குடும்பச் சண்டையை பிள்ளைகள் எவ்வாறு கையாளலாம்?
|உங்கள் பெற்றோரின் சண்டைகளுக்கு நீங்கள் பொறுப்பல்ல என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்கு இடையேயான கருத்துவேறுபாடுகளை சரி செய்வது உங்கள் வேலை அல்ல. பெற்றோர் சண்டையிடுவதைப் பார்க்கும்போது உங்களுக்கு வருத்தம், கோபம், பதற்றம், எரிச்சல் போன்ற உணர்வுகள் மேலோங்கும். அதனால் முடிந்தவரை, வேறொரு அறைக்கு அல்லது நீங்கள் பாதுகாப்பாக உணரும் இடத்திற்குச் செல்லுதல் நல்லது.
பெற்றோர், வீட்டில் எப்பொழுதும் சண்டையிட்டுக்கொண்டே இருப்பது பிள்ளைகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கும். தினமும் ஒருவரை ஒருவர் தாழ்த்தி, சண்டையிடுவதைக் கேட்பதும், பார்ப்பதும் கடினமானதாகும். சில சூழ்நிலைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்றாலும், அதை சமாளிப்பதற்கு சில செயல்களை மேற்கொள்ளலாம்.
எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள்:
உங்கள் பெற்றோரின் சண்டைகளுக்கு நீங்கள் பொறுப்பல்ல என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்கு இடையேயான கருத்துவேறுபாடுகளை சரி செய்வது உங்கள் வேலை அல்ல. பெற்றோர் சண்டையிடுவதைப் பார்க்கும்போது உங்களுக்கு வருத்தம், கோபம், பதற்றம், எரிச்சல் போன்ற உணர்வுகள் மேலோங்கும். அதனால் முடிந்தவரை, வேறொரு அறைக்கு அல்லது நீங்கள் பாதுகாப்பாக உணரும் இடத்திற்குச் செல்லுதல் நல்லது.
வெளியில் செல்லுங்கள்:
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடு, பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று உங்கள் கவனத்தை திசைத்திருப்ப முயற்சி செய்யுங்கள். உங்கள் மனதை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்துங்கள்.
தவிர்க்க முயலுங்கள்:
பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது நீங்கள் வெளியில் செல்வதற்கான வாய்ப்புகள் இல்லையெனில், வீட்டுக்குள் தனி இடத்தில் இருக்கலாம். அந்த நேரத்தில் அவர்களின் பேச்சுக்களை கவனிப்பதை தவிருங்கள். இது போன்ற தருணங்களில், ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு இசையைக் கேட்பது சிறந்த வழியாகும்.
கவலைப்படாதீர்கள்:
பெற்றோருக்கு இடையே வாக்குவாதம் நடைபெறும்போது, அவர்களுள் கைகலப்பு வந்துவிடுமோ, ஒருவரை விட்டு மற்றொருவர் பிரிந்துவிடுவார்களோ என்று தேவையில்லாமல் கவலை கொள்ளாதீர்கள். குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட பெற்றோர், ஒருபோதும் அதுமாதிரியான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
நடுநிலையாக இருங்கள்:
உங்கள் பெற்றோருக்கு இடையே வாக்குவாதம் நடக்கும்போது, ஒருவருக்கு மட்டும் ஆதரவாக செயல்படுவதை தவிருங்கள். அவர்களின் வாதங்களில் நீங்கள் தலையிடாமல் நடுநிலையாக இருப்பதே நல்லது.
மனம் விட்டு பேசுங்கள்:
வாக்குவாதம் முடிந்து உங்கள் பெற்றோர் இயல்பு நிலைக்கு வந்தவுடன், இருவரிடமும் மனம் திறந்து பேசுங்கள். அவர்களது வாக்குவாதம் உங்களை மனதளவில் எவ்வாறு பாதிக்கிறது? நீங்கள் எப்படி பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறீர்கள்? என்பதை அமைதியாகவும், உறுதியாகவும் அவர்களுக்கு தெரிவியுங்கள். அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு உங்களை கடிந்துகொண்டாலும், அந்த நேரத்தில் நிதானத்தை தவற விடாமல் நடந்துகொள்ளுங்கள்.
ஆலோசகரை அணுகுங்கள்:
உங்கள் பெற்றோருக்கு இடையே நடைபெறும் சண்டை, உங்களை அதிகமாக பாதிக்கிறது என்றால், இதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் பேசுங்கள். உங்கள் உறவினர், மனநல ஆலோசகர், குடும்ப நண்பர்கள் என யாராவது ஒருவரை அணுகுங்கள். அவர்கள் வாழ்வில் இத்தகைய சூழ்நிலைகளை கடந்து வந்தவர்கள் என்பதால், உங்களுக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்குவார்கள்.