மழைக்காலத்தில் துணிகளை உலர்த்தும் வழிகள்
|பருவமழை காலங்களில், வீடு முழுவதும் கயிறு கட்டி துணிகளை உலர்த்துவது என்பது இயலாத விஷயம். சிறிய துணிகள், எளிதில் உலரும் வகையிலான துணிகளை உலர்த்த உதவும் ஸ்டாண்டுகள் தற்போது கிடைக்கின்றன. இவற்றில் போதிய இடைவெளிவிட்டு துணிகளை உலர்த்த முடியும்.
பருவமழை பெய்யும் காலங்களில், நம்முடைய அன்றாட வேலைகளை செய்வதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக, துவைத்த மற்றும் மழையில் நனைந்த துணிகளை உலர்த்துவது சற்றே கடினமான காரியம்தான்.
சரியாக உலராத துணிகளில் இருந்து வரும் துர்நாற்றம், நமக்கு அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்கச் செய்யும். இதைத் தவிர்க்க உதவும் சில வழிகள் இதோ…
துணிகளை உலர்த்தும் முன்பு, அதில் உள்ள தண்ணீர் முழுவதுமாக வடிந்துள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். சலவை இயந்திரத்தில் துணி துவைக்கும்போது, அதிகபட்ச தண்ணீர் வடியும்வரை துணிகளை டிரையரில் போட்டு வைக்க வேண்டும்.
மழைக்காலத்தில், அதிக எடையுள்ள துணிகள், அதிக வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும் துணிகளை துவைப்பதை தவிர்ப்பது நல்லது. எந்த நேரத்தில், எந்த துணியை துவைக்க வேண்டும் என பிரித்துக்கொள்ள வேண்டும். துவைத்த துணிகளை உலர்த்துவதற்கு போதுமான இடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். முதலில், வழக்கமான மற்றும் வெளியிடங்களுக்குச் செல்ல அவசரமாக தேவைப்படும் துணிகளை மட்டுமே துவைக்க வேண்டும். மெல்லிய மற்றும் எடை குறைவான ஆடைகளை முதலில் துவைப்பது நல்லது.
பருவமழை காலங்களில், வீடு முழுவதும் கயிறு கட்டி துணிகளை உலர்த்துவது என்பது இயலாத விஷயம். சிறிய துணிகள், எளிதில் உலரும் வகையிலான துணிகளை உலர்த்த உதவும் ஸ்டாண்டுகள் தற்போது கிடைக்கின்றன. இவற்றில் போதிய இடைவெளிவிட்டு துணிகளை உலர்த்த முடியும்.
வீட்டிற்குள் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம், வீட்டை மட்டுமில்லாமல், அதில் வசிப்பவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். துணி உலர்த்தும் அறைகளில் உள்ள ஈரப்பதத்தின் அளவை கட்டுப்படுத்த 'ஏர் பியூரிபையர் பேக்' பயன்படுத்தலாம். இல்லையென்றால், ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை ஒரு துணியில் சிறு மூட்டை போல கட்டி அதை வீட்டில் வைக்கலாம். அறையில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சும் ஆற்றல் உப்புக்கு உண்டு.
மழைக்காலங்களில் ஓரளவு காய்ந்த துணிகளை, அயர்னிங் மூலம் உலர்த்தலாம். இது துணிகளில் உள்ள ஈரத்தை எளிதில் உலர வைக்கும். ஜீன்ஸ் பேண்ட், ஸ்வெட்டர் போன்ற ஆடைகளை இந்த முறையில் உலர வைக்கலாம்.