பெண்களை எளிதில் பாதிக்கும் பக்கவாதம்
|உடலின் ஒரு பகுதியை நகர்த்த முடியாமல் போவது, உடல் பலவீனம், உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் உணர்வின்மை, பேசுவதில் சிரமம், புரிதலில் குழப்பம், பார்வை குறைபாடு, ஞாபக மறதி, திடீர் உணர்வு மாறுபாடு போன்றவை பக்கவாதத்துக்கான அறிகுறிகள்.
பெண்களை எளிதில் மற்றும் அதிக அளவில் பாதிக்கும் நோய்களின் பட்டியலில் இதய நோய்க்கு அடுத்தபடியாக பக்கவாதம் உள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு
களின் மூலம் தெரியவந்துள்ளது.
மூளைக்குள் ரத்தம் உறைவது, ரத்த அடைப்பு, ரத்தம் செல்வது தடைபடுவது போன்ற காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது. இதை 'ஸ்ட்ரோக்' என்றும் குறிப்பிடுவார்கள். மூளை திசுக்களில் உள்ள நரம்பு செல்கள் நினைவாற்றல், உடல் இயக்கம் மற்றும் பேச்சு ஆகிய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும். பக்கவாதம் உண்டாகும்போது இந்த நரம்பு செல்கள் காயமடையும் அல்லது இறக்கும். இத்தகைய நேரங்களில் கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, அசைக்க முடியாத நிலை ஏற்படும்.
காரணங்கள்:
ரத்த ஓட்டத் தடையின் மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு கொழுப்பு படிவுகளும், ரத்தக் கசிவு மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு அதிக ரத்த அழுத்தமும் முக்கிய காரணமாகும். சிலருக்கு மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தற்காலிகமாக தடைபட்டு, உடல் அசைவுகளில் சிறு தடங்கலை மட்டும் ஏற்படுத்தும். இந்த வகையான பக்கவாதம் நீடித்து இருக்காது.
பெண்களுக்கு ரத்தத்தின் அளவு குறைதல், சீரற்ற ரத்த ஓட்டம் போன்ற ரத்தம் சார்ந்த பிரச்சினைகள், இதய நோய், மாதவிடாய் சுழற்சி முற்றிலும் முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை அடைதல், ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைதல் போன்ற சமயங்களில் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது.
அறிகுறிகள்:
உடலின் ஒரு பகுதியை நகர்த்த முடியாமல் போவது, உடல் பலவீனம், உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் உணர்வின்மை, பேசுவதில் சிரமம், புரிதலில் குழப்பம், பார்வை குறைபாடு, ஞாபக மறதி, திடீர் உணர்வு மாறுபாடு போன்றவை பக்கவாதத்துக்கான அறிகுறிகள்.
பக்கவாத அறிகுறிகள் தென்படும்போதே மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம். தென்படும் அறிகுறிகள் மோசமானால், மூளை செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், மூளைக்குச் செல்லும்
ஆக்சிஜன் தடைபட்டு, மூளை செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பிக்கும். இதுவே நாளடைவில் பக்கவாதத்தை உண்டாக்கும்.
புன்னகைக்க முடியாமல் போதல், முகத்தின் ஒரு பக்கம் தொய்வடைதல், இரண்டு கைகளையும் உயர்த்த முடியாமல் போதல், ஒரு கை கீழ்நோக்கி நகர்த்தல் போன்ற அறிகுறிகள் தென்படுதல், பேசும்போது குழம்புதல் மற்றும் பேச முடியாமல் தவித்தல் ஆகிய அறிகுறிகளை கொண்டு பக்கவாதத்தை எளிதாகக் கண்டறியலாம்.
தடுக்கும் முறைகள்:
மனதை எப்போதும் அமைதியாக வைத்துக்கொள்வது, ரத்த அழுத்தத்துக்கான முறையான சிகிச்சை மேற்கொள்வது, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது, உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்
படுத்துவது போன்ற வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் பக்கவாதம் வருவதைத் தடுக்க முடியும்.