இ.எம்.ஐ. கார்டு உபயோகிக்கும் இல்லத்தரசிகளின் கவனத்துக்கு…
|மாதத் தவணையில் பொருட்கள் வாங்குவதற்கு முன்பு, அவற்றுக்கான உரிய காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது அவசியமானது. எதிர்காலத்தில் பொருட்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், நிவாரணம் பெறுவதற்கு காப்பீட்டு திட்டம் உதவும்.
இல்லத்தரசிகளின் வேலையை எளிதாக்கி, நேரத்தை மிச்சப்படுத்த உதவுபவை வீட்டு உபயோகப் பொருட்கள். தேவைகளைப் பொறுத்து இவற்றின் விலையும் அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் இவற்றை வாங்குவதை தள்ளிப்போடுவார்கள். ஆனால் இ.எம்.ஐ. எனப்படும் மாதத் தவணை வசதி, பலரும் எளிதாக வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க வழிவகுத்து இருக்கிறது. இதில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் நினைத்த நேரத்தில் பொருட்களை வாங்க உதவுவதுதான் இ.எம்.ஐ. கார்டு.
அவ்வாறு இ.எம்.ஐ. கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில...
பண்டிகைக் காலங்களில் எல்லா நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை வழங்குவார்கள். அவற்றால் ஈர்க்கப்பட்டு, உங்களுக்கு அத்தியாவசியம் இல்லாத பொருட்களையும் இ.எம்.ஐ. கார்டு மூலம் வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். அதுபோன்ற தருணங்களில் கவனமாக இருந்து, தேவையான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.
இ.எம்.ஐ. கார்டு திட்டத்தில் நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தை கவனத்தில் கொள்வது முக்கியமானதாகும்.
உங்கள் 'கிரெடிட் ஸ்கோர்' நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், இது இ.எம்.ஐ. கார்டுக்கான மதிப்பு மற்றும் உங்களுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இ.எம்.ஐ. கார்டு மூலம் வாங்கிய பொருட்களுக்கு அதிகமான அபராதத் தொகை விதிக்காமல், முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கான வசதி உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
அதிக முன்பணம் செலுத்தினால் கடன் தொகை மற்றும் இ.எம்.ஐ. கட்டணம் குறையும். எனவே உங்களால் எவ்வளவு முன்பணம் செலுத்த முடியும் என்பதை முதலில் தீர்மானியுங்கள். அதன் பின்பு, அதற்கு ஏற்றவகையில் இ.எம்.ஐ. கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதே நல்லது.
உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப கடனை திருப்பி செலுத்தும் தவணை காலத்தை தீர்மானியுங்கள். நீண்ட கால தவணை அவகாசம் காலப்போக்கில் வட்டி விகிதத்தை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பை உண்டாக்கும். அதன் மூலம் உங்கள் பணம் விரயமாகும்.
பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் இ.எம்.ஐ. சலுகைகளை ஒப்பிட்டு பார்த்து சிறந்ததை மட்டும் தேர்வு செய்யுங்கள்.
மாதத் தவணையில் பொருட்கள் வாங்குவதற்கு முன்பு, அவற்றுக்கான உரிய காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது அவசியமானது. எதிர்காலத்தில் பொருட்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், நிவாரணம் பெறுவதற்கு காப்பீட்டு திட்டம் உதவும்.
சில இ.எம்.ஐ. கார்டு திட்டங்களில் 'ஹிட்டன் காஸ்ட்' எனும் மறைமுகமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். எனவே அவற்றை கவனமுடன் தெரிந்துகொண்டு பொருட்களை வாங்குவது நல்லது.
பெரும்பாலான நிறுவனங்களில் வட்டி விகிதத்தை தவிர 'பிராசசிங் சார்ஜ்' எனும் செயலாக்க கட்டணமும் நிர்ணயிக்கப்படும். இது வங்கி மற்றும் பண பரிவர்த்தனையைப் பொறுத்து ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வேறுபடும். எனவே நிறுவனங்கள் நிர்ணயிக்கும் தொகையை ஒப்பிட்டு பார்த்த பிறகே தேர்வு செய்ய வேண்டும்.
பல்வேறு பொருட்களுக்கு அறிவிக்கப்படும் சலுகைகள், இ.எம்.ஐ. திட்டங்களின் மூலம் அவற்றை வாங்கும்போது வழங்கப்படுவது இல்லை. உதாரணமாக இ.எம்.ஐ. திட்டங்களின் மூலம் வாங்கும் டி.வி.யின் விலை, நேரடியாக சலுகை மூலம் வாங்கும் டி.வி.யின் விலையை விட அதிகமாக இருக்கக்கூடும். எனவே இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.