< Back
வாழ்க்கை முறை
குழந்தை வயிற்று வலியால் அழுகிறதா?
வாழ்க்கை முறை

குழந்தை வயிற்று வலியால் அழுகிறதா?

தினத்தந்தி
|
18 Sept 2022 7:00 AM IST

குழந்தைகள் பால் குடித்த உடனே அதை துப்புகிறார்களா, வாந்தி எடுக்கிறார்களா அல்லது பால் குடிக்க மறுக்கிறார்களா என்பதையும் கண்காணியுங்கள்.

ன்றைய சூழ்நிலையில் பெரியவர்களின் துணை இல்லாமல், குழந்தையைத் தனியாக பராமரிக்கும் நிலை பல இளம் தாய்மார்களுக்கு உள்ளது. குழந்தை திடீரெனெ அழும்போது, அதற்கு காரணம் என்ன? என்று தெரியாமல் திணறுபவர்கள் இதில் அதிகம்.

குழந்தையின் அழுகைக்கு பசி, அசவுகரியம், வயிற்று வலி போன்ற பல காரணம் இருக்கும். இதில் வயிற்று வலி முதன்மையானது. குழந்தைகளின் அழுகை வயிற்று வலியால்தான் என்பதை, சில அறிகுறிகள் மூலம் கணித்துவிட முடியும். அது என்ன என்பதை பார்க்கலாம்.

குழந்தையின் அழுகை, வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். ஏனெனில், சில நேரங்களில் அழுதாலும் பசியாறிய பிறகு அமைதியாகிவிடுவார்கள். அதனால் அழுகையின் காலத்தைக் கவனியுங்கள்.

குழந்தைகள் பால் குடித்த உடனே அதை துப்புகிறார்களா, வாந்தி எடுக்கிறார்களா அல்லது பால் குடிக்க மறுக்கிறார்களா என்பதையும் கண்காணியுங்கள்.

வழக்கத்துக்கு மாறான வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் உள்ளதா? என்பதையும் பார்க்க வேண்டும். சில நேரங்களில் குழந்தைகள் மலம் கழிக்கும்போது முகத்தை சுளித்து அழுவார்கள். தசைகளை இறுக்குவார்கள். அசையாமல் இருப்பார்கள். இவையெல்லாம் குழந்தைக்கு வயிற்று வலி இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறியாக இருக்கலாம்.

குழந்தையின் வயிற்றை உங்கள் கைகளால் தொட்டுப் பாருங்கள். வயிறு பூப்போன்று 'மெத்'தென்று இருந்தால், வயிறு வலி பிரச்சினை இல்லை என்று சொல்லலாம். வயிறு கடினமாகச் சற்று அழுத்தமாக இருந்தால், அது வயிற்று வலியாக இருக்கலாம்.

சில நேரங்களில் மலம் கழித்தவுடன் வயிறு இயல்பாக மாறிவிடும். ஆனால், சில சமயங்களில் மலம் கழித்தாலும் குழந்தையின் வயிறு கனமாக, அழுத்தும்போது கடினமாக இருக்கும். இதுவும் வயிற்று வலியின் அறிகுறியாக இருக்கலாம்.

குழந்தையின் வயிறு பெருத்து இருந்தால், வயிற்றில் வாயு அதிகரித்திருக்கலாம். வாயு பிரச்சினை ஏற்பட்டாலும், அது வயிற்று வலியை உண்டாக்கலாம். மலச்சிக்கலும் குழந்தையின் வயிற்று வலிக்கு காரணமாக இருக்கலாம். குழந்தை, பிறந்த சில வாரங்கள் வரை ஒரு நாளுக்கு 12 முறை வரை மலம் கழிக்கலாம். ஆனால், முதல் சிலவாரங்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறையும். பிறகு திடப்பொருட்கள் சாப்பிட ஆரம்பிக்கும்போது தான் மலம் கழிப்பது அதிகரிக்கும். அதனால், குழந்தை மலம் கழிக்கும் முறைகளைக் கண்காணிப்பதன் மூலம், வயிறு வலிக்கு மலச்சிக்கல் காரணமா என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

பவுடர் பால் தரும்போது, சில நேரங்களில் அதை ஏற்றுக்கொள்ளாமல் குழந்தைகள் வயிற்றுக் கோளாறுகளை எதிர்கொள்ளலாம்.

இணை உணவு கொடுக்கும் போது, அவையும் வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும். அவ்வாறு இருந்தால் வாந்தி போன்ற அறிகுறிகளும் இருக்கலாம். இத்தகைய அறிகுறிகள் இருந்தாலே வயிறு வலி என்பதை உணர்ந்துவிடலாம். தொடர்ந்து குழந்தை அழுது கொண்டே இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

மேலும் செய்திகள்