குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கும் வழிகள்
|படுக்கையில் சிறுநீர் கழிப்பதால் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதைத் தடுக்காதீர்கள். தண்ணீர் போன்ற திரவங்களைக் குடிப்பதை நிறுத்தி வைப்பது, குழந்தைகளின் உடல் இயக்கத்தைப் பாதிக்கும்.
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கலாம். அதைத் தடுப்பதற்கு பெற்றோரின் ஆதரவு முக்கியம். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைப் பெற்றோர் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும். அதற்கான சில ஆலோசனைகள்:
5 முதல் 6 வயதுள்ள குழந்தைகளிடம்தான் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினை அதிகமாக உள்ளது. பெற்றோர், இதற்காக குழந்தைகளை குறை கூறுவது அல்லது தண்டிப்பதைத் தவிர்த்து, முதலில் அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். குற்றம் சாட்டுவதும், தண்டிப்பதும் பிரச்சினையை மோசமாக்கும்.
நாள் முழுவதும் வீட்டிலும், பள்ளியிலும் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள்? சரியாக தண்ணீர் குடிக்கிறார்களா? போதுமான இடைவெளியில் சிறுநீர் கழிக்கிறார்களா? அவர்கள் படிக்கும் பள்ளியின் சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது? இவற்றுக்கும் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கும் தொடர்பு இருக்கிறதா? என்று ஆராய வேண்டும். சில காரணங்களால் சரியாக சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்கும்போது, உறக்கத்தில் இயல்பாகக் கழிக்க நேரிடலாம்.
படுக்கையில் சிறுநீர் கழிப்பதால் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதைத் தடுக்காதீர்கள். தண்ணீர் போன்ற திரவங்களைக் குடிப்பதை நிறுத்தி வைப்பது, குழந்தைகளின் உடல் இயக்கத்தைப் பாதிக்கும்.
படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்துவது அவர்களுடைய பொறுப்பு என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் அதற்கு உதவுவீர்கள் என்று அவர்களுக்கு உறுதி அளியுங்கள். படுக்கையில் சிறுநீர் கழித்தால், அதை அவர்களையே சுத்தம் செய்யும்படி கூறுங்கள். நீங்கள் அருகில் இருந்து உதவி செய்யுங்கள்.
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டால், அவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது. இது அவர்களை மனரீதியாக பாதிக்கும். குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குழந்தைகளுக்கு திரவ உணவுகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக காபின் கலந்த பானங்கள், சோடா போன்றவற்றை கொடுக்கக் கூடாது.