< Back
வாழ்க்கை முறை
திருமணத்தை புனிதமாக்கும் மஞ்சள் பூசும் சடங்கு
வாழ்க்கை முறை

திருமணத்தை புனிதமாக்கும் 'மஞ்சள் பூசும் சடங்கு'

தினத்தந்தி
|
11 Jun 2023 7:00 AM IST

திருமணத்தின்போது மணமக்களின் மீது கண்திருஷ்டி ஏற்படும். இந்த எதிர்மறை ஆற்றலால் அவர்களுடைய வாழ்வில் தீமை ஏற்படாமல் தடுப்பதற்காக ‘ஹல்தி’ சடங்கை நடத்துகிறார்கள்.

ந்தியாவில் நடைபெறும் பாரம்பரிய திருமணங்களில் பலவிதமான சடங்குகள், கொண்டாட்டங்கள் இடம்பெறும். ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கும் மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவாறு, இவற்றில் சில வித்தியாசங்கள் காணப்படும். அதேசமயம் ஒரு சில சடங்குகள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் 'மஞ்சள் பூசும் சடங்கு'. இந்தியா முழுவதும் இது பரவலாக பின்பற்றப்பட்டாலும், வட மாநிலங்களில் 'ஹல்தி' என்ற பெயரில் இந்த சடங்கை கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

'ஹல்தி' சடங்கு நடத்தப்படுவதற்கு பின்னணியில் இருக்கும், ஆன்மிக மற்றும் அறிவியல் காரணங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

ஹல்தி சடங்கு, திருமணத்திற்கு முந்தைய நாளோ அல்லது அவரவர் சவுகரியப்படி 3 நாட்களுக்கு முன்போ நடத்தப்படும். இந்த சடங்கின்போது மஞ்சள், சந்தனம், பால், ரோஜா பன்னீர் இவை அனைத்தும் கலந்த கலவையை மணமக்களின் முகம், கை, கால்களில் உறவினர்கள் பூசுவார்கள். அதன் பின்பு, மணமக்களின் மீது மஞ்சள் கலந்த தண்ணீரை ஊற்றுவார்கள். 'மெஹந்தி' எனப்படும் 'மருதாணி இடப்படும் சடங்கு' முடிந்த பின்பு 'மஞ்சள் பூசும் சடங்கு' நடத்தப்படும்.

திருமணத்தின்போது மணமக்களின் மீது கண்திருஷ்டி ஏற்படும். இந்த எதிர்மறை ஆற்றலால் அவர்களுடைய வாழ்வில் தீமை ஏற்படாமல் தடுப்பதற்காக 'ஹல்தி' சடங்கை நடத்துகிறார்கள். இந்த சடங்கு முடிந்ததில் இருந்து திருமணம் நடக்கும் வரை மணமக்கள் அவரவர் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.

'மஞ்சள் நிறம்' என்பது இந்திய கலாசாரத்தில் மங்கலகரமானதாக கருதப்படுகிறது. இது புதுமண வாழ்க்கையை இணைந்து தொடங்கும் தம்பதியினருக்கு செழிப்பைத் தரும் என்பது நம்பிக்கை. அதனால்தான், பல கலாசாரங்களில் திருமணத்தன்று மணமக்கள் மஞ்சள் நிற ஆடை அணிகின்றனர்.

மஞ்சள் பூசுவது என்பது மணமக்களுக்கு மட்டுமின்றி, அவர்களுடன் இருப்பவர்களுக்கும் பல நன்மைகளைத் தரும் என்பது நம்பிக்கை. 'ஹல்தி' சடங்கின்போது மணமக்களுக்கு பூசப்படும் மஞ்சள் கலவையை, அவர்களின் திருமணமாகாத நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பூசுவார்கள். இதனால் அவர்களுக்கும் விரைவில் நல்ல துணை கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும் செய்திகள்