< Back
வாழ்க்கை முறை
அச்சுறுத்தும் ஹீமோகுளோபின் குறைபாடு
வாழ்க்கை முறை

அச்சுறுத்தும் ஹீமோகுளோபின் குறைபாடு

தினத்தந்தி
|
17 July 2022 7:00 AM IST

ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கும்போது, இதயம் ஒழுங்கற்று வேகமாக துடிக்க ஆரம்பிக்கும். ஆக்ஸிஜன் அளவு குறைவதால், உறுப்புகளுக்கு கூடுதலாக ரத்தத்தை அனுப்புவதற்காக இதயம் வேகமாக இயங்கும். அந்த வேலைப்பளு காரணமாக, இதயத்துடிப்பு ஒழுங்கற்று இருக்கலாம். மேலும் கடினமான வேலைகளைச் செய்யும்போதும், மாடிப்படிகளில் ஏறும்போதும் மூச்சு வாங்க ஆரம்பிக்கும்.

'ஹீமோகுளோபின்' என்பது ரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமாகும். இதன் மூலம்தான் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுகிறது. ஹீமோகுளோபின் அளவு குறையும்போது ரத்தசோகை நோய் ஏற்படக்கூடும். இதனால் உடல் இயக்கத்துக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் சோர்வாகவும், பலவீனமாகவும் உணர்வீர்கள்.

சிறுமிகள், வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என பெண்களிடையே ஹீமோகுளோபின் குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது. பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் 12.3 கிராம் முதல் 15.3 கிராம் வரை இருப்பது ஆரோக்கியமானது. 12 கிராமுக்கு குறைவாக இருந்தால் அது கவனத்தில் கொள்ளவேண்டியது ஆகும்.

ஹீமோகுளோபின் குறைவதற்கான காரணங்கள்:

எலும்பு மஜ்ஜை போதுமான ரத்த அணுக்களை உற்பத்தி செய்யாத நிலை, இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி12 மற்றும் பி9 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைபாடு ஆகிய காரணங்களால் ஹீமோகுளோபின் அளவு குறையலாம். மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு இருந்தால் இரும்புச்சத்துக் குறைபாடு உண்டாகலாம்.

அறிகுறிகள்:

அதிகப்படியான சோர்வு:

ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தால் சோர்வு அதிகமாக இருக்கும். தினசரி வேலைகளைக்கூட செய்ய முடியாமல் திணறுவீர்கள். எப்போதும் தூங்கி கொண்டே இருப்பீர்கள். ஓய்வு எடுத்தாலும் சோர்வு நீங்காது. நீண்ட நேரம் நிற்க, நடக்க, பொருட்களைத் தூக்க முடியாது.

இதயத்துடிப்பு:

ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கும்போது, இதயம் ஒழுங்கற்று வேகமாக துடிக்க ஆரம்பிக்கும். ஆக்ஸிஜன் அளவு குறைவதால், உறுப்புகளுக்கு கூடுதலாக ரத்தத்தை அனுப்புவதற்காக இதயம் வேகமாக இயங்கும். அந்த வேலைப்பளு காரணமாக, இதயத்துடிப்பு ஒழுங்கற்று இருக்கலாம். மேலும் கடினமான வேலைகளைச் செய்யும்போதும், மாடிப்படிகளில் ஏறும்போதும் மூச்சு வாங்க ஆரம்பிக்கும்.

மூச்சுத்திணறல்

அவ்வபோது மூச்சு விடுவதில் சிரமமாக இருப்பதும் ஹீமோகுளோபின் குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம். படபடப்பு, மயக்கம், தலைச்சுற்றல், நெஞ்சு வலி, தலைவலி போன்ற அறிகுறிகளும் தோன்றலாம்.

சரும மாற்றங்கள்

சருமம் வெளுத்து இருக்கும். சில நேரங்களில் மஞ்சள் நிறமாகவோ, வெள்ளையாகவோ காணப்படும். ரத்த சிவப்பணுக்களில் இரும்புச்சத்து குறையும்போது, இது போன்ற சரும நிற மாற்றங்கள் ஏற்படும்.

அரிப்பு

சிலருக்கு சருமத்தில் அரிப்பு பிரச்சினையும் இருக்கும். கை, கால்களில் அரிப்பு ஏற்படலாம். இது சிறுநீர் கோளாறுகளுக்கான அறிகுறி என்றாலும், ஹீமோகுளோபின் குறைபாட்டுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

மேற்கண்ட இந்த அறிகுறிகள், அதன் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். மருத்துவ சிகிச்சையோடு பேரீச்சம்பழம், மாதுளை, உலர் அத்திப்பழம், உலர் திராட்சை, கீரைகள் குறிப்பாக முருங்கைக்கீரை, மீன், விலங்குகளின் கல்லீரல், சோயா பீன், நெல்லிக்காய் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் ஹீமோ குளோபின் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.

மேலும் செய்திகள்