொண்டால் உறவு சிறக்கும்
வாழ்க்கை முறை

மருமகளை புரிந்து கொண்டால் உறவு சிறக்கும்

தினத்தந்தி
|
1 Oct 2023 7:00 AM IST

குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு விசேஷங்களிலும் மருமகளை முன்நிறுத்த வேண்டும். இதுவே, மாமியாரை அம்மாவாக பாவிக்கும் எண்ணத்தை மருமகளுக்குள் உருவாக்கும்.

திருமணம் என்பது கணவன்- மனைவி என்ற இருவரை மட்டுமில்லாமல், புதிதாக குடும்பத்தில் பல உறவுகளையும் இணைக்கக்கூடிய பந்தமாகும். இதில், தம்பதிக்குள் மட்டும் புரிதல் இருந்தால் போதாது. புதிதாக குடும்பத்தில் இணையும் பெண்ணுக்கும், கணவரின் குடும்ப உறவுகளுக்கும் இடையே உண்டாகும் புரிதலும் முக்கியமானதாகும். குறிப்பாக, மாமியார்-மருமகள் இடையே இணக்கம் இருக்க வேண்டும். அதற்கான சில ஆலோசனைகள்..

மருமகள், வேறு ஒரு குடும்பத்தில் இருந்து புதிதாக தங்கள் குடும்பத்திற்கு வந்த உறவு என்றாலும், இனி இந்தக் குடும்பத்தின் முக்கியமான உறவு என்பதை மாமியார் நினைவில் கொள்ள வேண்டும். தங்களுடைய மகன் மற்றும் மகளை நடத்துவது போலவே, மருமகளையும் சமமாக நடத்த வேண்டும். எந்த வகையிலும் பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது. மருமகளுக்கு தெரியாத விஷயங்கள், குடும்ப பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் என அனைத்தையும் பொறுமையாக கற்றுக்கொடுக்க வேண்டும். குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு விசேஷங்களிலும் மருமகளை முன்நிறுத்த வேண்டும். இதுவே, மாமியாரை அம்மாவாக பாவிக்கும் எண்ணத்தை மருமகளுக்குள் உருவாக்கும்.

திருமணமான புதிதில் தம்பதிக்குள் புரிதல் ஏற்பட சில காலம் தேவைப்படும். இந்த சமயத்தில், அவர்களுக்குள் ஏதேனும் வாக்குவாதம், சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டாலும், அதை உடனடியாக தீர்ப்பதாக நினைத்து அவர்களுக்கு இடையே நுழையக்கூடாது. இது மகன்-மருமகளின் சுதந்திரத்தில் தலையிடுவதுபோல் ஆவதுடன், மாமியார் மீது தவறான எண்ணத்தையும் ஏற்படுத்தும். அவர்களை உங்களிடம் இருந்து விலக்கி வைக்கவும் வழிவகுக்கும்.

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு, எதிர்கால வாழ்க்கையைப் பற்றி பலவிதமான கற்பனைகள் இருக்கும். புதிய இடத்திற்கு செல்வது, புதுப்புது விஷயங்களை தேடுவது என பலவற்றை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவார்கள். இதுகுறித்து, அவர்களை கேள்வி கேட்டு சங்கடப்படுத்துவது, எடுத்ததற்கு எல்லாம் கட்டளையிடுவது என நடந்து கொள்ளாமல் அமைதியாக இருங்கள். அவர்களாகவே, அனைத்து விஷயங்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் வகையிலான சூழலை ஏற்படுத்துங்கள். இது உங்களின் மதிப்பை மருமகளின் முன்பு உயர்த்தும்.

மகன், மருமகள் பற்றி எதிர்மறையான விஷயங்களை மற்றவர்களிடம் பகிரும்போது, அது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும். குறிப்பாக மருமகள் பற்றி பிறரிடம் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும்போது, அது உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

உறவை சுமூகமாக்கும் விஷயங்களில் ஒன்று, குடும்ப உறுப்பினர்களின் நல்ல செயல்களை உடனுக்குடன் பாராட்டுவதாகும். மருமகளின் அலுவலகத்தில் கிடைக்கும் பதவி உயர்வு, பிறந்தநாள், திருமணநாள் என அனைத்து முக்கிய நாட்களிலும், மருமகளை பாராட்டுவதுடன், அவருக்குப் பிடித்த பரிசு பொருட்கள் கொடுப்பது, பிடித்த உணவை சமைத்துக் கொடுப்பது என மருமகளை கொண்டாடுங்கள். இது உங்கள் மீதான பாசத்தையும், அன்யோன்யத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

மேலும் செய்திகள்