< Back
வாழ்க்கை முறை
நேரத்தை மிச்சப்படுத்தும் வீட்டு பராமரிப்பு சேவைகள்
வாழ்க்கை முறை

நேரத்தை மிச்சப்படுத்தும் வீட்டு பராமரிப்பு சேவைகள்

தினத்தந்தி
|
12 March 2023 7:00 AM IST

வாடிக்கையாளரின் தேவைகளைப் புரிந்து கொண்டு, சரியான முறையில் பேசி கவர்வது முக்கியம். தகுந்த பணியாளர்களை நியமித்து வேலைகளைக் கச்சிதமாக முடித்துக் கொடுக்க வேண்டியது அவசியம்.

ன்றைய பெண்கள் குடும்பத்தைக் கவனிப்பதோடு மட்டுமில்லாமல், அலுவலக வேலை, தொழில் என்று தங்களுக்கான அடையாளத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதில் வீட்டை சுத்தப்படுத்துவது, வீட்டு உபயோகப் பொருட்களை அவ்வப்போது பராமரிப்பது போன்ற வேலைகளை செய்வதற்கு, பலருக்கு போதுமான நேரம் கிடைப்பது இல்லை.

'வீடு' என்பது நம் ஆளுமையின் அடையாளம். லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வீட்டைக் கட்டுபவர்கள், அதைப் பராமரிக்க சில ஆயிரங்களை செலவழிக்கத் தயங்குவது இல்லை. சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள பெண்கள் இதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டைச் சுத்தம் செய்வது, ஒழுங்குபடுத்துவது, மாதாந்திர பில்களைக் கட்டுவது போன்ற பலவிதமான பராமரிப்புப் பணிகளை நீங்கள் செய்து தரலாம். அதற்குரிய கட்டணத்தை வசூலிக்கலாம்.

சில நிறுவனங்கள் இதுபோன்ற சேவைகளை வழங்குகின்றன. இருந்தாலும், வீட்டுக்குள் அறிமுகம் இல்லாதவர்களை அனுமதிக்க பலர் தயக்கம் காட்டுவார்கள். இதுவே, உங்கள் பகுதியில் நீங்கள் அனைவருக்கும் தெரிந்தவராக இருந்தால், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையோடு உங்களை அணுகுவார்கள்.

நீங்கள் மட்டும் தனியாக ஈடுபடாமல், உங்கள் தோழிகளுடன் சேர்ந்து இதை சுயதொழிலாக செய்யலாம். இதில் வாடிக்கையாளரின் தேவைகளைப் பொறுத்து, நீங்கள் வழங்கும் சேவைகளை வகைப்படுத்திக்கொள்ளலாம். வீட்டை ஒழுங்குபடுத்துதல், பழுதுபார்த்தல், பிற வேலைகள் என்று பிரித்து செயல்படலாம்.

இதற்கென தனியாக முதலீடு, அலுவலகம் போன்றவை தேவை இல்லை. உங்களுடைய பேச்சுத் திறனும், நேர்மையும் தான் மூலதனம். வாடிக்கையாளரின் தேவைகளைப் புரிந்து கொண்டு, சரியான முறையில் பேசி கவர்வது முக்கியம். தகுந்த பணியாளர்களை நியமித்து வேலைகளைக் கச்சிதமாக முடித்துக் கொடுக்க வேண்டியது அவசியம்.

நீங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, நண்பர்கள் என நெருங்கிய வட்டத்தில், முதலில் உங்கள் நிறுவனத்தின் சேவைகளைப் பற்றிய விவரக்குறிப்புகளை விநியோகம் செய்யுங்கள். நாளடைவில் உங்கள் வேலையில் திருப்தி அடைந்த வாடிக்கையாளர்களே, தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உங்கள் நிறுவனத்தை பரிந்துரை செய்வார்கள். நிறுவனம் அடுத்த கட்டம் நோக்கி வளர்ச்சி அடையும்போது முகநூல், இன்ஸ்டாகிராம், கிளப் ஹவுஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் நிறுவனத்திற்கென தனிப் பக்கங்கள் தொடங்கிப் பகிருங்கள்.

உங்கள் பகுதியில் இருக்கும் நம்பிக்கையான பிளம்பர்கள் மற்றும் பிற சேவைகள் வழங்கும் நபர்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம். திறமையுள்ள ஒழுக்கமான நபர்கள், நியாயமான கட்டணம், நேர்த்தியான வேலை என்பதைக் கொள்கையாகக் கொண்டு செயலாற்றினால் வெற்றி நிச்சயம்.

மேலும் செய்திகள்